[X] Close

உயிருக்கு உலை வைக்கும் உணவகங்கள் - விதிமீறலும்.. நடவடிக்கைகளும் என்ன? - விரிவான அலசல்

சிறப்புக் களம்

explaining-about-food-safety

சிக்கன் தந்தூரி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உணவகங்களின் சுகாதாரத்தன்மை குறித்தும், அதற்கான சட்டங்கள் குறித்தும் விரிவாக பார்ப்போம். 


Advertisement

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மணிகூண்டு அருகில் இயங்கி வரும் 7 ஸ்டார் என்ற உணவகத்தில் கடந்த 8ஆம் தேதி சிறுமி ஒருவர் குடும்பத்தோடு உணவருந்தியுள்ளார். அதன் பின் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே அறிகுறிகளுடன் பலர் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சந்தேகமடைந்த மருத்துவர்கள், கடைசியாக அவர்கள் எங்கு சாப்பிட்டார்கள் என்பதை விசாரித்தனர். அதில், அனைவரும் 7ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டது தெரியவந்தது. இதற்கிடையில் சிகிச்சையிலிருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

image


Advertisement

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு நடத்தினர். அதில், கெட்டுப்போன இறைச்சியில் சமைத்த உணவை சாப்பிட்டதே இந்த நிகழ்வுக்கு காரணம் என தெரியவந்தது. உணவக உரிமையாளர் அம்ஜித் பாஷா, சமையலர் முணியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து ஆரணியிலுள்ள உணவகங்கள், இறைச்சி கடைகளிலும் அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். விதிமுறைகளை மீறிய 3 இறைச்சி கடைகளுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அசுத்தமாக கடைகளை வைத்திருந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும், ஆரணியில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் உணவக உரிமையாளர்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதில் பேசிய அதிகாரிகள், தரமற்ற உணவுகள் தயாரிக்கும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுவதோடு, உணவகத்துக்கும் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர். வாங்கப்படும் இறைச்சியை அன்றைய தினமே பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருளையோ, குடிநீரையோ பரிமாறினால் மக்கள் புகார் அளிக்கலாம் என கூறிய அதிகாரிகள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து 2 நாட்களில் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். மேலும், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

உணவகங்களில் உணவுப்பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன?

உணவுப்பொருள் பாதுகாத்தல் விதிமுறைகள்:

ஒரு உணவுப்பொருளை 9 முதல் 12 மாதங்களுக்கு தாக்குபிடிக்கும் பொருள் என்றால் அதை -23 முதல் -18 டிகிரி செல்சியஸ் அதிக குளிரூட்டப்பட்ட குளிர்பதன பெட்டியில் பாதுகாத்தல் வேண்டும்.

3 முதல் 7 நாட்களுக்கு பாதுகாக்கப்படும் உணவு என்றால் 4 டிகிரி செல்சியஸ் குளிரூட்டப்பட்ட குளிர்பதன பெட்டியில் பாதுகாத்தல் வேண்டும். குளிர்பதன பெட்டியில் வெப்பமானி கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். குளிர்பதனப் பெட்டிகள் முறையாக சுத்தப்படுத்தப்பட்டு நல்ல நிலையில் இருத்தல் வேண்டும். சைவ, அசைவ உணவுகளை கலந்து வைக்காமல் தனித்தனியாக முறைப்படுத்தி பதப்படுத்துதல் வேண்டும்.

உணவு சமைத்தல் விதிமுறைகள்:

அசைவ உணவு சமைக்கிறோம் என்றால் உணவின் வெப்பநிலை 74 டிகிரி செல்சியஸ் அல்லது அதுக்கும் மேலான சூட்டில் சமைக்க வேண்டும். சமையலறையில் முறையாக exhaust மின்விசிறிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். சமையலறை அடிக்கடி தூய்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். சமைப்பவர்கள் கை உறை, தலையுறை அணிந்தும் தனிமனித தூய்மையை பராமரிக்க வேண்டும். அதிகபட்சமாக 2 முறைக்கு மேல் சமையல் எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி பயன்படுத்தக் கூடாது. அங்கீகரிக்கப்படாத உணவு நிறமிகளையும் வேதிப் பொருட்களையும் சேர்த்தல் கூடாது.

உணவு பரிமாறுதல் விதிமுறைகள்:

உணவு பரிமாற, சாப்பிட பயன்படுத்தப்படும் பொருட்கள் சுடுநீரில் முறையாக கழுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மேசை சுத்தப்படுத்தப்பட்டு அதன் மீதுள்ள மேசை விரிப்பு ஒவ்வொரு முறையும் மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உணவு பரிமாறுபவர் கையுறை, தலையுறை அணிந்து முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் உணவகத்தை சுகாதாரமாக பராமரித்தல் வேண்டும். பஃபே -யில் வைக்கப்படும் உணவுப்பொருட்களை 3-4 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

image

திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் கூறும்போது, ''ஆரணியில் நடந்த ஆய்வில் என்ன நடந்தது என்றால், சம்பந்தப்பட்ட கடைக்காரர் தேவைக்கு அதிகமான கறியை வாங்கியுள்ளனர். அதை சேமித்து வைக்கும் முறையில் ஏற்பட்ட கோளாறால், கெட்டுப்போன கறியை சமைத்ததுதான் பிரச்னை. அசைவ உணவகங்களில் அதை சேமித்து வைப்பதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. எந்த டிகிரியில் சேமிக்க வேண்டும் என்பது குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை.

பச்சை இறைச்சியை எந்த வெப்பநிலையில் வைக்கவேண்டும், சமைத்த இறைச்சியை எந்த வெப்பநிலையில் வைக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவதில்லை. கலரிங் சேர்ப்பது. சில்லி சிக்கன் சிகப்பு நிறத்தில் இருக்க வேண்டும், சைவ கடைகளில் மஷ்ரூம் சிகப்பு நிறத்தில் தெரிய வேண்டும் என்பதற்காக வேதிப்பொருட்களை பயன்படுத்துவது. அதேபோல, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது. அதில் புதிய எண்ணெயையும் சேர்த்து அதன் தன்மையையும் நீர்த்துபோகச்செய்துவிடுகிறார்கள். ஒரு கடை உரிமம் பெற்றிருக்கும்பட்சத்தில் உணவுபாதுகாப்பு அதிகாரிகள் அதனை ஆய்வு செய்திருக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்ளலாம். தரமற்ற உணவுகள் குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம்'' என்றார்.

உணவகங்களின் தரத்தை மாநில அரசு எவ்வாறு கண்காணிக்கிறது?

உணவகத்தை தொடங்கும்போது, உணவு பாதுகாப்பு துறைக்கு விண்ணபிக்க வேண்டும். இதையடுத்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு வந்து ஆய்வு செய்வார்கள்.

என்னென்ன மாதிரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்:

உணவகத்தில் போதிய வெளிச்சம், புகை போக்கி இருக்கிறதா?

பணியாளர்கள் சுகாதாரமாக இருக்கின்றனரா?

சமையலுக்குப் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறதா?

கழிவறை, கை கழுவும் இடங்களில் சோப்பு போன்ற தேவையானவை இருக்கிறதா?

சேமிப்பு அறைக்குள் பூச்சி, எலி புகா வண்ணம் பாதுகாப்பு இருக்கிறதா?

குளிர்பதனப் பெட்டியில் தேவைக்கு அதிகமாக உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா?

சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் காலாவதியாகி விட்டதா?

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா?

தமிழ்நாடு முழுவதும் இயங்கக்கூடிய உணவகங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.பதிவு செய்யப்பட்ட கடைகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement
[X] Close