
2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை பிரியங்கா காந்தி தலைமையில் களம் காண இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இதற்காக இப்போது இருந்தே கட்சியை பிரியங்கா எப்படி தயார்படுத்துகிறார், கட்சியிலும் தேர்தல் வியூகங்களிலும் அவர் செய்துவரும் மாற்றங்கள் குறித்தும் சற்றே விரிவாகப் பார்ப்போம்.
நாட்டில் மிகப்பெரிய மாநிலமாகவும், 403 உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய சட்டபேரவையாகவும் உத்தரப் பிரதேசம் இருக்கிறது, இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெல்ல பாஜக - சமாஜ்வாதி கட்சி - பகுஜன் சமாஜ் என்ற மூன்று பெரும் கட்சிகளுக்கு இடையே, இழந்த பெருமையை மீட்க பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி களம் காண இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியை உத்தரப் பிரதேசத்தில் வலுப்படுத்த பிரியங்கா காந்தி தீவிரமாக பணியாற்றி வருகிறார். 2019-ஆம் ஆண்டில் தீவிர அரசியலில் நுழைந்து கட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாநிலம் முழுவதும் கட்சியை புதுப்பிக்க கடுமையாக முயற்சித்து வருகிறார் பிரியங்கா. ஆனால், அவர் முன் இருக்கும் சவால்கள் ஏராளம். இதையெல்லாம் எப்படி பிரியங்கா சமாளிக்க போகிறார் என்பதே காங்கிரஸ் தொண்டர்களை தாண்டி எழும் கேள்வி.
உட்கட்சி பிரச்னை காங்கிரஸின் கட்டமைப்பில் இருக்கும் மிக முக்கிய பிரச்னை. ஜூலை மத்தியில் உத்தரப் பிரதேசம் வந்தபோது பிரியங்கா நேரடியாகவே, கட்சிக்குள் நிலவும் உட்கட்சி சண்டையை கண்டார். இதேபோல் இளம் தலைமுறையினர் கட்சியில் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அவர்களை காங்கிரஸை நோக்கி வரவழைப்பதும் பிரியங்கா முன் இருக்கும் மிகப்பெரிய சவால். இந்த சவாலை முதல்படியாக எடுத்துக்கொண்டு பணியாற்றத் தொடங்கியிருக்கிறார். ஜூலையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களுக்கு இணையாக, இளம் தலைவர்களை அமரவைத்து ஆலோசனைகளை மேற்கொண்டார்.
சமூகப் பிரதிநிதித்துவம்: கட்சி அமைப்பை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சித்து வரும், பிரியங்கா காந்தி கிராம மட்டத்தில் இருந்து அதனைத் தொடங்க விரும்புகிறார். அதன்படி, பதவியேற்ற பிறகு பல மாற்றங்களைச் செய்தார். அவர் சிறிய புதிய நிர்வாகக் குழுக்களை அமைத்தது மட்டுமல்லாமல் புதிய மாவட்டத் தலைவர்களை நியமித்தார். சில தேர்தல் தொடர்பான குழுக்களை அமைத்தார்.
பிரியங்கா உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது, 500 உறுப்பினர்கள் கொண்ட மாநில செயற்குழு இருந்தது. அதை 115 ஆக குறைத்ததுடன், மாநிலப் பிரிவுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அஜய் குமார் லல்லுவை தலைமை ஏற்க வைத்தார். வழக்கமாக மாநில தலைமைக்கு உயர் வகுப்பினர் நியமிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை மாற்றி பிறப்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு தலைமை பதவியை கொடுத்தார்.
இப்போது 16 பொதுச் செயலாளர்கள் மற்றும் ஆறு துணைத் தலைவர்கள் உள்ள காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகள் நியமனத்திலும் அனைத்து சமூகங்களுக்கும் இடம் அளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்தார் பிரியங்கா. 115 உறுப்பினர்களில், 34% உயர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 17% முஸ்லிம்கள், 12% SC/ST வகுப்பினரும் மற்றும் 1% சீக்கிய சமூகத்தினர் மற்றும் 2% மீதமுள்ள வகுப்பினருக்கும் கொடுத்தார்.
தற்போது, காங்கிரஸ் அடிமட்ட நிலை தொண்டர்களுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது. சத்தீஸ்கரில் மாஸ்டர் பயிற்சியாளர்களால் காங்கிரஸ் ஊழியர்களுக்கு உயர்நிலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவை பிரியங்கா வழிகாட்டுதலின்பேரில் செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் தலைவர்களுடன் நேரடியாக உரையாற்றவதில் தொடங்கி, ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் தன்னிடம் நேரடியாகப் பேசுமாறு அவர்களிடம் நெருக்கம் காண்பிக்க தொடங்கியிருக்கிறார் பிரியங்கா.
75 மாவட்டங்களில் 75 மணி நேரம்: நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டு கொண்டாடட்டத்துக்கு ஏற்ப, காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தை உத்தரப் பிரதேசத்தில் தொடங்கியுள்ளது. அதன்படி, மாநிலப் பிரிவின் மூத்த தலைவர்கள் உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களைச் சேர்ந்த 30,000 கிராம மக்களிடம் 75 மணி நேரம் செலவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 'ஜெய் பாரத் மகாசம்பர்க் அபியான்' என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் மூலம் சுமார் 90 லட்சம் மக்களை நேரடியாகச் சந்திப்பதே நோக்கம்.
இதேபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி, 'சத்பவனா திவாஸ்' என்ற பெயரில் ஏற்பாடு செய்துள்ள பிரியங்கா, அதன்மூலம் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு வருகிறார்.
வாக்கெடுப்புக் குழு: காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்திற்கான தேர்தல் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில் மாநிலத் தலைவர் அஜய் குமார் லல்லு, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், ராஜீவ் சுக்லா மற்றும் ஆர்.பி.என் சிங், சிஎல்பி தலைவர் ஆராதனா மோனா மிஸ்ரா, நிர்மல் காத்ரி, பிரமோத் திவாரி, பி.எல் புனியா மற்றும் விவேக் பன்சால் ஆகியோர் உட்பட 38 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் உள்ள மற்றொரு அம்சம், தேசிய அளவிலான தலைவர்கள், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு துறையை சேர்ந்தவர்கள், முன்னணி அமைப்புகளின் மாநிலத் தலைவர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு மூலமாக மாநிலத்தின் முக்கிய பிரச்னைகளை கண்டறிந்து பிரசாரத்தில் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக வேலையின்மை, பணவீக்கம் போன்ற மக்களை பாதிக்கும் பிரச்னைகளை எழுப்பவும் பிரியங்கா தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.
2012 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் 28 இடங்களை வென்றது, ஆனால் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் 7 இடங்களை மட்டுமே பெற்று பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த வீழ்ச்சியில் இருந்து கட்சியை மீட்கவே பிரியங்கா களமிறக்கப்பட்டுள்ளார். பிரியங்கா வந்த பிறகு சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 270 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்தது. இது சமீபத்திய ஆண்டுகளில் காங்கிரஸ் சந்தித்த முக்கிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த வளர்ச்சியை மேலும் மேம்படுத்த விரும்பும் பிரியங்கா தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது காங்கிரஸ். ஆனால் கூட்டணி இருந்தும் 2012-ஐ விட மிக சொற்ப இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இப்படியான நிலையில்தான் இந்த முறை 403 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரியங்கா எந்த அளவுக்கு உதவுவார், அவரின் வியூகங்கள், பிரசாரங்கள் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கு தேர்தலே விடை கொடுக்கும்.
- மலையரசு