குஜராத்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விஜய் ரூபானி - காரணமும் பின்னணியும்..!

குஜராத்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விஜய் ரூபானி - காரணமும் பின்னணியும்..!
குஜராத்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த விஜய் ரூபானி - காரணமும் பின்னணியும்..!

குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் 65 வயதான விஜய் ரூபானி. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அவரது ராஜினாமா முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த ஆண்டு மட்டும் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி உள்ள நான்காவது பாஜக முதல்வர் லிஸ்டில் இணைந்துள்ளார் அவர். இதற்கு முன்னதாக கர்நாடகத்தின் எடியூரப்பா, உத்தரகண்ட் மாநிலத்தின் தீர்த் சிங் ராவத் மற்றும் திரிவேந்திர ராவத் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

விஜய் ரூபானி அரசியில் பின்னணி!

மாணவராக இருந்த போதே தன்னை பொது வாழ்வில் இணைத்துக் கொண்டவர் விஜய் ரூபானி. அகில பாரத வித்தியார்த்தி பரிசத் அமைப்பில் இணைந்து செயல்பட்டவர். தொடர்ந்து ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்திலும் இணைந்து செயல்பட்டார். 1971-இல் பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தார். பாரதிய ஜனதா கட்சி உதயமான நாள் முதல் அந்த கட்சியில் உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். எமர்ஜென்சி நேரத்தில் சிறைவாசம் அனுபவித்துள்ளார். ராஜ்கோட் நகர மேயர், பாஜக குஜராத் மாநில பொதுச் செயலாளர், ராஜ்ய சபா உறுப்பினர், 2014-இல் ராஜ்கோட் மேற்கு சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், 2016-இல் முதல்வர், 2017 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக நான்கு ஆண்டுகள் பணியாற்றி உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார். 

ராஜினாமாவிற்கு பிறகு விஜய் ரூபானி சொன்னது என்ன?

“மாநிலத்தில் முதல்வராக பணியாற்றிட எனக்கு ஐந்து ஆண்டுகள் வாய்ப்பு கிடைத்தது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்ததை செய்துள்ளேன். கட்சியின் தேவையை கேட்டு அதன்படி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து உழைப்பேன். 

பாஜக-வில் ஒரு வழக்கம் உள்ளது. அது கட்சியில் உள்ள உறுப்பினர்களின் பொறுப்பை காலத்தின் தேவைக்கு ஏற்ப மாற்றுவது. எதிர்வரும் நாட்களில் கட்சி எனக்கு கொடுக்கும் பொறுப்பை திறம்பட செய்ய காத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

பதவியை ராஜினாமா செய்ய காரணம் என்ன?

கொரோனா நெருக்கடி நிலையை அவர் கையாண்ட விதம் மற்றும் அவர் மென் பாங்கான குணமும்தான் பதவியை இழந்தமைக்கான அடிப்படை நிர்ப்பந்தமாக சொல்லப்படுகிறது. மறுபக்கம் 2016-இல் அப்போதைய குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் ராஜினாமா செய்த பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் விஜய் ரூபானி. 

அடுத்த ஒரு ஆண்டில் தேர்தல் என்ற நிலையில் தான் அவர் பொறுப்பேற்றிருந்தார். தற்போது அதே நிலை அவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இது பாஜக-வின் யுக்தி எனவும் அரசியல் ரீதியாக விமர்சனங்களும் வைக்கப்படுகின்றன. 

மறுபக்கம் பொதுவெளியில் தங்கள் முதலமைச்சர் குறித்துள்ள பேச்சுக்கு பாஜக பதில் கொடுக்கும் விதமாக இந்த களையெடுப்புகள் நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

பிரதமர் மோடியின் 2014-19 ஆட்சி காலத்தில் பதவியை ராஜினாமா செய்த ஒரே பாஜக முதல்வர் ஆனந்திபென் பட்டேல் மட்டுமே. அப்போது 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அளிப்பதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்த முறை பாஜக மாநில முதல்வர்கள் ராஜினாமா எண்ணிக்கை மாறியுள்ளது. 

குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?

குஜராத் மாநில தற்போதைய துணை முதல்வர் நித்தின் பட்டேல், விவசாய துறை அமைச்சர் RC Faldu, மத்திய அமைச்சர்கள் புருஷோத்தம் ரூபாலா, மன்ஷூக் மண்டாவியா மாதியானவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். 1998 முதல் தற்போது வரை குஜராத் மாநிலத்தில் முதல்வர் அரியனையை அலங்கரித்து வருவது பாஜக உறுப்பினர்கள் தான். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com