Published : 24,Sep 2021 05:15 PM
பொருளாதார ரீதியாக 10% இடஒதுக்கீட்டில் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

மருத்துவ சேர்க்கையில் பொருளாதார ரீதியில் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்துள்ளது உச்ச நீதிமன்றம். இதன்மூலம் மருத்துவ படிப்பில் 10% இடஒதுக்கீட்டை ஏறத்தாழ உறுதிசெய்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஆக.25ம் தேதி, திமுக சார்பில் தொடுக்கப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடக்கப்பட்டிருந்தது. அதன் விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றம் “மருத்துவப்படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை பெறவேண்டியது அவசியம்” என கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
தொடர்புடைய செய்தி:10% இடஒதுக்கீடு விவகாரம்: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீடு
மத்திய அரசின் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சந்திர சூட் “இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் செய்திருக்கும் விசாரணையை வரம்பு மீறியதாகவே பார்க்க முடிகிறது. மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என்ற வழக்கில், எவ்வாறு 10% குறித்து உத்தரவு பிறப்பிக்க முடியும்?’ என தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் ‘உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும்’ என்ற உத்தரவை தள்ளுபடி செய்தது.
இவ்விவகாரத்தில், இன்னும் பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அவற்றுக்கான தீர்ப்பு வந்தால்தான் இடஒதுக்கீடு இந்த ஆண்டு அமல்படுத்தப்படுவது குறித்த உறுதியான நிலைப்பாடு தெரியவரும். இப்பிரச்னையில் மத்திய அரசின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.