
2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி சேலை டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 2018-ம் ஆண்டு வேட்டி, சேலை நெய்வதற்கான நூல் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்திய அளவில் கோரப்பட்ட இந்த டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கழிவுநீரை வெளியேற்றவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சான்றிதழ் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன், சமர்ப்பிப்பு காலம் 15 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, ஸ்ரீவெங்கட்ராம் நூற்பாலை நிர்வாகத்தின் சார்பாக தொடரப்பட்ட வழக்கில், நூல் கொள்முதல் செய்வதற்கு புதிய டெண்டர் விட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சான்றிதழை 15 நாட்களில் சமர்பிக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, 2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான தமிழக அரசின் இலவச வேட்டி சேலை டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டார்.