[X] Close

சத்தீஸ்கர் காங்கிரஸில் சலசலப்பு: 35 எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்

இந்தியா

Following-in-the-footsteps-of-Punjab-the-Chhattisgarh-State-Congress-Party-is-also-in-turmoil
பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.
 
ராஜஸ்தான், பஞ்சாப், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி பெரும் சலசலப்பு கண்டுள்ள நிலையில் சட்டீஸ்கரிலும் குழப்பங்கள் தலை தூக்கியுள்ளன. முதலமைச்சர் புபேஷ் பகெல் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அப்பதவி தனக்கு தரப்பட வேண்டும் எனக்கூறி அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான டிஎஸ் சிங்தியோ கட்சித் தலைமைக்கு நிர்ப்பந்தங்கள் தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வென்ற நிலையில் புபேஷ் பகெலை முதல்வர் பதவிக்கு கட்சித்தலைமை தேர்வு செய்தது. ஆனால் பகெல் இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே முதல்வராக இருப்பார் என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் தனக்கு வாய்ப்பு தரப்படும் என்று கட்சித் தலைமை அப்போது உறுதியளித்ததாகவும் சிங்தியோ தரப்பு கூறி வருகிறது. பரபரப்பான இச்சூழலில் முதலமைச்சர் பகெலின் ஆதரவு எம்எல்ஏக்கள் 35 பேர் டெல்லி விரைந்துள்ளனர். மாநிலத்தில் தனக்குள்ள ஆதரவை கட்சித் தலைமைக்கு காட்டவே எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சர் பகெல் டெல்லி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
 
image
இதனால் பஞ்சாப்பை போல சட்டீஸ்கரிலும் முதல்வர் மாற்றம் நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் பஞ்சாப் வழியில் சட்டீஸ்கர் செல்லவில்லை என முதல்வர் பகெல் திட்டவட்டமாக கூறியுள்ளார். சட்டீஸ்கர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம் இட்டுள்ளதில் அரசியல் நோக்கம் எதுவுமில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையில் அடுத்தாண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான பணிகளை கண்காணிக்கும் பொறுப்பை புபேஷ் பகெலுக்கு காங்கிரஸ் தலைமை தந்துள்ளது. முதல்வர் பதவியிலிருந்து அகற்றுவதற்காக புபேஷ் பகலுக்கு இப்பதவி தரப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close