[X] Close

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? எகிறும் எதிர்பார்ப்பு

விளையாட்டு

It-has-been-reported-that-India-SQUAD-for-the-Twenty20-World-Cup-series-will-be-announced-very-soon
சர்வதேச அதிரடி கிரிக்கெட் திருவிழாவான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அணிகளை அறிவித்து விட்ட நிலையில் இந்தியாவின் SQUAD மிக விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
 
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய ஆவலான இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரை, கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் முன்பே திட்டமிட்டப்படி இந்தாண்டுக்கான இருபது ஓவர் தொடர் நிச்சயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் பிசிசிஐ போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதாக அறிவித்தது. அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அட்டவணையும் வெளியிடப்பட்டது.
 
தொடர் நெருங்கி வரும் நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட நாடுகள் அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ளது. 14-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் 19-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், அதன் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படலாம் என பேசப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் நிறைவடைந்த இரு நாட்களிலேயே அதாவது அக்டோபர் 17 ஆம் தேதி இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது.
 
image
இந்நிலையில் இந்தியாவின் டி20 உலகக்கோப்பைக்கான அணித் தேர்வு முடிந்து விட்டதாகவும், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அதனை விரைவில் அறிவிப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விராட் கோலி தலைமையில் 18 முதல் 20 வீரர்கள் அடங்கிய அணியாக அது இரு இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஐபிஎல் ஆட்டங்களில் ஜொலித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆல்ரவுண்டராக அசத்தி வரும் ஷர்தூல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன.
 
இடது கை வேகப்பந்து வீச்சாளர்களாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் அல்லது இளம் வீரர் சேட்டன் சக்காரியாவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்லில் இருந்தும் விலகியுள்ளதால் அவருக்கு உலகக்கோப்பை கனவு கேள்விக்குறியாகியுள்ளது. சர்வதேச போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்துள்ள சஞ்சு சாம்சன் இடம் பெறுவதும் சந்தேகமே.
 
இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றும் வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், தொடர் முடிவதற்குள் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது.
 
- பிரவீன் குமார்
 

Advertisement

Advertisement
[X] Close