Published : 18,Sep 2021 10:17 PM
“நானும் உங்களைபோல சாதாரண மனிதன்தான்”: மக்களுடன் சகஜமாக பழகிய குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமையன்று திடீரென சிம்லாவில் உள்ள ரிட்ஜ் சுற்றுலா தளத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சென்று, அங்கு பொதுமக்களுடன் பாதுகாப்பு கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி கலந்துரையாடினார்.
சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமான ரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பாப்கான் வாங்கிய குடியரசுத் தலைவர் அங்கே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுடன் சகஜமாக பழகியது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. பொதுவாக குடியரசுத் தலைவர்கள் பயணம் செய்யும்போது அதிக அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்பதாலும் பொதுமக்கள் சாதாரணமாக குடியரசுத் தலைவருடன் உரையாட வாய்ப்புகள் குறைவு என்பதாலும் ராம்நாத் கோவிந்தின் சிம்லா ரிட்ஜ் விஜயம் சலசலப்பை உண்டாக்கி அங்கிருந்த பொதுமக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது.
நானும் உங்களைபோல ஒரு சாதாரண மனிதனாக வாழ்ந்து பின்னர் பொதுவாழ்க்கைக்கு வந்தவன் என குடியரசுத் தலைவர் அங்கிருந்த சுற்றுலா பயணிகளிடம் குறிப்பிட்டார். பின்னர், அந்த பகுதியில் உள்ள ஒரு சிற்றுண்டி கடைக்கு சென்று அங்கே பொதுமக்களுடன் உரையாடினார். சிம்லாவில் உள்ள ஜக்கு கோயிலுக்கு சென்றிருந்த குடியரசுத் தலைவர் திடீரென ரிட்ஜ் பகுதிக்குச் சென்று பொதுமக்களை சந்தித்தபோது மிகக் குறைந்த அளவிலேயே அவருடன் பாதுகாவலர்கள் இருந்தனர்.
எந்தவிதமான முன்னறிவிப்பு அல்லது முன்னேற்பாடு இல்லாமல் குடியரசுத் தலைவர் பொதுமக்களுடன் சகஜமாக பழகியது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சென்ற வருடத்திலிருந்து கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக பொது நிகழ்ச்சிகள் மிகவும் குறைவான அளவிலேயே நடைபெற்றுவரும் நிலையில், குடியரசுத் தலைவர் திடீரென மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, இது காலத்துக்கு குடியரசு தலைவர் இல்லத்திலும் சந்திப்புகளை தவிர்த்து காணொளி மூலமே சந்திப்புகளை குடியரசுத் தலைவர் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவர் மூன்று நாள் பயணமாக இமாச்சல பிரதேசத்தில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று ஹிமாச்சல பிரதேச சட்டசபையில் அவர் உரை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது
கணபதி சுப்ரமண்யம்.