
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்யத் தவறிய காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜீவா நகர் பகுதியில் கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி குடோனில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகளான டீல் இம்தியாஸ் மற்றும் செல்வக்குமார் ஆகியோர் தலைமறைவாகினர். இதனிடையே கஞ்சா கடத்தலை காவல்துறையினருக்கு தெரிவித்ததாக, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகி வசீம் அக்ரம் படுகொலை செய்யப்பட்டார்.
காவல்துறையினரின் விசாரணையில், தலைமறைவாக உள்ள டீல் இம்தியாஸின் ஆட்கள் தான் வசீம் அக்ரமை கொலை செய்தது தெரிய வந்தது. இதனால், கஞ்சா கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யத் தவறியதால், கொலை நடந்திருப்பதாகக் கூறி, வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து, வேலூர் சரக டிஐஜி பாபு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.