[X] Close

எழுத்தறிவு தினம்: இளைஞர்களின் வீதிதோறும் பள்ளி திட்டத்தால் பயனுறும் கிராமப்புற குழந்தைகள்

கல்வி

Literacy-Day--Rural-children-benefiting-education-because-of-youngsters-street-school-program

உலக எழுத்தறிவு நாள் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில், கொரோனா பொதுமுடக்க நேரத்தில் குழந்தைகளிடையே எழுத்தறிவை ஊக்குவிக்கும் திருச்சியை சேர்ந்த கிராமப்புற இளைஞர்கள் சிலரின் ‘வீதிதோறும் கல்வி’ திட்டத்தை நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். கொரோனா நேரத்தில் தொடங்கப்பட்டுள்ள இளைஞர்களின் இந்த முன்னெடுப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறியுள்ளது.


Advertisement

கொரோனா பெருந்தொற்று தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த பெருந்தொற்று கால பொதுமுடக்கத்தால் பல கிராமங்களில் உள்ள குழந்தைகளின் படிப்பு கேள்விக்குறியாகியது. நகரத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டது என்ற போதிலும் கூட, கிராமப்புற குழந்தைகளை விடவும் நகர்ப்புற குழந்தைகளுக்கு இணையதளம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் சற்று கூடுதலாக இருக்கிறது. இதனால் அவர்கள் தங்களது படிப்பை தொடரும் வாய்ப்பு சற்று அதிகமாக உள்ளது. கிராமத்தில், குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளியில் பயின்றவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதிலும் முக்கியமாக ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பயின்று வந்த பல பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.

image


Advertisement

இந்த சூழல் தமிழகம் முழுவதும் நிலவுகிறது என்றபோதிலும், திருச்சியில் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட தாயனூர் பகுதியை சேர்ந்த படித்த இளைஞர்கள், தங்கள் பகுதி குழந்தைகளுக்கு இப்படியான நிலை ஏற்படுவதை தடுத்திருக்கிறார்கள். இவர்களின் ‘வீதிதோறும் பள்ளி’ என்ற முயற்சியால், அங்கிருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த ‘வீதிதோறும் பள்ளி’ முயற்சியின் வழியாக, தாயனூர் பகுதியில் உள்ள குழந்தைகள் அனைவரும் இயற்கை சூழலிலுள்ள குடிசை வீடுகளுக்கு முன் அமர்ந்தும், மர நிழலில் அமர்ந்தும், தங்களைச் சுற்றி கால்நடைகளை ஓடியாடி விளையாட வைக்கோல்போருக்கு அருகில் சுத்தமான காற்று சுவாசித்தபடி கல்வி பயின்று வருகின்றனர். கிராமத்திலுள்ள வீடுகளுக்கு முன்புள்ள இடம், மரத்தடி, நாடக மேடை என கிடைக்கும் இடங்களிலெல்லாம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தாயனூர் பகுதியில் 10 இடங்களில் இப்படி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. அனைத்து இடங்களுக்கும் பள்ளி செல்லும் நாள்களை போல, மாணவர்களை கையில் புத்தகப் பையை ஏந்தி கல்வி கற்க ஆர்வமுடன் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி: மதுரை நெகிழ்ச்சி: 2500 அடி மலை கிராமத்திற்கு நடந்தே சென்று ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்


Advertisement

கோவிட் தொற்று ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த நடைமுறை இருக்கிறதென்றபோதிலும், அப்போது மூன்றாம் வகுப்பு படித்த குழந்தைகள், தற்பொழுது ஐந்தாம் வகுப்புக்கு சென்று விட்டனர். இப்படி ஒவ்வொரு வகுப்பும் மாணவர்கள் முன்னேற முன்னேற அக்குழந்தையின் பிற தேவைகளும் அவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரமும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இவர்களின் கல்வி நேரத்தை, மதியம் 3 மணியிலிருந்து 5 மணி வரை இரண்டு மணி நேரம் நீட்டித்துள்ளனர் அப்பகுதி இளைஞர்கள்.

image

இது மட்டுமல்லாமல் வீதிதோறும் பள்ளியில் சிறு புத்தகங்களை வைத்து வீதி நூலகங்களையும் அமைத்துள்ளனர். கோவிட் தொற்று காலத்தில் மூன்றாம் வகுப்பு படித்துவிட்டு நான்காம் வகுப்பு தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வரும் தியாஸ்ரீ என்ற குழந்தை பள்ளிக்கூடத்தில் உள்ளதுபோல தன் நண்பர்களுடன் அமர்ந்து படிக்கலாம், அதேநேரம் வீட்டிலும் அதிக நேரம் இருக்கலாம் என்பதால் இந்த கல்வி முறை தனக்கு பிடித்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

ராஜேந்திரன் என்ற ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கூறுகையில், “6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி திறன் வருங்காலத்தில் அனைத்து உயர் பதவிகளுக்கான தேர்வுகளுக்கான அச்சாரம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மேலும் கல்வியை எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். அடிப்படை கல்வியில்லாமல், வாழ்வின் அடுத்த நிலைக்கு செல்ல முடியாது. ஏணிப்படிகள் போலதான் கல்வியும். ஏணிப்படியில் ஏறும் பொழுது இடையில் இரண்டு படிகள் இல்லை என்பதற்காக அந்த படிகளை தாண்டி செல்ல முயற்சித்தால், நமக்குதான் அடிவிழும். அப்படியான நிலை நம் குழந்தைகளுக்கு வரக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டத்தை வழிமொழிந்துள்ளோம். இது மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது” என்றார்.

வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் கூறுகையில், “தாயனூரில் 10 இடங்களில் இது போன்ற வீதிதோறும் கல்வி அனைவருக்கும் கற்பிக்கப்படுகிறது. குறிப்பாக பிள்ளைகளை கவனிப்பதில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்துவார்கள். படித்த பெண்களை வைத்து இவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. தொடர்ந்து கல்வி சொல்லி தருபவர்களுக்கு ஆசிரியர்கள் அளவுக்கு பயிற்சியும் கொடுக்கப்படுகிறது. தற்போது 10 இடங்கள் என்பது இன்னும் விரைவில் 30 இடங்களாக அதிகரிக்கும். மேலும் இவர்களை உயர் படிப்பிற்கு கொண்டு செல்லும் அளவிற்கு தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும் இந்த கல்வி முறை பயனுள்ளதாக இருக்கும்” என குறிப்பிட்டார்.

image

கல்வி சொல்லி கொடுக்கும் கிராமத்து இளைஞர் ராஜ மாணிக்கம் பேசுகையில், “தாயனூர் கிராமத்திலே பிறந்து வளர்ந்து படித்து தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து பின் (டிஎன்பிஎல்) தமிழ்நாடு காகித நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இங்கிருக்கும் ஏழை எளிய மாணவர்கள் எங்கள் மூலம் பயன்பெறுவதில் மிக்க மகிழ்ச்சி” என்றார்.

- வி.சார்லஸ்


Advertisement

Advertisement
[X] Close