[X] Close

ஐபிஎல்லில் சொதப்பும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள்

சிறப்புக் களம்

Players-who-showing-poor-form-in-the-Current-IPL-2021-are-selected-in-the-Indian-Squad-for-T20-Cricket-World-Cup-in-UAE

நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது. ஐபிஎல் முடிந்த இரண்டே நாட்களில் அமீரகத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை ஆரம்பமாகிறது. இந்தியா அக்டோபர் 24-ஆம் தேதியன்று பாகிஸ்தானுக்கு எதிராக முதல் லீக் ஆட்டத்தில் விளையாடுகிறது. 


Advertisement

image

உலகக் கோப்பைக்கான இந்திய அணியை செப்டம்பர் மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது இந்திய கிரிக்கெட் வாரியம். 15 வீரர்கள் இடம் பெற்ற அணியில் கூடுதலாக மூன்று வீரர்கள் ரிசர்வ் பிளேயர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களில் சிலர் நடப்பு ஐபிஎல் சீசனில் சொதப்பி வருவது இந்தியாவுக்கு உலகக் கோப்பையில் சிக்கலை கொடுக்குமா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது. 


Advertisement

image

டி20 உலகக் கோப்பை - இந்திய அணி விவரம்... 

விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி. 


Advertisement

இவர்களை தவிர ஷ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் என மூவரும் ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர் மாதிரியான வீரர்கள் நடப்பு ஐபிஎல்லில் சொதப்பி வருகின்றனர். ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட் உலகில் தங்களை அறிமுகம் செய்து கொண்ட இவர்கள் தற்போது அதே ஐபிஎல் ஆட்டங்களில் சொதப்பி வருவது சோதனையாக அமைந்துள்ளது. 

image

சூர்யகுமார் யாதவ்!

2018, 2019 மற்றும் 2020 சீசனில் 400 ரன்களுக்கு மேல் பதிவு செய்தவர் சூர்யயாதவ். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் நடப்பு சீசனில் 10 ஆட்டங்களில் விளையாடி 189 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். முதல் பாதியில் கொல்கத்தாவுக்கு எதிராக 56 ரன்களை எடுத்திருந்தார் அவர். 3, 3, 5, 8 என கடந்த நான்கு போட்டிகளாக ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி உள்ளார். அதில் மூன்று போட்டிகள் இரண்டாவது பாதி ஆட்டங்களில் விளையாடியவை. இவரது மோசமான பார்ம் தொடர்ந்தால் இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையில் பெரிய அளவில் சிக்கலை கொடுக்கும். 

image

இஷான் கிஷன்!

இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 107 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அமீரகத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது பாதி ஆட்டங்களில் மூன்று இன்னிங்ஸ் விளையாடியுள்ள அவர் 11, 14 மற்றும் 9 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அவரது பார்ம் குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித், “அவர் திறமைமிக்க வீரர். கடந்த சீசனில் இதே அமீரக ஆடுகளங்களில் சிறப்பாக விளையாடியவர் அவர். அதிக அழுத்தத்தை அவர் மீது கொடுக்க விரும்பவில்லை. சர்வதேச கிரிக்கெட்டுக்குள் இப்போது தான் அடியெடுத்து வைத்துள்ளவர் அவர்” என சொல்லி இருந்தார். 

கடந்த சீசனில் 14 ஆட்டங்களில் விளையாடி 516 ரன்களை எடுத்திருந்தார். இந்தியாவுக்காக தனது அறிமுக டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அரை சதம் பதிவு செய்து அமர்க்களமான என்ட்ரி கொடுத்தவர் இஷான் கிஷன். 

image

ஹர்திக் பாண்ட்யா!

வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் பலம் வாய்ந்த வீரர்களில் ஒருவர். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் அவர் இந்திய அணிக்காக கடந்த ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக விளையாடி இருந்தார். நடப்பு சீசனில் மும்பை அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடிய அவர் 55 ரன்களை மட்டும் தான் எடுத்துள்ளார். இதுவரை இந்த சீசனில் அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. கடந்த சீசனிலும் அவர் பந்து வீசவில்லை. அவரது ஃபிட்னெஸ் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அமீரகத்தில் மும்பை விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். 

image

ராகுல் சாஹர்!

மும்பை அணிக்கு மிடில் ஓவர்களில் பந்து வீசி எதிரணியின் ரன் குவிப்பை கட்டுபடுத்துவதில் ராகுல் சாஹர் வல்லவர். இளம் லெக் ஸ்பின்னரான அவர் கடந்த 2019 முதல் மும்பை அணியில் தவிர்க்க முடியாத வீரராக இடம்பெற்று விளையாடி வருகிறார். நடப்பு சீசனின் முற்பாதி ஆட்டங்களில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் என இரண்டு அணிகளை மும்பை வீழ்த்த காரணமாக அமைந்தவர் ராகுல். இருப்பினும் அவரது சுழல் மாயாஜாலம் இரண்டாவது பாதி ஆட்டங்களில் எடுபடவில்லை. மூன்று ஆட்டங்கள் விளையாடி ஒரே ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். இது தான் தற்போது அவரது பந்து வீச்சு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. 

image

வருண் சக்கரவர்த்தி அசத்தல்!

கொல்கத்தா அணிக்காக ஐபிஎல்லில் விளையாடும் வருண் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தனது ஸ்பின் அட்டாக் மூலம் அச்சுறுத்தி வருகிறார். மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 12 ஓவர்களில் 57 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். அவரது பவுலிங் எக்கானமியும் அமர்க்களமாக உள்ளது. அதே போல அனுபவ வீரர் அஷ்வினும் தனது ஆட்டத்தின் மூலம் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். 

மறுபக்கம் தவான் அணியில் சேர்க்கப்படாததும் கேள்வியாக எழுந்துள்ளது. அதே போல உலகக் கோப்பை அணியில் இடம் பிடிக்க தவறிய சாஹலும் தனது பந்து வீச்சில் வேரியேஷன் காட்டி வருகிறார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் அதிவிரைவில் தங்களது பார்மை மீட்டெடுப்பார்கள் என நம்புவோம். அது இந்தியாவுக்கு கோப்பையை வென்று தர உதவும்.


Advertisement

Advertisement
[X] Close