[X] Close

தோனி செய்ததை கோலியும் செய்வாரா? இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்? ஒரு அலசல்!

சிறப்புக் களம்

Who-is-the-next-captain-of-The-Indian-cricket-team-after-Virat-Kohli-departs-from-his-position-and-the-analysis-here

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் களத்தில் ஆதிக்கம் செலுத்த முதல் காரணமாக நிற்பவர் அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி. அதற்கான விதையை கபில் தேவ், கங்குலி, தோனி மாதிரியான முன்னாள் கேப்டன்கள் விதைத்திருந்தனர். 


Advertisement

image

விராட் கோலியின் தலைமையின் கீழ் டெஸ்ட், ஒருநாள், டி20 என ராஜ நடை போட்டு வருகிறது இந்தியா. இந்நிலையில், விரைவில் கோலி ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுவும் எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இது நடக்கலாம் என சொல்லப்படுகிறது. 


Advertisement

அது வெறும் வதந்தி என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் சொல்லிவிட்டார். அதனால் அந்த வதந்தி ஒரு வழியாக முற்றுப்புள்ளி பெற்றுவிட்டது. ஆனால், அடுத்த கேப்டன் குறித்த விவாதம் தேவையான ஒன்றாகவே உள்ளது.

அடுத்த கேப்டன் யார்?

விராட் கோலிக்கு ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டில் ரோகித் ஷர்மாவும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவும் துணை கேப்டன்களாக உதவி வருகின்றனர். அதில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன்சியை ரோகித் வசம் ஒப்படைக்க வேண்டுமென தனிக் கூட்டம் ஒன்று நெடுநாளாக சொல்லி வருகிறது. 


Advertisement

அதற்கு பின்னால் ஒரு காரணமும் உண்டு என ரோகித் பெயரை பரிந்துரைப்பவர்கள் சொல்வதுண்டு. ஐபிஎல் தொடரில் மும்பை அணியை ஐந்து முறை சாம்பியன் பட்டம் வெல்ல செய்தவர் ரோகித் என்பதே அந்தக் காரணம். 

image

ஆப் ஸ்பின்னராக கிரிக்கெட் கெரியரை தொடங்கிய அவர் இன்று மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் டாப் கிளாஸ் பேட்ஸ்மேன். அதிலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான சர்வதேச பேட்டிங் தரவரிசையில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் ஒருவர். அதனால் தான் அவரிடம் கேப்டன்சியை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. 

ஆனால், அவருக்கு தற்போது 34 வயதாகிறது. அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை ஆக்டிவாக அவரால் கிரிக்கெட் விளையாட முடியும். அந்த சூழலை வைத்து பார்க்கும் போது ரோகித், கேப்டன் பொறுப்பை ஏற்றால் கூட 2023 - 50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் மட்டுமே இந்தியாவை அவரால் வழிநடத்தி செல்ல முடியும். அது தவிர அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2022 டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடரிலும் அவர் அணியை வழிநடத்தலாம். அதற்கு பிறகு அவருக்கான வாய்ப்பு அந்த அளவிற்கு பிரகாசமாக இல்லை. 

image

தோனி செய்ததை செய்ய தவறிவிட்டாரா கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-டைம் சிறந்த கேப்டன்களில் ஒருவர் என போற்றப்படும் தோனி தனது ஓய்வுக்கு முன்னதாகவே அடுத்த கேப்டனை உருவாக்கி கொடுத்த கெட்டிக்கார கேப்டன். அதோடு தனது பதவியை துறந்து, புதிய கேப்டன் உடன் சில ஆண்டு காலம் விளையாடி அவரை பக்குவமடைய செய்தார். தனக்கு பிறகு கோலி என்பதை சரியாக கணித்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தவர். 

ஆனால் கோலி அதை செய்ய தவறிவிட்டாரோ என்ற கேள்வி எழுகிறது. கோலிக்கு பிறகு இந்திய அணியை அடுத்ததாக யார் வழிநடத்துவார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இங்கே ரோகித்தின் பெயர் வந்தாலும் அவரது பதவி காலம் நீண்ட நாட்கள் தொடர வாய்ப்பில்லை. 

image

அடுத்த கேப்டனை அடையாளம் காண தவறினால் என்ன நடக்கும்?

தலைவன் என்பவன் தன் அணியை திறம்பட முன்னின்று வழி நடத்தி செல்ல வேண்டும். அதே நேரத்தில் தனக்கு பிறகு அந்த பொறுப்பு யாருக்கு என்பதையும் உறுதி செய்ய வேண்டும். உதாரணமாக வரலாற்றில் நாம் படித்த மன்னர்கள் தொடங்கி சமகால அரசியல் ஆளுமைகள் வரை.  

கங்குலி, கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக இயங்கியவர் டிராவிட். அவருக்கு பிறகு அணியை வழிநடத்த போகும் அடுத்த கேப்டன் யார்? என்ற நெருக்கடியான சூழல் அப்போது நிலவியது. 2007 - 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியா முதல் சுற்றுடன் வெளியேறியது. அதற்கு பிறகான டி20 உலக கோப்பை தொடரில் சேவாக், யுவராஜ் மாதிரியான வீரர்கள் இருந்தும் கேப்டன் பொறுப்பு தோனியிடம் ஒப்படைக்கப்பட்டது. 

image

தோனி அணியை வழிநடத்திச் சாம்பியன் பட்டத்தை வெல்ல செய்தார். அதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்தியாவை வழிநடத்தி செல்லும் வாய்ப்பை பெற்றார். கும்ப்ளேவின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அணியை வழிநடத்தினார். அப்படிப்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் உருவான தலைவன் தோனி. அது இந்திய அணிக்கு தற்செயலாக அமைந்தது. ஆனாலும் அது அசைக்க முடியாத பல சாதனைகளை இந்திய அணி படைக்க உதவியது. 

இப்போது கோலிக்கு பிறகு அடுத்த கேப்டனை அடையாளம் காண தவறினால் மீண்டும் கங்குலிக்கு பிறகு நிலவிய அதே நெருக்கடி உருவாகலாம். 

image

கோலியின் கேப்டன்சியில் என்ன குறை?

கோலியின் கேப்டன்சியில் எந்த குறையும் இல்லை. அவர் அணியை திறம்பட வழி நடத்தி செல்கிறார். கேப்டன், வீரர் என அவரது எனர்ஜியில் எந்த குறையும் இல்லை. இப்போது கோலிக்கு 32 வயதாகிறது. அதிகபட்சம் அவரும் ஐந்து ஆண்டு காலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்புள்ளது. அதனால் 2023 - 50 ஓவர் உலகக் கோப்பை வரை அணியை அவரே வழிநடத்தி செல்லலாம். இருந்தாலும் அவர் தனது கேப்டன்ஷிப்பில் ஒரே ஒரு ஐசிசி கோப்பையை கூட இதுவரை வெல்லவில்லை. சாம்பியன்ஸ் டிராபி, உலக கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மாதிரியானவற்றில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் வெற்றியை தவறவிட்டுள்ளார். இதையெல்லாம் வைத்து அவர் மீது எழுகின்ற விமர்சனங்கள், வதந்திகள் மாதிரியானவை இப்போது அவரது கேப்டன் பதவியை விமர்சனத்திற்கு உள்ளாக்கி உள்ளது. மற்றபடி அவரது செயல்பாட்டில் குறை சொல்ல ஏதும் இல்லை. 

image

கேப்டன் ரேஸில் உள்ள வீரர்கள்?

இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயஸ் ஐயரின் பெயர்கள் உள்ளன. இதில் பின்னவராக உள்ள ஷ்ரேயஸ், 26 வயதேயான இளம் வீரர். 50 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை விளையாடி உள்ளார். 21 ஒருநாள் போட்டி மற்றும் 29 டி20 போட்டி இதில் அடங்கும். 2023 உலக கோப்பை வரை இல்லை என்றாலும் அதற்கு பிறகு இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் பிரதான ஆப்ஷனில் ஷ்ரேயாஸ் இருப்பார் என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஷூப்மன் கில் பெயரும் இதில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். கூடிய விரைவில் இந்திய அணிக்காக அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் அவர் இடம்பிடித்து விளையாட வாய்ப்புகள் உள்ளன. தனக்கு பிறகு இவர் தான் என கோலிக்கு இப்போது சில ஆப்ஷன்கள் உள்ளன. அதை அவர் செயல்படுத்தினால் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும். 

இதையும் படிக்கலாம் : “விளாதிமீர் புதின்” என மகனுக்கு பெயர் வைத்த ஸ்வீடன் தம்பதி - பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள்


Advertisement

Advertisement
[X] Close