Published : 14,Aug 2017 02:19 AM
மண்ணில் புதைந்த பேரூந்துகள்: பலி எண்ணிக்கை உயர்வு

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேருந்துகள் மண்ணில் புதையுண்டன. இந்த கோர சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மண்ணில் புதையுண்ட 46 சடலங்களை மீட்டனர். 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நிலச்சரிவில் மேலும் சில வாகனங்கள் புதையுண்டு போயிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட அம்மாநில முதல்வர் வீர்பத்ர சிங், காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என தெரிவித்தார். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.