Published : 11,Aug 2017 05:08 PM
உ.பி. முதல்வர் யோகி தொகுதியில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் பலி

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதியாக கோரக்பூரில் 48 மணி நேரத்தில் 30 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 48 நேரத்தில் 30 குழந்தைகள் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடத்திய அம்மாவட்ட நீதிபதி ராஜீவ் ரவுதலா, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மருத்துவமனை நிர்வாகம், ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு ரூ.67 லட்சம் பாக்கி வைத்திருந்ததால், அந்நிறுவனம் ஆக்ஸிஜன் உபகரணங்களை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. கோராக்பூர் தொகுதி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.