[X] Close

'அரைத்த மாவை இனி அரைக்க முடியாது' - கொரோனா பேரிடரால் உருமாறும் பாலிவுட் சினிமா!

சிறப்புக் களம்

Coronavirus-pandemic-has-set-Bollywood-up-for-big-changes

கொரோனா பேரிடருக்குப் பிறகு பாலிவுட் சினிமா மெதுவாக மாறத் தொடங்கியுள்ளது என்றும், தயாரிப்பாளர்கள் தங்கள் அணுகுமுறையில் மாற்றம் செய்து வருகிறார்கள் என்றும் கூறுகிறார்கள் முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா வர்த்தகர்கள். இந்த பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பேரிடரால் முடங்கிக் கிடக்கும் பாலிவுட் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. திரைப்படத் தயாரிப்பாளர்கள் படங்களின் செலவுகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், இதற்கு முன் திட்டமிடப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் சில தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது எடுத்துவரப்படும் பெரிய பட்ஜெட் படங்களின் ஸ்கிரிப்ட்களை, பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவரும் அளவுக்கு இருப்பதை உறுதி செய்யும் வகையில் மதிப்பாய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இதுபோன்ற செயல்கள் பாலிவுட்டுக்கு புதிதானது.

இதற்கு உதாரணங்கள் நடிகர் விக்கி கவுஷலின் 'தி இம்மார்டல் அஸ்வத்தாமா', கரண் ஜோஹரின் 'தக்த்' மற்றும் டைகர் ஷெராஃப்பின் 'ராம்போ' போன்ற படங்கள். இந்தப் படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பொருட்செலவில் திட்டமிடப்பட்டவை. தற்போதைய சூழலில் இந்தப் படங்களுக்கான அதிக வேலைகள் மற்றும் பட்ஜெட்டுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள். தவிர, ஓடிடி (OTT) வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, இப்போது பல தயாரிப்பாளர்கள் அதற்குத் தகுந்த மாதிரியான வெப் சீரிஸ், சிறிய பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.


Advertisement

image

சல்மான் கான் ஃபிலிம்ஸின் முன்னாள் சிஓஓ-வான அமர் புட்டலா என்பவர், பாலிவுட்டில் தற்போது நடந்துவரும் மாற்றங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதில், ''மகாராஷ்டிரா போன்ற முக்கியச் சந்தைகளில் உள்ள திரையரங்குகள் நீண்டகாலமாக மூடப்பட்டிருப்பதால் ரூ.100 கோடி முதல் ரூ.300 கோடி வரையிலான பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் என்பது கடினமாக இருந்து வருகிறது. எனது பார்வையில் தற்போதைய சூழலில், பெரிய பட்ஜெட் படங்கள் பல விஷயங்களில் சவாலாக இருக்கும். ஒன்று, அவர்களின் படப்பிடிப்பு. கொரோனா இன்னும் குறையாத இந்த தருணத்தில் பெரிய பட்ஜெட் படங்களுக்கான படப்பிடிப்பு மிகவும் சிக்கலானதாக இருக்கும். இரண்டு திரையரங்குகள். இன்னும் எத்தனை மாதங்களுக்கு திரையரங்குகள் இந்தநிலையில் இருக்கும் என்பதில் சரியான தெளிவு இல்லை.

அப்படியே, அவை திறக்கப்பட்டாலும் பார்வையாளர்கள் திரையரங்குகளுக்குத் திரும்புவார்களா என்பதும், புதிய பாக்ஸ் ஆஃபிஸ் யதார்த்தம் என்ன என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இதன் காரணமாக பெரிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் பட்ஜெட்டுகளை பாதிக்கும் வகையில் இருக்கும் நிதி விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தங்களின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியிருக்கிறார்கள். கதையில் தீவிர கவனம் செலுத்துவது, பட்ஜெட்டில் சரியான திட்டமிடலை கேட்பது என தயாரிப்பாளர்களின் தற்போதைய அணுகுமுறை பாலிவுட்டில் புதிதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.


Advertisement

நடிகர் விக்கி கவுஷல் நடிக்கும் 'தி இம்மார்டல் அஸ்வத்தாமா' படத்தை தயாரிக்கும் ரோனி ஸ்க்ரூவாலா மோஷன் பிக்சர்ஸின் செய்தித் தொடர்பாளர், ''இந்தப் படம் எங்களுக்கு ஒரு லட்சிய திட்டம். ஆனால் ஸ்கிரிப்டின் கடைசி வரைவில் பட்ஜெட் பொருந்தவில்லை. விஎஃப்எக்ஸ் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட மிக அதிகமாக இருந்தது. என்றாலும், படத்தை ஒப்புக் கொண்டுள்ளோம். தற்போதைய சூழல் காரணமாக படத்தை நிறுத்தி வைத்துள்ளோம். படப்பிடிப்புக்குச் செல்ல இன்னும் ஒன்பது மாதங்கள் ஆகலாம்" என்று விளக்கியிருக்கிறார்.

திரைப்படத் தயாரிப்பாளர், வர்த்தக நிபுணர் கிரிஷ் ஜோஹர் இந்த நிலையை விவரிக்கிறார். ''அதிக அளவு பட்ஜெட்டுகள் கொண்ட திட்டங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள், தாங்கள் போடும் முதலீட்டை எடுக்க தியேட்டர்கள் உட்பட அனைத்து வழிகளும் கிடைக்க வேண்டும் என நினைக்கின்றனர். இதனால்தான் தற்போதைய மறுபரிசீலனைகள், புதிய அணுகுமுறைகள் வெளிப்படுகின்றன. இந்த அளவு பெரிய பட்ஜெட் படங்கள் ஸ்ட்ரீமிங் சேவைகளில் மட்டும் போதுமான வருமானத்தை தராது என்று அவர்களுக்குத் தெரியும்" என்று கூறியுள்ளார்.

image

''இவர்கள் சொல்லும் காரணங்கள் மட்டுமல்ல. ஓடிடி தளங்களில் இருக்கும் உலகின் சிறந்த உள்ளடக்கங்களை கொண்டாடும் இளைஞர்கள்தான் திரையரங்குகளுக்குச் செல்லும் முதன்மை பார்வையாளர்கள். ஓடிடி தளங்கள் வழக்கமான மசாலா பாணியிலான திரைப்படங்களை உருவாக்கவோ அல்லது பார்வையாளர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவோ முடியாது என்பதை திரைத்துறையினருக்கு உணர்த்தியுள்ளது. இதுவும் ஒரு காரணியாக பார்க்கப்படுகிறது. இதனால் அரைத்த மாவை அரைக்கும் கதைகளை தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர். இனி ஒரே பாணியிலான வாழ்க்கை வரலாறு மற்றும் தேசபக்தி கருப்பொருள்களைத் தயாரிக்க முடியாது" என்றுள்ளார் மும்பையில் உள்ள இளைஞர் ஊடகமான யுவா ஒரிஜினல்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் தனேஜா என்பவர்.

பாலிவுட்டின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எலிப்சிஸ் என்டர்டெயின்மென்ட் இந்த பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி தாங்கள் தயாரிக்க இருந்த பல ஸ்கிரிப்ட்களை கைவிட்டுள்ளது. இந்த ஸ்கிரிப்ட்கள் தற்போது உள்ள சூழலுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால் இந்த முடிவுக்கு வந்துள்ளது அந்த நிறுவனம்.

''பாலிவுட்டில் இயங்கும் சூப்பர் ஸ்டார் பின்புலம் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளையில், அவர்களை போன்ற பெரிய நடிகர்கள் இல்லாமல் சிறந்த உள்ளடக்கத்தால் இயக்கப்படும் படங்கள் நல்ல வரவேற்பை பெறும் என்ற முடிவுக்கு பல்வேறு தயாரிப்பாளர்கள் வந்துள்ளனர். இதனால் பாலிவுட் அதன் தன்மையிலிருந்து மெதுவாக மாறத் தொடங்கி இருக்கிறது. விரைவில் பெரிய மாற்றங்கள் நிகழலாம். ஓடிடி வரவும் பாலிவுட்டில் இருந்து இனி அதிகமாக இருக்கலாம்" என்கிறார் தயாரிப்பாளர் அபிஷேக் பதக் என்பவர்.

தகவல் உறுதுணை: mint

தொடர்புடைய செய்திக் கட்டுரை: வசூலில் ஏமாற்றிய 'பெல்பாட்டம்', 'தலைவி'... பாலிவுட்டுக்கு என்ன சொல்கிறது 'பாக்ஸ் ஆஃபிஸ்'?


Advertisement

Advertisement
[X] Close