[X] Close

'பிராமணர் எதிர்ப்பு கோஷம்' - சத்தீஸ்கர் முதல்வரின் தந்தை கைது... யார் இந்த நந்த் பாகெல்?

சிறப்புக் களம்

Why-Chattisgarh-CM-father-arrested

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்ந்து அரசியலாக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணி குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

அண்மையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெலின் தந்தை நந்த் பாகெல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, பிராமணர் இயக்கங்கள் அவருக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கின. "பிராமணர்கள் அந்நியர்கள், அவர்களை கிராமத்திற்குள் நுழைய விடக்கூடாது, நாட்டை விட்டே பிராமணர்களை விரட்ட வேண்டும்'' என்பதுதான் அவர் பேசியது. இதற்காக அவர் மீது அவரது மகன் பூபேஷ் பாகலே நடவடிக்கை எடுத்தார்.

"குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து எனது தந்தை ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக அறிந்தேன். சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார். குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இதனால் நானும் மனவேதனை அடைந்துள்ளேன்" என பூபேஷ் பாகெல் வருத்தம் தெரிவித்தார்.


Advertisement

image

தன் தந்தை என்றும் பாராமல் ''சட்டம் தன் கடமையை செய்யும்'' என நடவடிக்கைக்கு உத்தரவிட்டு நகர்ந்துவிட்டார். ஆனால் நந்த் பாகெல், 'எனக்கு ஜாமீன் வேண்டாம்' என விடாப்பிடியாக கூறிவிட்டார்.

யார் இந்த நந்த் பாகெல்? நந்த் பாகெல் 'பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல' என்பது போல ஒரு மாஸான மனிதர். விவசாயி என்றாலும் முற்போக்கு விவசாயி. நிறைய புத்தகங்களை படிப்பவர். சத்தீஸ்கர் மாநிலம் குருத்தி கிராமம்தான் நந்த் பாகெலின் சொந்த ஊர். கிராமம் என்றாலே பழமைவாதம் ஊறிக்கிடக்கும் என்பது அறிந்ததே. ஆனால் நந்த் பாகெல் அதிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, சாதி ஆதிக்கவாதத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர். அதன் சாம்பிள்தான் மேலே கூறிய சர்ச்சைக் கருத்து. 


Advertisement

பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படும்போது அங்கே ஒலிக்கும் முதல் குரல் நந்த் பாகெலுடையது. இதை அவர் தன் வாழ்க்கையாகவே கொண்டிருந்தார். இதனால்நாள் கழுத்தை சுற்றிய பாம்பாக அவரை பிரச்னைகள் சூழ்ந்து கொண்டே இருந்தன. ஆனால், அதைப்பற்றி அவருக்கு கவலையில்லை.

image

1970-களில் நந்தகுமார் புத்த மதத்தை தழுவினார். இதன் பிறகு சாதி ஆதிக்கவாதம் குறித்து அவரது விமர்சனங்கள் கூர்மையடைந்தன. ''அவர் புத்த மதத்தை தழுவிய பிறகுதான், இந்துத்துவத்துக்கு எதிராகவும், சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகவும் அவரது விமர்சனங்கள் கடுமையாகின'' என்று அவரது நெருங்கிய நண்பரும் பத்திரிகையாளருமான லக்கன் வர்மா தெரிவித்திருந்தார்.

அது 2018-ம் ஆண்டு சமயம். அப்போது, காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார் நந்த் பாகெல். அதில், ''காங்கிரஸ் கட்சியில் தேர்தல் இடங்களை எஸ்.சி., எஸ்.டி மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொடுங்கள். பிராமணர்கள், தாக்கூர்கள், பனியாக்களுக்குக் கொடுக்காதீர்கள்'' என்று அலறவிட்டார்.

அதேபோல, 2001-ம் ஆண்டு "Brahman Kumar Rawan ko Mat Marro" என்று ஒரு புத்தகம் ஒன்றை எழுதினார். பொதுபுத்தியை கேள்வி கேட்கும் வகையில், ''ராவணனின் உருவ பொம்மையை எரிக்காதீர்கள்'' என்றும், மேலும் பல அதிரடிக்களை அவிழ்த்துவிட்டுள்ளார். அவர் கூறிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சைகளைக் கிளப்ப, அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்டது. தடைக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

image

முழுநேர அரசியலில் ஈடுபடாதவர், கடந்த 1980-ம் ஆண்டு சுயேட்சையாக போட்டியிட்டார். ஆனால், தோல்விதான் மிச்சம். இருப்பினும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் எந்தவித சமரசத்துக்கும் இடமளிக்காமல் ஓடிக்கொண்டேயிருக்கிறார்.

பூபேஷ் பாகெலுக்கும் தந்தை நந்த் பாகெலுக்குமிடையே சுமூக உறவு இருந்ததில்லை. ''பொது இடங்களில் எந்த ஓர் அமைப்பையோ, சாதியையோ இழிவுபடுத்தி பேச வேண்டாம். விமர்சனம் செய்ய வேண்டாம்'' என கண்டிப்பதுண்டு. ஆனால், "எனக்கு எது சரியோ அதை பேசுகிறேன். யார் அனுமதியையும் பெற வேண்டிய அவசியமில்லை" என அழுத்தம் திருத்ததமாக கூறிவிட்டார்.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close