
ஃபேஸ்புக் குழும செயலிகள் முடங்கிய நேரத்தில், டெலிகிராமில் 7 கோடி புதிய பயனாளர்கள் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு 6 மணி நேரத்துக்கும் மேலாக ஃபேஸ்புக், வாட்ஸ் - அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியிருந்தன. இதனால் ஃபேஸ்புக் குழும நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பர்க்கின் சொத்து மதிப்பு 52 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்ததுடன் அவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.
இதற்கிடையில் ஃபேஸ்புக் குழுமத்தின் முடக்கத்தால் அந்த நேரத்தில் ட்விட்டர், டெலிகிராம் போன்ற செயலிகள் அதிகமாக உபயோகிக்கப்பட்டன. குறிப்பாக டெலிகிராம் நிறுவனம், அந்த 6 மணி நேர இடைவேளையில் 7 கோடி புதிய பயனாளர்களை பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள டெலிகிராம் நிறுவனர் பாவல் துரோவ், “இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநேரத்தில் அளவுக்கதிகமான புதிய பயனாளிகள் அந்த நேரத்தில் எங்களுக்கு உருவாகினர். மட்டுமன்றி பழைய பயனாளர்களும் இந்த நேரத்தில் மிக அதிக நேரம் எங்கள் செயலியை பயன்படுத்தினர். திடீரென நடந்த இந்த அதீத அதிகரிப்பை, எங்கள் ஊழியர்கள் மிகச்சிறப்பாக கையாண்டனர். ஒரே நேரத்தில் பலரும் செயலிக்குள் நுழைந்ததால், அமெரிக்காவில் மட்டும் ஒரு சில இடங்களில் டெலிகிராம் மெதுவாக செயல்பட்டதாக புகார் வந்தது. மற்றபடி எவ்வித குறையுமின்றி மிகச்சிறப்பாக எங்கள் செயலி செயல்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் ஊழியர்களை நினைத்து எனக்கு பெருமையாக உள்ளது” எனக்கூறியுள்ளார்.