Published : 13,Aug 2017 12:05 PM
முதல்வர், அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள ஸ்டாலின், இதற்கு பொறுப்பேற்று முதல்வரும், அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், நீட் விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் அனைவரும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தீர்வு காண்போம் என மத்திய, மாநில அரசுகள் கூறி வந்தது ஏமாற்று நாடகம். நீட் விவகாரம் முடிந்து போன ஒன்று என தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. எம்.பி.,க்கள் தங்களது தோல்வியை ஒப்புக் கொண்டு தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர்களும், அமைச்சர்களும் தன் பதவிகளை ராஜினாமா செய்ய அவரே முன்வர வேண்டும்.
அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாக திணித்து சமூக நீதியை மத்திய அரசு சாகடித்துள்ளது. நீட்வழக்கு விசாரணையில் இருக்கும் போது மத்திய அரசு அவசர அவசரமாக நீட் தேர்வை திணித்துள்ளது. தமிழக அரசின் இரு மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பவில்லை. சட்டசபை நிறைவேற்றிய அந்த 2 மசோதாக்களுக்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட வேண்டும். பா.ஜ., அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை மாநில அரசு உடனடியாக வெளியிட வேண்டும். கூட்டாட்சி என பேசிக்கொண்டு உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.