Published : 15,Aug 2017 04:47 AM

முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றினார் முதல்வர் பழனிசாமி

Independence-Day-2017--Full-text-of-CM-Edappaadi-pazanisamy-speech

சென்னை கோட்டை கொத்தளத்தில் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

சுதந்திர தின விழாவில் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய முதலமைச்சர், தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்வதாகக் குறிப்பிட்டார். தடைகளை மீறி தமிழக அரசு மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.

அதன் பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகம் பல துறைகளில் முன்னேறி, இந்தியாவுக்கு முன்னோடி மாநிலமாக உள்ளதாக கூறினார். சுதந்திர போராட்டத்தில் உயர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம் என்று கூறிய அவர், தியாகிகளின் ஓய்வூதியம் 12 ஆயிரம் ரூபாயில் இருந்து 13 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 6 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் அப்துல் கலாம் விருது, கல்பனா சாவ்லா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். மஞ்சள் காமாலையை குணமாக்கும் வைரோஹெப் என்ற மருந்தை கண்டுபிடித்த பேராசிரியர் ச.ப.தியாகராஜனுக்கு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. இவர் 8 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளை பெற்றுள்ளதுடன் 345 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சோல் ஃப்ரீ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் பிரித்திக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை முதல்வர் வழங்கினார். தமிழகத்தில் கல்லீரலியல் சிகிச்சை வசதிகளை மேம்படுத்திய மருத்துவர் கே.நாராயணசாமி, மரம், செடி வளர்ப்பில் தண்ணீர் சிக்கன முறையை கண்டறிந்து வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கொ.சத்யகோபால் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவையாற்றிய கண் மருத்துவர் வீ.ம.சங்கரன், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதையடுத்து வீடுகளில் மீதமான உணவை ஏழை எளியோருக்கு வழங்கும் சேவையை வழங்கி வரும் கோவையை சேர்ந்த ஆ.கே.பத்மநாபனுக்கும், பெண்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் விருதுநகரை சேர்ந்த உமயலிங்கம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ முகாம்களில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்றதற்காக ஸ்ரீபதி ஆகியோருக்கு மாநில இளைஞர் விருதுகளை வழங்கி பழனிசாமி கவுரவித்தார். மேலும் வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கான விருது, சிறந்த விவசாயிகளுக்கான விருது உட்பட, பல்வேறு விருதுகளையும் முதலமைச்சர் வழங்கினார். விழாவை ஒட்டி, கோட்டையை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோட்டை வளாகம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்