Published : 03,Sep 2021 05:53 PM

லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்படும் 93% பேர் - காரணங்களும், விளக்கங்களும்

93-percentage-of-people-Compulsion-to-pay-bribes

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 93 % பேர் ஒரு அரசுத்துறை சார்ந்த வேலையை முடிக்க லஞ்சம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அறப்போர் இயக்கத்தின் சமீபத்திய கணக்கெடுப்பில், அரசுத்துறை சார்ந்த வேலையை முடிக்க லஞ்சம் கேட்டு நிர்ப்பந்திக்கப்பட்டதாக 93 % பேர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள். அதில் முதலிடத்தில் வருவாய்த் துறையும், அடுத்தடுத்த இடங்களில் காவல்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒரு குடிமகன் அடையாள ஆவணங்கள் பெறுவதற்கு, ஆசியாவிலேயே அதிகம் லஞ்சம் அளிப்பது இந்தியாவில் தான் என ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் அமைப்பின் ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது.

image

வருவாய்த் துறையில், பட்டா பெயர் மாறுதலுக்கு, நில மதிப்பைப் பொறுத்தும், விவசாய நிலமாக இருந்தால், ஏக்கருக்கு ஆயிரம் ரூபாய் வீதமும், மனையிடமாக இருந்தால், அங்குள்ள சந்தை மதிப்பைப் பொறுத்து சென்ட்டுக்கு இவ்வளவு என்றும் வருவாய்த்துறையினரால் லஞ்சம் கேட்கப்படுகிறது.

வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.2,000 , பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் வழங்க ரூ.500 முதல் ரூ.2000 வரை, லைசென்ஸ் பெறுவதற்கு ரூ.5000 எனத் தொடங்கி ஒவ்வொரு நபரின் தேவை, பொருளாதார நிலை, சிபாரிசு இவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக லஞ்சம் வாங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அரசு அலுவலர்கள், தேவையின்றி மக்களை அலைக்கழிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை தினந்தோறும் ஏதோவொரு அலுவலரை ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வைத்து கையும் களவுமாகக் கைது செய்கிறார்கள். இருந்தபோதும் இந்தியாவில் லஞ்சம் என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்பதே நிதர்சனம்.

image

நாட்டு மக்கள் அனைவரும் அரசின் பொதுச் சேவைகள் பெறுவதை உறுதிப்படுத்த, சேவை பெறும் உரிமைச் சட்டம் உதவுகிறது. அச்சட்டம் என்ன சொல்கிறது?

தேர்தலில் வாக்களிப்பது, வரி செலுத்துவது உள்ளிட்ட கடமைகள் குடிமக்களுக்கு உண்டு. அதேபோல, பொதுச் சேவைகளை அனைத்து குடிமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் கடமை அரசுக்கு உள்ளது. ஒரு குடிமகன் எவ்வித செலவும் இல்லாமல் அரசின் சேவைகளைப் பெற முடியும். அதனை உறுதி செய்கிறது பொதுச்சேவைகளை பெறும் உரிமைச் சட்டம். நம்மில் பலருக்கும் தெரியாத இச்சட்டத்தில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலம் தொடர்பான சான்றிதழ், கடவுச்சீட்டு என 100க்கும் மேற்பட்ட சேவைகளை இச்சட்டத்தின் மூலம் பெற முடியும்.

சேவை பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு சேவைகளுக்கும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பெற்றதற்குமான ரசீது வழங்கப்பட வேண்டும். அதில், எவ்வளவு நாட்களில் சேவை உரியவருக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட பொதுச் சேவைகளை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வழங்க மறுத்தாலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம். குறைகள் தீர்க்கப்படுவதுடன், உரியவருக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும்.

image

பொதுவாக அரசு அலுவலங்களில் ஒரு சான்றிதழை நாம் பெறுவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. மேலும், அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் மற்றுமொரு சிக்கல் என கூறுகின்றனர், துறை சார்ந்த வல்லுனர்கள். இவையெல்லாம், தகுந்த நேரத்தில் சேவைகள் வழங்கப்படாதது மற்றும் ஊழலுக்கு வழிவகுப்பதாகச் சொல்லப்படுகிறது. சேவை பெறும் உறுதிச் சட்டத்தை 20 மாநிலங்கள் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசும் இச்சட்டத்தை இயற்றும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்கலாமே: கவனம் ஈர்க்கும் ‘மு’ மற்றும் சி.1.2. திரிபுகள்... பயன்தருமா வழக்கத்திலுள்ள தடுப்பூசிகள்?

இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் பேசுகையில், ''இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் எடுக்கப்பட்டது. அதில், 22% பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். மீதி மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அதிக அளவில் லஞ்சம் வாங்குகின்றனர். மக்களுக்கு லஞ்சம் முதல் பிரச்னையாகவும், தாமதம் அடுத்த பிரச்னையாகவும் இருக்கிறது. 93%பேர் லஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்படுகிறேன் என தெரிவித்துள்ளனர். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.

'எதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்' என யாராவது கேட்டால், வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்துடன் அவர்களை அலைக்கழித்து தாமதப்படுத்துகின்றனர். மக்களும் வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். எந்த தேதியில் கிடைக்கும் என்பது குறித்த வெளிப்படைத்தன்மை அரசு அலுவலகங்களில் இல்லை. விண்ணப்பம் மட்டும்தான் ஆன்லைனில் இருக்கே தவிர, சேவை ஆன்லைனில் இல்லை. ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது குறித்து அறிந்துகொள்ள நேரடியாகத்தான் செல்லவேண்டும்''என்றார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்