[X] Close

ஓடிடி களமாடும் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி முன்னிலை வகிப்பது எப்படி? - ஒரு பார்வை

சிறப்புக் களம்

Vijay-Sethupathi-create-a-new-record-on-OTT-platform

ஓடிடி தளங்களில் கோலோச்சி வரும் மனோஜ் பாஜ்பாய், பங்கஜ் திரிபாதி, பிரதிக் காந்தி, ஃபஹத் பாசில் வரிசையில் தமிழ் சினிமாவில் யார் என்ற கேள்விக்கு விடை தேடினால், முதலில் அகப்படுகிறார் விஜய் சேதுபதி. கொரோனா லாக்டவுனில் இருந்து விஜய் சேதுபதியின் ஓடிடி பங்களிப்பை அசைபோட்டாலே இது உறுதியாவது தெரியும்.


Advertisement

கொரோனா லாக்டவுன் காலகட்டம்... தமிழ் சினிமா இதுவரை வரலாற்றில் சந்தித்திடாத ஒன்று. ஆரம்பத்தில் இண்டஸ்ரி மொத்தமும் சோதனையை எதிர்கொள்ள, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமா மிகப்பெரிய இழப்பை சந்திக்காமல் உயிர்ப்புடன் இருக்க காரணம் ஓடிடி தளங்கள். முதலில் கொரோனா காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க மாற்று வழியாகத்தான் ஓடிடி தளங்களின் பக்கம் கவனத்தை திருப்பினர் தமிழ் சினிமாத் துறையினர். ஆனால், தற்போது தியேட்டர் திறக்கப்பட்டாலும், பெரும்பான்மையான படங்கள் ஓடிடியையே நாடியுள்ளன.

இந்த முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் நடிகர் சூர்யா என்பதை ஏற்கெனவே தெளிவாகப் பார்த்தோம். (வாசிக்க > சூர்யாவின் அந்த துணிச்சல் முடிவு... ஓடிடி தளங்களில் தமிழ் சினிமா வளரும் கதை!) சிறிய பட்ஜெட் படங்களின் தளமாகவே அறியப்பட்ட ஓடிடியில், தனது 2D என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரான ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்தை நேரடியாக வெளியிட்டார் சூர்யா. அடுத்து 'சூரரைப் போற்று'. மிகப்பெரிய பொருட்செலவில் தயாரான படத்தை காலச் சூழல் கருதி வெளியிட ஓடிடியே தேர்வு செய்தார். இப்படி, தமிழ் சினிமாவில் ஓடிடி-க்கான வரவை ஏற்படுத்தி கொடுத்தவர் சூர்யா என்றாலும், அவரைத் தாண்டி தமிழ் சினிமாவில் ஓடிடியை வரவேற்றதில் மற்ற நடிகர்களை காட்டிலும் முன்னிலை வகிக்கத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.


Advertisement

image

கடந்த ஆண்டே மீடியம் பட்ஜெட்டில் தயாரான விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' ஓடிடி களம் கண்டது. உண்மையில் அப்போது கீர்த்தி சுரேஷின் 'பென்குயின்', வரலட்சுமி சரத்குமாரின் 'டேனி' மற்றும் மாதவனின் 'நிஷப்தம்' போன்ற சில படங்கள் ஓடிடியில் வெளியானாலும் சூர்யாவின் 'பொன்மகள் வந்தாள்', 'சூரரைப் போற்று' படம் அளவுக்கு பேசுபொருளக, கவனம் ஈர்த்த திரைப்படமாக அமைந்தது என்னவோ, விஜய் சேதுபதியின் 'க/பெ ரணசிங்கம்' மட்டுமே. இந்தப் படத்தின் வெற்றி முடங்கி கிடந்த பல மீடியம் பட்ஜெட் படங்களுக்கு புதுத் தெம்பை கொடுத்தது.

இதன்பின், 'மாஸ்டர்' தியேட்டர் வெளியீடாகத்தான் வெளிவந்தது. பொங்கல் வெளியீடாக இப்படம் திரைக்கு வந்தாலும், 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு காரணமாக வெளியான 15 நாட்களுக்குள்ளாகவே ஓடிடிக்கு வந்தது. ஓடிடியில் வெளியான பின்னர் மாஸ்டருக்கான வரவேற்பு வேறு விதமாக இருந்தது. குறிப்பாக மற்ற மாநிலங்களில் கிடைத்த வரவேற்பு, அதில் வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதியை இந்தி உள்ளிட்ட மொழி பேசும் ரசிகர்களுக்கு பரிச்சயப்படுத்தியது.


Advertisement

இந்தக் காலகட்டத்தில் அக்கட தேசத்திலும் கொடிநாட்டினார் விஜேஸ். தெலுங்கு படமான 'உப்பென்னா'வில் மிரட்டல் வில்லத்தனத்தை வெளிப்படுத்திய விஜய் சேதுபதியை ஒட்டுமொத்த தெலுங்கு தேசத்துக்கும் பிடித்துப்போனது. இந்தப் படம் தியேட்டர் வெளியீடாக இருந்தாலும், சில வாரங்களிலேயே ஓடிடி பக்கம் வந்துவிட, பட்டிதொட்டியெங்கும் விஜய் சேதுபதியின் வில்லத்தனம் சென்றுசேர்ந்தது.

image

விஜய் சேதுபதி நடிப்பில் இரண்டாவது நேரடி ஓடிடி வெளியீடு என்றால் அது 'குட்டி ஸ்டோரி' ஆந்தாலஜி படம்தான். இதில் 'ஆடல் பாடல்' பகுதியில் தனது ஆஸ்தான இயக்குநர் நலன் குமாரசாமியுடன் இணைந்திருந்தார். நலன் குமாரசாமியுடனான விஜேஸின் பாண்டிங்கை மீண்டும் ஒருமுறை எடுத்து காட்டியிருந்தது இந்தப் பகுதி. இதற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. இதேபோல் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான 'நவராசா'விலும் விஜய் சேதுபதியே மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் கவனம் ஈர்த்தார்.

இந்தப் படங்களை விட, விஜய் சேதுபதியை ஓடிடி சகாப்தம் இனிமேல்தான் ஆரம்பிக்க இருக்கிறது. இதுவரை எந்த நடிகரும் செய்யாத வகையில் ஃபஹத் பாசில் மட்டுமே தொடர்ந்து மூன்று படங்கள் ஓடிடியில் வெளியிட்டு இருந்தார். இப்போது அந்த லிஸ்டில் விஜய் சேதுபதி இணைய இருக்கிறார். ஆம், இந்த மாதத்தில் அடுத்தடுத்து அவரின் நான்கு படங்கள் அடுத்தது ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. மறைந்த இயக்குநர் ஜனநாதன், நடிகை ஸ்ருதி ஹாசன் உடன் இணைந்துள்ள 'லாபம்' படம் வரும் 9 ஆம் தேதி நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதே தினத்தில் தியேட்டரிலும் வெளியாக இருக்கிறது.

image

அறிமுக இயக்குநர் தில்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப் படத்தை 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார். அரசியல் நையாண்டி வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் சத்யராஜ், பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதலில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக இருந்த நிலையில், தொலைக்காட்சி உரிமை சன் டிவியிடம் இருந்ததால், சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பின்பு ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது. வரும் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 6:30 மணிக்கு சன் டிவியில் 'துக்ளக் தர்பார்' ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான திரைக்கதை அமைப்பைக் கொண்ட, 'அனபெல் சேதுபதி' படத்தில், விஜய் சேதுபதி, டாப்சி இருவரும் இரட்டை வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஹாரர் காமெடி திரைப்படமான 'அனபெல் சேதுபதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் செப்டம்பர் 17-ல் வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளிலும் ஒரே நேரத்தில் 'அனபெல் சேதுபதி' வெளியாகவுள்ளது.

image

'காக்கா முட்டை', 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மணிகண்டன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோத்துள்ள திரைப்படமே 'கடைசி விவசாயி'. விஜய் சேதுபதியுடன் ராஷிகண்ணா, யோகி பாபு, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் 'சோனி லைவ்' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களில் வெளியிட்ட பின்பு ஓடிடி பக்கம் கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் படங்களை தவிர, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன் உடன் விஜேஸ் இணைந்துள்ள 'மைக்கேல்' ஓடிடி தயாரிப்பாகவே தயாராவதாக சொல்லப்படுகிறது. இதேபோல், 'தி ஃபேமிலி மேன்' இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கி வரும் ஷாகித் கபூரின் வெப்சீரிஸ், 'தி ஃபேமிலி மேன்' மூன்றாம் பாகம் போன்று ஓடிடியை மையப்படுத்தி உருவாகும் தொடர்களில் விஜய் சேதுபதி கமிட்டாகி இருக்கிறார்.

வடக்கில் மனோஜ் பாஜ்பாய், பங்கஜ் திரிபாதி, பிரதிக் காந்தி, தெற்கில் ஃபகத் ஃபாசில் முதலான நடிகர்கள், ஓடிடியை தங்களுக்கான களமாக பயன்படுத்தி முன்னேறிவரும் வேளையில்,அவர்கள் வரிசையில் தெற்கில் இருந்து விஜய் சேதுபதி வரவிருக்கும் காலங்களில் ஓடிடி தளங்களில் புதிய சகாப்தம் படைக்க இருக்கிறார் என்பதை அவரின் படங்களே பறைசாற்றுகின்றன.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close