
21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை தம்பதியினர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில், மூவாயிரம் கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சந்தை மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய். பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையும், போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவும் விசாரணையில் களமிறங்கின.
இதையடுத்து போதைப்பொருள் வந்த கண்டெய்னர் எந்த முகவரிக்கு அனுப்பப்பட்டது என ஆராய்ந்தபோது, அது ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஆஷி டிரேடிங் எனும் நிறுவனம் குறித்த தகவல் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. அந்த நிறுவனத்தில் உரிமையாளர்களான சுதாகர் வைஷாலி தம்பதியர் சென்னை போரூர் அருகேயுள்ள கொளப்பாக்கத்தில் வசித்துவருவதை அறிந்த அதிகாரிகள், இருவரையும் அதிரடியாக கைது செய்து குஜராத்திற்கு அழைத்துச் சென்றனர்.
21 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய நபர் சென்னையில் பிடிபட்டதை அடுத்து தமிழ்நாடு காவல் துறையும், இவ்விவகாரத்தை உற்றுநோக்க தொடங்கியிருக்கிறது. சுதாகர் வைஷாலி தம்பதியின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுதாகர், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னைக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகத்தை கையாளும் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த சுதாகர், பின்னர் சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். சரக்கு பெட்டகத்தை கையாளும் நிறுவனத்தில் பணியாற்றிய போது, துறைமுகத்திற்கு அடிக்கடி சென்றுவந்த சுதாகர் அந்த காலகட்டத்தில் ஏதேனும் போதைப்பெருள் கடத்தலில் ஈடுபட்டாரா என விசாரணையில் ஈடுபட்டு வருகிறது தமிழ்நாடு காவல்துறை.