[X] Close

“மன அழுத்தம் போக்கும் மாமருந்து” – ‘புன்னகை புயல்’ வடிவேலு பிறந்தநாள் இன்று..!

சிறப்புக் களம்

-mental-stress-Cure-medicine-------Vadivelu-s-birthday-today----

இவரின் குரல், முகம், காட்சிகள் இன்றி தமிழ் மக்களின் எந்த நாளும் புலராது, மறையாது. அந்த அளவுக்கு தமிழர்கள் இல்லங்கள் தோறும், உள்ளங்கள் தோறும் நிறைந்த ஒரு பெயர் என்றால் வடிவேலுதான், அவரின் பிறந்தநாள் இன்று.


Advertisement

வடிவேலு என்ற பெயர் கால் நூற்றாண்டு காலமாக மக்களின் சோகப்பிணி தீர்க்கும் மாமருந்து, மக்களின் கண்ணீரை துடைக்கும் நகைச்சுவை விருந்து. தூர்தர்சன் காலத்தில் தொடங்கி இணைய புரட்சியிலும் ஏறு நடைபோட்டு வாட்ஸப், பேஸ்புக், ட்விட்டர், மீம்ஸ், டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம் என அத்தனை தொழில்நுட்ப வடிவங்களிலும் விஸ்வரூபம் எடுத்து சிரிக்க வைப்பவர் வடிவேலு  என்ற மாபெரும் கலைஞன் மட்டும்தான்.

image


Advertisement

ஒவ்வொரு பெயரிலும் வடிவேலு!

1991 ஆம் ஆண்டு ‘என் ராசாவின் மனசிலே’ படம் மூலமாக அறிமுகமாகி அனைவரின் மனசிலும் இடம்பெற்றவர் வடிவேலு, இவரின் படங்களில் இடம்பெற்ற கதாப்பாத்திரங்களின் மூலமாகவே சிலாகிக்கப்படுபவர். வின்னர் படத்தின் ‘கைப்புள்ள’, கிரி படத்தின் ‘வீரபாகு’, தலைநகரம் படத்தின் ‘நாய்சேகர்’, மருதமலை படத்தின் ‘ஏட்டு ஏகாம்பரம்’, ப்ரண்ட்ஸ் படத்தின் ‘ காண்ட்ராக்டர் நேசமணி’, ரெண்டு படத்தின் ‘கிரிகாலன்’, வெடிகுண்டு முருகேசன் படத்தின் ‘ அசால்ட் ஆறுமுகம்’, கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் ‘படித்துறை பாண்டி’, தேவர் மகன் படத்தின் ‘இசக்கி’, ராஜாவின் பார்வையிலே படத்தின் ‘ அறிவழகன்’, கண்ணாத்தாள் படத்தின் ‘சூனா பானா’, என்னம்மா கண்ணு படத்தின் ‘டெலக்ஸ் பாண்டியன்’ மற்றும் ‘செட்டப் செல்லப்பா’, பகவதி படத்தின் ‘சின்ன பகவதி’, அரசு படத்தின் ‘ பிச்சுமணி’, கோவில் படத்தின் ‘ புல்லட் பாண்டி’, ஐயா படத்தின் ‘காரசிங்கம் ஏ.சி’, சந்திரமுகி படத்தின் ‘ முருகேசா’, சச்சின் படத்தின் ’அய்யாசாமி’, இங்கிலீஸ்காரன் படத்தின் ‘தீப்பொறி திருமுகம்’, ஆறு படத்தின் ‘சுமோ’, போக்கிரி படத்தின் ‘பாடிசோடா’, வியாபாரி படத்தின் ‘திகில் பாண்டி’, எல்லாம் அவன் செயல் படத்தின் ‘வண்டு முருகன்’, நகரம் படத்தின் ‘ஸ்டைல் பாண்டி’ என இவர் நடித்த ஒவ்வொரு படத்தின் கதாப்பாத்திரமும், தனித்தனி கதாப்பாத்திரங்களாக மக்களின் மனங்களில் வாழ்கின்றன என்பதே உண்மை.

வசனங்களில் வாழும் சிரிப்பு வைத்தியர்:


Advertisement

வடிவேலுவை மக்கள் அனைவரும் நினைவில் வைத்திருக்கும் காரணங்களில் ஒன்று, அவரின் காலத்தால் அழியாத வசனங்களும், அதற்கு அவர் காட்டிய பாடிலாங்குவேஜும்தான். அதுபோல ஒருநாளில் வடிவேலு பயன்படுத்திய ஒரு வசனத்தையாவது பயன்படுத்தாமல் நம்மால் வாழவே முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அறிந்தோ, அறியாமலோ அனிச்சை செயலாக நம் அனைவரின் மனதிலும் வடிவேலுவும், அவர் பேசிய வசனங்களும் பொதிந்துகிடக்கிறது.

“ இன்னுமா நம்மள இந்த ஊரு நம்புது’, ‘ வேணாம் வலிக்குது அழுதுடுவேன்’, இப்பவே கண்ணக்கட்டுதே’, ‘மாப்பு வச்சிட்டான்யா ஆப்பு’, ‘ நல்லாதானே போய்கிட்டு இருக்கு’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்’, ‘பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்’, ‘ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி’, ‘ சண்டையில கிழியாத சட்டை எங்க இருக்கு’, ‘வடபோச்சே’, ‘ஆணியே புடுங்க வேணாம்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘திரிஷா இல்லன்னா நயன் தாரா’, “ எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா, ரொம்ப நல்லவண்டா’ என்பது போல இவர் பயன்படுத்திய எவர்கிரீன் வசனங்கள் எந்த காலத்திலும் மறையாது.

image

இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, அடுத்தவர்களை உடலளவிலும் அல்லது மனதளவிலும் துன்புறுத்தாத நகைச்சுவை என்பதுதான் வடிவேலுவின் சிறப்பம்சம். அதுபோல ஒவ்வொரு படத்திலும் தனது கதாப்பாத்திரமாகவே மாறி அதனை மக்களின் மனதில் காலத்திற்கும் பதிய வைப்பவனே சிறந்த கலைஞன். அந்த வகையில் பார்த்தால் விரல் விட்டு எண்ணினாலும் கிட்டத்திட்ட 50 வடிவேலுவின் கதாப்பாத்திரங்கள் நம்மிடம் பதிந்திருக்கும், எனவே தமிழ்சினிமாவின் ஆகச்சிறந்த கலைஞர்களில் தலையாய ஒருவர் இவர்.

மீம்ஸ்களின் அரசன்:

2010க்கு பிறகு வடிவேலு சினிமாவில் நடிப்பது படிப்படியாக குறைந்தாலும் அவர் இன்றும் புகழுடன் திகழ காரணம் மீம்ஸ்கள்தான். பேஸ்புக், வாட்ஸப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களினால் மீம்ஸ்கள் பெரும் வரவேற்பை பெற்றன. சிறிய புகைப்படத்தின் மூலமாக சமூகக்கருத்துக்களையோ அல்லது நகைச்சுவை கருத்துகளையோ வெளிப்படுத்துவதே மீம்ஸ். தமிழ்நாட்டில் மீம்ஸ்களில் அதிகம் இடம்பிடித்தவர் என்றால் அவர் வடிவேலுவாகவே இருக்கும், இவரின் படங்களில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் காதாப்பாத்திரங்களின் மூலமாக உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் பெரும் வரவேற்பை பெறுகின்றன. மக்களின் உற்சாகம், கொண்டாட்டம், சோகம், இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் சிறிய வடிவேலு மீம்ஸ் அழுத்தமாக வெளிக்காட்டும், அதனால்தான் அவர் மீம்ஸ்களின் அரசன்.

image

தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்த, சுற்றிலும் அழுத்தம் மிகுந்த, முன்னெப்போதும் இல்லாத பணியிட, வாழ்வியல் சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் தமிழ் மக்களின் மன அழுத்தம் போக்கும் மாமருந்தாக உள்ளது வடிவேலுவின் உடல்மொழியும், காமெடிகளும்தான். ஆம், அதனால்தான் அவர் இந்த நூற்றாண்டின் இணையற்ற கலைஞன். கடந்த சில ஆண்டுகளாக படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்த வடிவேலு, இந்த ஆண்டு முதல் தனது ரீ-எண்ட்ரியை தொடங்கவுள்ளார் என்ற செய்திதான் தமிழ்மக்களுக்கு கிடைத்திருக்கும் வடிவேலுவின் பிறந்தநாள் பரிசு. 

இதனைப்படிக்க: 'தடுப்பூசி மூலம் அதிக நோய் எதிர்ப்புசக்தியை உருவாக்க முடியும்' - தலைமை செயலாளர் இறையன்பு 


Advertisement

Advertisement
[X] Close