Published : 18,Sep 2021 05:22 PM

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவர தமிழகம் எதிர்ப்பது ஏன்?

explain-why-tamilnadu-government-oppose-gst-in-petrol-diesel

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போதைக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இம்முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது. இதன் பின்னணி...

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

image

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை ஜிஎஸ்டியில் கொண்டு வரக்கூடாது என பெரும்பாலான மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் எரிபொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டு வரலாம் என்கிற திட்டம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், டாஸ்மாக் உள்ளிட்ட ஜிஎஸ்டி வரிக்கு உட்படாத விற்பனைகளின் மூலமே மாநில அரசின் வருவாயில் 60 % கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்கு கீழ் கொண்டு வந்தால், தமிழகத்திற்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தமிழக அரசு பெட்ரோல் டீசல் பொருள்களை ஜிஎஸ்டி வளையத்திற்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

image

மாநிலங்களிடம் எஞ்சியுள்ள ஒரு சில வரி விதிப்பு அதிகாரங்களையும் ஜிஎஸ்டி கவுன்சில் பறிக்கக் கூடாது எனவும் தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களை ஜிஎஸ்டி வரி விதிப்பு திட்டத்தில் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பல மாநிலங்களின் எதிர்ப்பின் காரணமாக, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களை தற்போதைக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டுவரவேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. இத்தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பின் தெரிவித்தார்.


பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வரி வருவாய் பொன் முட்டையிடும் வாத்து என்றே கூறலாம். இந்நிலையில் பெட்ரோல், டீசலுக்கான வரி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு?

பெட்ரோல் மற்றும் டீசல் மூலமாக மத்திய, மாநில அரசுகளுக்கான வரிவருவாயை ஒப்பீட்டளவில் பார்க்கலாம். பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி வசூல் கடந்த ஆறு ஆண்டுகளில் 300% அதிகரித்துள்ளது. எரிபொருட்கள் வரி மூலம் 2015-இல் மத்திய அரசின் வருவாய் ரூ.74,158 கோடி; 2021இல் இது ரூ.2.95 லட்சம் கோடியாக உயர்ந்தது. தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99 விற்கப்படுகிறது. இதில் தமிழக அரசுக்கு வெறும் ரூ.20 மட்டுமே கிடைக்கிறது. இடையில் வரும் வருவாய் மத்திய அரசுக்கும், பெட்ரோல் டீலருக்கும் சென்றுவிடுகிறது.

பெட்ரோல் டீசல் விற்பனை மூலம் தமிழகத்திற்கு கிடைத்த வரி வருவாய்:

2017 - 2018 - ரூ.25,373 கோடி

2018 - 2019 - ரூ.18,401 கோடி

2019 - 2020 - ரூ.18,589 கோடி

2020 - 2021 - ரூ.17,500 கோடி

image

இது தொடர்பாக பொருளாதார ஆலோசகர் புகழேந்தி பேசுகையில், ''தமிழ்நாட்டின் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க உதவுவது மாநிலவரி வருவாய். அதை எந்த மாநிலமும் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்க முன்வராது. அப்படி விட்டுக்கொடுக்க வேண்டுமென்றால் அதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசு மத்திய அரசிடம் கோரும்.

பெட்ரோல், டீசல் விலை ஜிஎஸ்டியில் வருவது தமிழக அரசுக்கு பிரச்னையில்லை. மாறாக, நிதிபற்றாக்குறைதான் தற்போது பிரச்னையாக உள்ளது. மாநில அரசுகள் ஜிஎஸ்டிக்கு ஒத்துக்கொண்டாலும், அதற்கு இணையான நஷ்ட ஈடு கேட்பார்கள். மத்திய அரசுக்கு பெட்ரோல் டீசல் வரி வருவாய் முக்கியமான ஆதாரமாக உள்ளது. அதனால் அவர்கள் எளிதில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முன்வரமாட்டார்கள்'' என்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்