[X] Close

கேரள - குமரி எல்லையில் கொரோனா கண்காணிப்பில் பின்னடைவு: தொற்று பரவும் அபாயமென மக்கள் அச்சம்

கொரோனா வைரஸ்

Recession-in-corona-surveillance-at-Kerala-Kumari-border
கேரளாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு  எல்லை பகுதிகளில் எந்த விதமான சோதனையும் இல்லாததால் தமிழகத்திலும் இந்த தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதி தீவிரமாக பரவி வரும் நிலையில் கேரளாவோடு ஒட்டியிருக்கும் குமரி எல்லை பகுதிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை அதி தீவிரமாக கண்காணிப்போம் என அரசு தெரிவித்திருந்தது. கண்காணிப்பின்போது, அந்த வாகனங்களில் வரும் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லாது 72 மணிநேரம் முன்பு RTPCR பரிசோதனை செய்து அதற்கான ‘கொரோனா தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் கையில் வைத்திருக்க வேண்டும்; ஈ பாஸ் பெற்று தமிழகம் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்காணிக்க ஒவ்வொரு எல்லை பகுதிகளிலும் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவர் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் குமரியில் காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ஆகிய முக்கிய எல்லை பகுதிகளில் மட்டுமே தற்போது கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மலையோர பகுதியில் உள்ள நெட்டா பகுதியில் உள்ள சோதனை சாவடியில் காவல்துறை சோதனை சாவடியில் வழக்கமாக உள்ள காவல்துறை சோதனை மட்டுமே 24 மணிநேரம் நடைபெற்று வருகிறது. அதுவும் இங்கு சுகாதாரத்துறை சார்பில் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை மட்டுமே சோதனை நடைபெறுகிறது. இதனால் இந்த எல்லை பகுதி வழியாக ஏராளமானோர் கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் எந்தவிதமான சோதனையும் இன்றி வருகின்றனர்.
image
இதுபோல் ஊரம்பு, கன்னுமாமூடு, செறியகொல்லா பனச்சமூடு உள்ளிட்ட பல எல்லை பகுதிகள் வழியாக எந்தவிதமான பரிசோதனைகளும் இன்றி தினசரி ஏராளமான வாகனங்களில் கேரள மக்கள் அங்கிருந்து இங்கும் இங்குள்ள மக்கள் இங்கிருந்து அங்கும் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் கேரளாவில் இருந்து கொரோனா தொற்று குமரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவும் அபாயம் எழுந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த எல்லை பகுதிகளில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகள் இணைந்து தீவிர கண்காணிப்பை நடத்தி தமிழக அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றி வரும் மக்களை மட்டும் தமிழகத்துக்குள் அனுமதித்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் எழுப்பி உள்ளனர். 

Advertisement

Advertisement
[X] Close