[X] Close

ஓடிடி திரைப் பார்வை 1: 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' - துடிப்பான துப்பறியும் சினிமா!

சிறப்புக் களம்

Agent-sai-srinivasa-Athreya-Movie-analysis

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை துப்பறியும் வகை கதைகளின் வரத்து மிகவும் குறைவு. எப்போதாவது வெளியாகும் துப்பறியும் திரைப்படங்கள் ஓரளவு சுமாராக இருந்தாலே நல்ல வரவேற்பைப் பெறுவதையும் கவனிக்க முடிகிறது. அந்த வகையில், ஸ்வரூப் இயக்கத்தில் 2019-ல் வெளியான தெலுங்கு சினிமா 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' (Agent Sai srinivasa Athreya). நவீன் பொலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கிறது.


Advertisement

உலகளவில் புகழ்பெற்ற துப்பறியும் திரைப்படங்களைப் பார்த்து, அதன் தாக்கத்தில் ஒரு துப்பறியும் நிறுவனத்தை உருவாக்கி நடத்துகிறார் ஆத்ரேயா. அவரது உதவியாளராக வருகிறார் ஸ்ருதி. சின்னச் சின்ன வழக்குகளை துப்பறியும் ஆத்ரேயாவிற்கு இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திய ஒரு வழக்கு கிடைக்கிறது. சரியாகச் சொன்னால், அந்தக் குற்ற வழக்கில் ஆத்ரேயா தற்செயலாக இணைக்கப்படுகிறார். பிறகு, தன்னுடைய உதவியாளர் ஸ்ருதியுடன் இணைந்து குற்றவாளிகளை ஆத்ரேயா கண்டுபிடித்த விதம்தான் இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.

image


Advertisement

நாயகன் நவீன் பொலிஷெட்டிக்கு இந்தத் திரைப்படம் நல்ல ஓப்பனிங் கார்டாக இருந்தது. சமீபத்தில் நவீன் பொலிஷெட்டி நடிப்பில் வெளியான 'ஜதி ரத்னலு' எனும் நகைச்சுவை சினிமாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.

சரி, 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' படத்துக்கு வருவோம். இந்திய மக்கள் கலாசாரத்தின் மைய நூலாக இயங்கும் மதங்கள், அந்தப் பின்னணியில் மத நம்பிக்கைகளைக் கொண்டு அரங்கேறும் குற்றங்கள் என வித்தியாசமானதும், மிக முக்கியமானதுமான கருவை துப்பறியும் ஜானரில் கலந்து பேசியிருப்பது சிறப்பு. சீரியஸான இந்தக் கருவை நகைச்சுவை பாணியில் கையாண்டிருப்பது ரசிகர்களுக்கு நல்ல மசாலா விருந்தாகவும் அமைகிறது. இயக்கம், இசை என நிறைவாக அமைந்தாலும் ஒளிப்பதிவு கொஞ்சம் சொதப்பல்தான்.

நவீன் பொலிஷெட்டியின் நடிப்பு நகைச்சுவையான அணுகுமுறை எல்லாம் சிறப்பு. தன் தாயின் பிரிவில் அவர் கலங்கும் காட்சிகளில் அடர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.


Advertisement

image

இந்தியர்களின் குடும்ப விழாக்களில், குறிப்பாக திருமணத்திற்கு இந்தியர்கள் செலவழிக்கும் பணம் குறித்து நீண்ட காலமாகவே ஒரு விமர்சனம் இருந்து வருகிறது. அதன் எதிர் முனையில் நின்று ஒன்றை அணுகினால் இங்கு ஒரு தனிமனிதனின் மரண காரியங்களுக்கு நிறையவே செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இக்கதைக் கருவானது, மரண காரியங்களுக்கு செலவு செய்ய முடியாத சாமானியர்களின் நிலையை குற்றவாளிக் கும்பல் எப்படி பயன்படுத்திக் கொள்கிறது எனப் பேசுகிறது. சற்றே நம்புவதற்கு கடினமானதாக இருந்தாலும் கூட இக்கதை பல உண்மைச் சம்பவங்களில் அடிப்படையினைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது.

திரைக்கதையினைப் பொறுத்தவரை எங்குமே தொய்வின்றி நகர்கிறது. க்ளைமேக்ஸ் வரை மர்ம முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் இடங்கள் அருமை.

நகைச்சுவை, சீரியஸான துப்பறியும் காட்சிகள் என இரண்டுமே இந்தத் திரைப்படத்தில் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. துப்பறியும் கதைக்களத்தை சுவாரஸ்யமான நகைச்சுவை பாணியில் அணுகியிருக்கும் 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' ஓடிடி சினிமா ரசிகர்களுக்கு நல்ல வீக் எண்ட் விருந்து. கவனிக்கத்தக்க சினிமா.

(ரசனைப் பார்வை நீளும்...)

| வாசிக்க > "அதே டெய்லர், அதே வாடகை" - 'அனபெல் சேதுபதி' திரை விமர்சனம்


Advertisement

Advertisement
[X] Close