Published : 11,Aug 2017 04:25 PM
அணிகள் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது: அதிமுக பற்றி பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தால் அவர்களுக்கு நல்லது என்றும், பாஜகவைப் பொறுத்தவரை தங்களை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்வதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தமிழத்தைப் பற்றி மிக முக்கியமான செய்திகளைப் பற்றிப் பேசினார். குறிப்பாக, தமிழகத்தின் பாரம்பரியம் உள்ளிட்ட விஷயங்களை நாங்கள் சந்தித்த குறுகிய நேரத்தில் பேசினார். இது எங்களுக்கு பெருமையாக இருந்தது. வெங்கய்யா நாயுடு நாட்டுக்கு சொந்தமானவர். ஆனால் தொடர்ந்து தமிழகத்தின் நலனில் அக்கறை செலுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனென்றால் அவர் தமிழகத்தின் மீது தனி பாசமும், பற்றுதலும் கொண்டவர். அதிமுகவுக்குள் இருக்கும் பூசல் குறித்து வெங்கய்யா நாயுடு பேசவில்லை. அவர் தற்போது அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவராகிவிட்டார்” என்று கூறினார்.
மேலும், “தமிழகத்தின் இன்னாள் முதல்வரும், முன்னாள் முதல்வரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்தால் அது அவர்களுக்கு நல்லது. பாஜகவை பொறுத்தவரை எங்களை பலப்படுத்திக் கொள்ளவே முயற்சி செய்கிறோம். தமிழகத்துக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். பிரதமர் மோடியும் அதில் முனைப்புடன் இருக்கிறார். தமிழ் சமுதாயம் உயர்ந்த ஒரு நிலையை எட்ட வேண்டும் என்று எண்ணுகிறோம். பிரதமரும் அதில் ஆர்வமாகவும், உறுதுணையாகவும் இருப்பதால் விரைவில் அது நடக்கும் என்று நம்புகிறோம். வரக்கூடிய காலம் பாஜகவின் காலமாக தமிழகத்தில் அமையப்போகிறது. பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் வந்து இணைந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து சில மாதங்களுக்குள்ளாக மிகப்பெரிய மாற்றங்கள் தமிழகத்தில் உருவாகும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி; பாஜகவுக்கு வந்தால் கூடுதல் மகிழ்ச்சி” என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.