
சுதந்திரத்துக்கு பின் பிறந்தவர்களில் குடியரசுத் துணை தலைவர் பதவிக்கு வந்த முதல் நபர் என்ற பெருமை வெங்கய்ய நாயுடுவை தான் சேரும் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
குடியரசுத்துணை தலைவராக, வெங்கய்ய நாயுடு இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பும் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, ‘நாடாளுமன்ற அவைகளில் நீண்ட ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வெங்கய்ய நாயுடுவுக்கு இருப்பதால், மாநிலங்களவை எப்படி இயங்கும் என்பதையும் அவர் நன்கு அறிவார்’ என தெரிவித்தார். விவசாயி மகனான வெங்கய்ய நாயுடு விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்தவர் எனவும் மோடி பேசினார்.