Published : 14,Aug 2017 06:35 AM

எடப்பாடி முதலமைச்சரானது ஒரு விபத்து: டிடிவி தினகரன்

Edappadi-Chief-Minister-is-an-accident--TTV-Dinakaran

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் அமர்ந்திருந்த முதலமைச்சர் பதவியில், எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருப்பது ஒரு விபத்து என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பதவி இருக்கும் காரணத்தால், சிலர் ஆடுவதாக கூறிய அவர், அவர்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் தலைமையில், மதுரையில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மதுரையில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மதுரையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வெற்றிகரமான விழாவாக அமையும் என்று தெரிவித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்ற அவர், தான் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது செல்லாது என்ற பழனிசாமி அணி தீர்மானம் கட்சியினரை குழப்புவதற்காக நிறைவேற்றப்பட்டதாகவும் தினகரன் கூறினார்.

சுயநலத்திற்காக, மற்றவர்களை காரணம் காட்டி கட்சியினரை ஏமாற்றுவதாக தெரிவித்த அவர், மோசடி செயலுக்கு 420 என்று பெயர் என்று குறிப்பிட்டதாகவும், பொய்யான தீர்மானத்தை வெளியிடுவதை தான் 420 என்று கூறியதாகவும் தெரிவித்தார். தங்களால் முதலமைச்சராக ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி என்ற தினகரன், விபத்தின் காரணமாக பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருக்கிறார் என்றார். இன்று மாலை பொதுக்கூட்டத்தில் பழனிசாமி யார் என்பதை தெரிவிப்பேன் என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டார்.

முதலமைச்சரை 420 எனக் கூறுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை என்ற அவர், யார் மீதும் எந்த பயமும் எனக்கு இல்லை என்றார். தவறு செய்பவர்கள் அனைவரும் திருத்தப்படுவார்கள் என்று கூறிய அவர், அனைத்து கேள்விகளுக்கும் பொதுக்கூட்டத்தில் பதில் கிடைக்கும் என்றார். இரட்டை இலைச் சின்னத்தை நாங்கள் கட்டாயமாகப் பெறுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்