Published : 16,Sep 2021 06:36 PM

ஆஷஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? இங்கிலாந்து அணியில் என்ன பிரச்னை? - ஓர் அலசல்

Does-the-Ashes-series-goes-as-planned-between-England-Versus-Australia-this-year-A-detailed-Analysis

கிரிக்கெட் உலகில் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ள தொடர்களில் முதன்மையானது ஆஷஸ் தொடர். ஐசிசி நடத்துகின்ற தொடர்களுக்கு அடுத்ததாக ஆஷஸ் தொடர் இந்த வரிசையில் இருக்கும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மட்டுமே இந்த தொடரில் பங்கேற்று விளையாடும். அதுவும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தான். வரலாற்று சிறப்புமிக்க தொடர் இது. 

image

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் தொடர். 2021-22க்கான ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலிய நாட்டில் வரும் டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 நடைபெற உள்ளது. மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.    

இந்நிலையில், இந்த தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது என்ன சிக்கல் என்பதை பார்ப்போம். அதற்கு முன்னதாக ஆஷஸ் வரலாறு. 

ஆஷஸ்!

சுமார் 139 ஆண்டுகால வரலாற்றை தாங்கி நிற்கிறது ஆஷஸ் தொடர். 1876 முதல் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. 

image

1882-இல் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. அதில் ஆஸ்திரேலியா 7 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது. அதன் பிறகு சொந்த மண்ணில் ஆட்டத்தை இழந்த இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை அந்த நாட்டு பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. 

‘ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இறந்து விட்டது. நாட்டின் கிரிக்கெட் அங்கேயே எரிக்கப்பட்டு, சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது’ என இரங்கல் செய்தி வெளியிட்டிருந்தது தி ஸ்போர்டிங் டைம்ஸ் என்ற பத்திரிகை. 

அந்த விமர்சனத்திற்கு பிறகு இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு அதே ஆண்டில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றிருந்தது. அதற்கு முன்னதாக இங்கிலாந்து கிரிக்கெட்டில் சாம்பலை மீட்டு வருவோம் என இங்கிலாந்து கேப்டன் Ivo Bligh சூளுரைத்திருந்தார். சொன்னதை போலவே அந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. 

image

அந்த தொடரின் போது கேப்டன் Ivo Bligh-க்கு, பெண்கள் மூவர் சேர்ந்து சிறிய கோப்பை வடிவிலான பொருளை பரிசளித்துள்ளனர். அதில் ‘தி ஆஷஸ்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. கூடவே கிரிக்கெட் ஸ்டெம்ப் பைல்ஸின் சாம்பல் அந்த கோப்பையில் வைக்கத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அது தான் ஆஷஸ் தொடருக்கான ஆரம்ப புள்ளியாக அமைந்துள்ளது. அதன் பிறகு இரு அணிகளும் வழக்கமான தொடர்களை காட்டிலும் கூடுதல் உற்சாகத்துடன் ஆஷஸ் தொடரை அணுகி வருகின்றன. 

இதுவரை நடந்து முடிந்துள்ள தொடர்களில் ஆஸ்திரேலியா 33 முறையும், இங்கிலாந்து 32 முறையும் தொடரை வென்றுள்ளன. ஆறு தொடர் சமனில் முடிந்துள்ளது. 

image

இப்போது இங்கிலாந்து வீரர்களுக்கு என்ன சிக்கல்?

2021 - 22 ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி புறக்கணிக்கவோ அல்லது ‘B’ டீமை (இரண்டாம் நிலை அணி) அனுப்பவோ வாய்ப்புகள் இருப்பதாக ESPNcricinfo தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது. 

இந்த ஆண்டுக்கான தொடரை தள்ளிவைக்க வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணியின் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறதாம். இல்லையென்றால் குறைந்தபட்சம் தொடரை பகுதி அளவிலாவது ஒத்தி வைக்க வேண்டுமென வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனராம். 

ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் தனிமைப்படுத்துதல் மிகவும் கறாராக இருப்பதால் வீரர்கள் அஞ்சுவதாகவும் சொல்லப்படுகிறது. 

image

வீரர்கள் அனைவரும் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மட்டுமே வீரர்கள் அவர்கள் தங்கியுள்ள அறையிலிருந்து வெளிவந்து பயிற்சி மேற்கொள்ள முடியும். அதே போல அதற்கு பிறகும் விதிகள் மிகவும் கடுமையானதாக இருப்பதால் வீரர்கள் அஞ்சுவதாக தகவல் வந்துள்ளது. இது ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக பயோ பபுளில் விளையாடுகின்ற வீரர்களுக்கும் பொருந்தும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாடி வரும் பெரும்பாலான வீரர்கள் டெஸ்ட் பார்மெட் கிரிக்கெட்டில் மட்டுமே அதிகம் விளையாடி வருபவர்கள். 

ஜோ ரூட், ஆண்டர்சன், ரோரி பேர்ன்ஸ், ராபின்சன், டான் லாரன்ஸ், பிராட், போப், ஹசீப் ஹமீது என பிரதானமாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களும் இங்கிலாந்து அணியில் உள்ளனர்.  

இருந்தாலும் வீரர்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில் ஆஸ்திரேலியாவுக்கு புதிய கேப்டன் தலைமையில் இங்கிலாந்து அணியில் இரண்டாம் நிலை வீரர்கள் கொண்ட அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இதே ஆஸ்திரேலியாவில் இந்தியா கடந்த 2020 -21 வாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இருந்தது. அப்போது அந்த நாட்டு கொரோனா தடுப்பு விதிகளை இந்திய வீரர்கள் பின்பற்றி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி! 

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்