'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி!

'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி!
'ஆப்' இன்றி அமையா உலகு 1: கூகுள் லென்ஸ் - டிஜிட்டல் உலகின் மாயக் கண்ணாடி!

ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இயல்பு வாழ்க்கையையே இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அந்த ஸ்மார்ட்ஃபோனில் 'ஆப்' (App) இன்றி அணுவும் அசையாது என்பதும் நாம் அறிந்ததே. தினமும் ஆயிரக்கணக்கான ஆப்-கள் அறிமுகமாகும் காலக்கட்டத்தில், நமக்கு மிகவும் பயன்படத்தக்க செயலிகளை அறிமுகம் செய்வதே  'ஆப் இன்றி அமையா உலகு' என்ற இந்தத் தொடரின் நோக்கம். இணைய உலகில் ஆயுத எழுத்தே கூகுள்தான் என்பதால், கூகுள் நிறுவன செயலி ஒன்றின் அறிமுகத்துடனேயே தொடங்குவோம்.

கூகுள் லென்ஸ் (Google Lens): ஒரு காலத்தில் தீவிர புத்தகம் வாசிப்பாளர்களில் பலரும் சின்னதாக உள்ள எழுத்துகளைப் பெரிதாக பாரத்துப் படிக்க கையாள்வது பூதக் கண்ணாடிகளைதான். இப்போது அந்த இடத்தை கண் கண்ணாடிகள் பிடித்துக் கொண்டுள்ளன. புத்தகங்கள் கூட டிஜிட்டல் டிவைஸ்களை கைப்பற்றிக் கொண்டுள்ளன. அதோடு, ஆடியோ புக் கூட இப்போது பயன்பாட்டில் உள்ளது. 

மறுபக்கம் 'அந்த பூதக் கண்ணாடிகளுக்கு டிஜிட்டல் வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும்?' - இந்த யோசனையில் உருவானதாக இருக்கலாம் என சொல்லும் அளவுக்கு உள்ளது 'கூகுள் லென்ஸ்' அப்ளிகேஷன். இணைய உலகின் சாம்ராட்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு இது. கூகுள் லென்ஸை பயன்படுத்த செல்போன் இருந்தால் போதும். ஆண்ட்ராய்டு, iOS என இரண்டு விதமான இயங்குதளம் கொண்ட ஃபோன்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

என்னென்ன செய்யலாம்? - இப்போதெல்லாம் ஏதேனும் ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கூகுளை நாடுவது பெரும்பாலானவர்களின் வழக்கம். உதாரணமாக ஒரு கலை, மரம், செடி, கொடிகளின் பெயர்கள் தெரிந்திருந்தால், அதுகுறித்து ஆழமாக தெரிந்துகொள்ள கூகுள் உதவும். அதுவே நமக்கு அறிமுகமே இல்லாத, பெயர் கூட அறிந்திடாத ஒரு கலை, மரம், செடி, கொடி, பூ என A2Z அனைத்தையும் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த கூகுள் லென்ஸ்.

இந்த லென்ஸின் கேமரா கண்களுக்கு முன்னால் வைத்து, நாம் தெரிந்துகொள்ள விரும்புகிற எந்த ஒரு பொருளையும் ஸ்கேன் செய்தால், அதன் விவரங்கள் அனைத்தையும் நொடிப் பொழுதில் கொடுத்துவிடும். அதேபோல நமது ஃபோனில் உள்ள போட்டோக்களைக் கொண்டும் தேடலாம். நாம் விரும்புகிற மொழியில் இதைத் தேடி தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல நாம் எழுதியதை, புத்தகத்தில் உள்ள டெக்ஸ்ட்களை காப்பி செய்யவும், அதுகுறித்து இணையத்தில் தேடவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. 

கூகுள் லென்ஸில் காப்பி செய்கின்ற எழுத்துகளை ஃபோனில் மட்டுமல்லாது, கம்யூட்டரிலும் எளிதாக பேஸ்ட் செய்துகொள்ளலாம். அதேபோல அந்த டெக்ஸ்ட்களை ஒலி வடிவில் கேட்கும் வசதியும் இதில் உள்ளது. அதேபோல அந்த எழுத்துகள் எந்த மொழியில் இருந்தாலும், அதை நமக்கு விருப்பமான மொழியில் கூகுள் டிரான்ஸ்லேட் உதவியுடன் மாற்றிக்கொள்ளலாம். இது மொழி தெரியாத ஊர்களிலும் நமக்கு உதவும்.

மாணவர்கள் 'ஹோம் ஒர்க்' செய்யக்கூட இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. அறிந்திடாத விஷயங்களை அறிந்து கொள்வதில் தொடங்கி பல்வேறு வகையில் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இதைப் பயன்படுத்துவோருக்கு செல்லுமிடமெல்லாம் 'சிறப்பு' சேரலாம். 

இணைய இணைப்புடன் மட்டும் இயங்கும் இந்த அப்ளிகேஷனை qபோனில் இலவசமாக இன்ஸ்டால் செய்துகொள்ளலாம். ஸ்டோரேஜில் உள்ள மீடியாக்களை ஆக்சஸ் செய்வதில் தொடங்கி மைக்ரோபோன், கேமரா மாதிரியானவற்றை ஆக்சஸ் செய்வது வரையில் இந்த அப்ளிகேஷன் பர்மிஷன் கேட்கிறது.

இணைப்பு > கூகுள் லென்ஸ் ஆப் https://play.google.com/store/apps/details?id=com.google.ar.lens&hl=en_IN&gl=US

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com