Published : 28,Sep 2021 04:00 PM
"வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி"- வானிலை மையம்

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக, நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுதினம் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, கடலோர மாவட்டங்கள், அதையொட்டிய உள் மாவட்டங்களில் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 13 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனிடையே, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், கேரளா, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.