
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே ஓடும் ரயிலில் இரு வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருவேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 50 பேர் பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு பணியிலிருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.
தொடர்ந்து ரயிலில் பயணம் செய்த போதும் இரு தரப்பினரும் முழக்கங்கள் எழுப்பியபடியே சென்றுள்ளனர். கொரட்டூர் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது மாணவர்கள் செயினை இழுத்து ரயிலை நிறுத்தி மோதிக் கொண்டதாக தெரிகிறது. தொடர்ந்து ரயில்வே காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினர் மாணவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர்.