[X] Close

சாதி சான்றிதழ் தர மறுக்கும் அதிகாரிகள்: கேள்விக்குறியான பழங்குடியின மாணவியின் கல்லூரி கனவு

கல்வி

District-administration-refuses-to-issue-caste-certificate-to-a-tribal-student-make-her-to-lose-college-dream

"படித்து முடித்ததும் என்னவாக போகிறாய்" என்ற கேள்விகளை எதிர்கொள்ளும் மாணவ - மாணவியர்களுக்கிடையே, சாதி சான்றிதழ் இல்லாததால் படிப்பதற்கே தடை ஏற்பட்டுள்ளது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த பழங்குடியின மாணவி விஜயலட்சுமிக்கு. இதனால் கல்லூரிக்கு செல்வதற்கு பதில், தன் சாதி சான்றிதழை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், அலுவலகர்களை சந்தித்து மனு கொடுக்கவும் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறார் மாணவி விஜயலட்சுமி. உடன், தன் பெற்றோர் பார்க்கும் வேலையான பன்றிகளை பராமரிக்கும் வேலையையும் செய்கிறார் இம்மாணவி. +2வில், 600 க்கு 480 எடுத்த இவரின் இந்த நிலை, ‘கல்வி கற்றலிலுள்ள சிக்கலை அரசு விரைந்து சரிசெய்யும்’ என்ற பொதுக்கருத்தின் மீதான நம்பிக்கையை இழக்க வைப்பதாக இருக்கிறது.


Advertisement

திருநெல்வேலியில் இருந்து பிரிந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழ்வார் குறிச்சியில், காட்டுநாயக்கர் எனும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சமுதாயம் சில ஆண்டுகளுக்கு முன்புவரையில் தாயத்து தயாரித்து விற்பது, மாடுகளுக்கு வடம் மற்றும் கயிறு பூட்டுவது, தலைக்கான சவுரி முடி தயாரிப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளனர்.

காலப்போக்கில் வருமானம் ஈட்டுவதற்காக தெருக்களில் கிடக்கும் வேண்டாத பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் போன்ற குப்பைகளை பொறுக்குவது, பன்றிகள் வளர்ப்பது என மாறி விட்டனர். காலம் எதை எதையோ இவர்கள் வாழ்வில் மாற்றினாலும்கூட, சற்றும் இவர்களின் பள்ளிக்கனவை நிறைவேற்றவில்லை. அந்தவகையில் இப்போதும் இங்குள்ள பெரும்பாலான சிறுபிள்ளைகள், பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டே தெருக்களில் கிடக்கும் வேண்டாத பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை பொறுக்கி வந்து காசாக்குகின்றனர்.


Advertisement

image

இந்த குடும்பங்களில் கடந்த இருபது வருடங்களாக ஓரளவிற்கு பள்ளிப்படிப்பை முடித்த மாணவ மாணவிகளும் இருக்கிறார்கள். ஆனால் கல்லூரி படிப்பை தொடங்க சாதி சான்றிதழ் கட்டாயம் என்பதால், அவர்களின் டிகிரி கனவென்பது வெறும் கனவாகவே போய் வருகிறது. இதனால் பள்ளியுடனேயே கனவை தொலைத்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கே போகாத பிள்ளைகள்தான் தங்கள் சமூகத்தில் அதிகம் பேர் என்கிறார்கள் இந்த சமுதாயத்தை சேர்ந்த மூத்தவர்கள்.

இந்த ஆழ்வார்குறிச்சியில் வாழும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த சங்கர் மற்றும் மாரி தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சங்கர், பன்றி வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவரின் மூத்த மகள் விஜயலட்சுமி இந்த வருடம் ஆழ்வார் குறிச்சியில் உள்ள ஸ்ரீபரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் +2 முடித்திருக்கிறார். குறிப்பாக கணிதம் மற்றும் விலங்கியல் பிரிவைத் தேர்ந்தெடுத்து அதில் 600 க்கு 480 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.


Advertisement

கல்லூரி படிப்பிற்காக ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி சென்றபோது, அங்கு மாணவியிடம் சாதி சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளது. பள்ளிப் படிப்பு முடியும் வரை சாதி சான்றிதழ் தடையாக இல்லை என்பதால், மாணவி அதுபற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவான கல்லூரி படிப்பை தொடங்க சாதி சான்றிதழ் கட்டாயம் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் இவரின் கல்லூரி கனவு, கானல் நீராகி வருகிறது.

இதனையடுத்து மாணவி விஜயலட்சுமி, தென்காசி கோட்டாட்சியரிடம் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விஜயலட்சுமிக்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. சமீபத்தில்தான் திருநெல்வேலியில் இருந்து தென்காசி மாவட்டம் அதிகாரபூர்வமாக பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் தரப்பில், “ஆழ்வார்குறிச்சி தென்காசி மாவட்டமாக மாறிப்போனது. நெல்லை மாவட்டத்தில் வாழும் தருவை மற்றும் அம்பாசமுத்திரம் பகுதியில் வாழும் காட்டுநாயகர் சமுதாயத்திற்கு சாதி சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தென்காசி மாவட்டத்தில் இதுவரை யாரும் உங்கள் சமுதாயத்தில் சான்றிதழ் பெறவில்லை. அதனால் நாங்கள் வழங்க முடியாது” எனக்கூறி சான்றிதல் மறுக்கப்பட்டதாக மாணவிதரப்பில் சொல்லப்படுகிறது. இதையடுத்து, மாணவி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அங்கும் தீர்வு எட்டப்படவில்லை.

image

விடா முயற்சியாக தமிழக முதல்வர் மற்றும் பாரத பிரதமர் ஆகியோருக்கும் தனது கல்லூரிப் படிப்பை தொடங்க சாதி சான்றிதழ் கட்டாயம் எனக் கேட்பதால், தனக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் மாணவி விஜயலட்சுமி. ஆனாலும் மீண்டும் இந்த மனுக்கள் கோட்டாட்சியரிடம் வந்து விசாரணைக்கு பின் போதிய ஆதாரங்கள் இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விஜயலட்சுமி பெற்றோர் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் தன் முயற்சியை கைவிடாமல் போராடுகிறார் மாணவி விஜயலட்சுமி.

கல்லூரிக்கு செல்ல முடியவில்லை என்பதால், வீட்டில் தனது தாய் தந்தைக்கு உதவியாக வேலை செய்து வருகிறார் விஜயலட்சுமி. அவற்றில் பன்றிகளை பராமரிப்பதும் மாணவியின் ஒரு வேலையாக இருக்கிறது. மாணவி பன்றி பரமாரிப்பது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ‘+2 வில் நல்ல மதிப்பெண் எடுத்தபோதும், பழங்குடியின மாணவி என்பதாலேயே அவருக்கு சான்றிதல் வழங்காமல் இருப்பது, கடும் கண்டனத்துக்கு உரியது. அவர் படிக்க வேண்டும்’ என படிப்பின் அவசியத்தை பேசுகின்றனர்.

விடாமுயற்சியுடன் இன்றும் தொடர்ந்து சாதி சான்றிதழ் பெறுவதற்கு போராடி வருகிறார் விஜயலட்சுமி. சாதிய ரீதியான இந்த ஒடுக்குமுறையிலிருந்து மீட்டு, அரசு இவரின் கல்விக்கனவை நிறைவேற்றுமா?

- நெல்லை நாகராஜன் மற்றும் சுந்தரமகேஷ்


Advertisement

Advertisement
[X] Close