5 லட்சம் புக்கிங்... டெலிவரி தாமதம்... - 'சிப்' பற்றாக்குறையால் திணறும் கார் நிறுவனங்கள்!

5 லட்சம் புக்கிங்... டெலிவரி தாமதம்... - 'சிப்' பற்றாக்குறையால் திணறும் கார் நிறுவனங்கள்!
5 லட்சம் புக்கிங்... டெலிவரி தாமதம்... - 'சிப்' பற்றாக்குறையால் திணறும் கார் நிறுவனங்கள்!

விழாக் காலம் நெருங்கி வரும் சூழலில் 'சிப்' (Chip) பற்றாக்குறை சில துறைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், கன்ஸ்யூமர் டியூரபிள் உள்ளிட்ட துறைகளில் கடும் தாக்கத்தைக் காணமுடிகிறது. குறிப்பாக, ஆட்டோமொபைல் துறையில் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு டெலிவரிக்காக காத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கு மேல் அதிகரித்திருக்கிறது. 'புக்கிங் அதிகமாக இருப்பது என்பதால் தேவை உயர்ந்திருக்கிறது என எடுத்துக்கொள்ளக் கூடாது. சிப் பற்றாக்குறையால் சரியான நேரத்தில் தயாரிக்க முடியவில்லை' என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

தேவைக்கு ஏற்ப தயாரித்தைப் போக, மூலப்பொருட்கள் எந்த மாடலுக்கு இருகிறதோ அதற்கு ஏற்ப தயாரிப்பை தொடங்கி இருப்பதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதியில் 2 லட்சத்துக்கு மேல் கார்களை டெலிவரி செய்ய வேண்டியிருக்கிறது என 'பிஸினஸ் ஸ்டாண்டர்ட்' தெரிவித்திருக்கிறது. மேலும், ஹூண்டாயில் ஒரு லட்சத்துக்கும் மேலான வாகனங்கள் காத்திருக்கின்றன, இது தவிர மற்ற பல நிறுவனங்களிலும் டெலிவரிக்காக காத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை உயரந்திருக்கிறது. ஒவ்வொரு மாடலுக்காவும் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் அதிகபட்சம் 7 மாதங்கள் வரை காத்திருக்கும் காலம் அதிகரித்திருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டில் மட்டும் சிப் பற்றாக்குறையால் சுமார் 3 லட்சம் கார் விற்பனை குறையும் என கிரிசில் தெரிவித்திருக்கிறது. டாடா மோட்டார், பென்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, எம்ஜி என பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த சிக்கலில் உள்ளன.

ஆப்பிள் போன்களின் காத்திருக்கும் காலம் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது. தவிர டிவி, எலெக்ட்ரானிக்ஸ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட பலவற்றின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக சிப்களை நம்பி இருக்கும் அனைத்து பிரிவும் சிக்கலில் இருக்கிறது.

வழக்கமாக தசராவில் இருந்து பொங்கல் வரை இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் விழாக் காலம். இந்தக் காலத்தை அடிப்படையாக கொண்டே பெரும்பாலான நுகர்வோர் நிறுவனங்கள் தங்களின் ஆண்டு விற்பனையை நிர்ணயம் செய்யும். இதற்கு ஏற்ப முன்கூட்டியே கூடுதல் தயாரிப்புகள் செய்யப்படும். தயாரிப்பது மட்டுமல்லாமல் உடனடி டெலிவரிக்கு வசதியாக டீலர்களில் இருப்பு வைக்கப்படும். ஆனால், தற்போது வழக்கமாக இருப்பதை விட குறைந்த அளவிலே வாகனங்கள் ஸ்டாக் உள்ளன.

ஆட்டோமொபைல் டீலர்களின் கூற்றுப்படி வேகமாக விற்பனையாகும் மாடல்களின் காத்திருப்பு காலம் அதிகமாக இருக்கிறது. அதனால் அதிகம் விற்பனையாகாத மாடல்கள் மட்டுமே சந்தையில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

சிப் பற்றாக்குறை அடுத்த ஆண்டு முழுவதும் இருக்கக் கூடும் என இந்தத் துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். வாகனங்களில் வசதி உயரும்போது சிப்-பின் தேவையும் உயர்கிறது. சமீபத்திய சில ஆண்டுகளில் வாகனங்களில் சேர்க்கப்படும் புதிய வசதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் சிப் தேவையும் அபரிமிதமாக அதிகரித்துள்ளது.

காத்திருக்கும் காலம் அதிகமாக இருப்பதால் ஒரு வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது மூன்று விதமான பிராண்ட்களை முன்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதனால், தேவை செயற்கையாக அதிகரிப்பது போலவும் தோன்றலாம் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொரோனா சிக்கல் முழுமையாக முடிவதற்குள் ஆட்டோமொபைல் துறை சிப் பற்றாக்குறையில் சிக்கியிருப்பதை கவனிக்க முடிகிறது.

'சிப்' பற்றாக்குறை ஏன்? - ஆட்டோமொபைல் துறைகளில் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயர ரக மாடல்களில் எலெக்ட்ரானிக்ஸ் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதுதவிர, கொரோனா காரணமாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்து வருவதால் 'சிப்' தேவை உயர்ந்திருக்கிறது. தேவை உயர்ந்திருக்கும் அதே சூழலில், உற்பத்தியோ மிகவும் சரிந்திருக்கிறது. சிப் தயாரிப்பதற்கு அதிக நீர் தேவை. சிப் தயாரிப்பில் முக்கிய நாடான தைவானில் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால், சிப் பற்றாக்குறை ஆட்டோமொபைல் துறையை மட்டுமல்லாமல் எலெக்ட்ரானிக்ஸ் துறையையும் வெகுவாக பாதித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com