[X] Close

ஆப்கான் விமான நிலையங்கள் மூடல் : தரை வழி பயணமாக எல்லையை நோக்கி படையெடுக்கும் மக்கள்

சிறப்புக் களம்

Air-Service-has-banned-due-to-closure-of-airports-in-Afghanistan-and-People-who-wish-to-flee-from-the-Taliban-Control-nation-was-traveling-by-land-to-cross-the-Afghan-border

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதே நேரத்தில் அங்கு இருபது ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படை முழுவதுமாக பின்வாங்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை அமெரிக்க அரசு உறுதி செய்துள்ளது. 


Advertisement

image

அதையடுத்து அந்த நாட்டில் வான்வழி போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளிநாடு மற்றும் ஆப்கன் நாட்டை சேர்ந்தவர்கள் என மக்கள் பலரும் தரை மார்க்கமாக ஆப்கன் எல்லையில் குவிந்து வருகின்றனர். 


Advertisement

சுமார் 6.52 லட்சம் சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவில் அமைந்துள்ள நாடு ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான், சீனா, ஈரான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உட்பட மொத்தம் ஆறு சர்வதேச நாடுகளின் எல்லையை ஆப்கானிஸ்தான் கொண்டுள்ளது. ஆக்கிரமிப்பு பகுதிகளாக கருதப்படும் காஷ்மீரின் சில பகுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டான் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான் 106 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. தற்போது இந்த நாடுகளின் எல்லைகளில் தான் சாரை சாரையாக மக்கள் வரிசையில் காத்து நிற்பதாக தகவல் வந்துள்ளது. 

image

அந்த நாட்டின் எல்லையின் என்ன நடக்கிறது?


Advertisement

அமெரிக்கா ஆகஸ்ட் 30 வரையில் சுமார் 80,000 மக்களை ஆப்கன் - காபூல் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றியுள்ளது. அதில் 5,500 பேர் மட்டுமே அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கமுள்ளவர்கள் அனைவரும் ஆப்கன் நாட்டை சார்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் ஆட்சியில் நிம்மதியாக வாழ முடியாது என்ற காரணத்தால் ஆப்கன் மக்கள் அகதிகளாக பிற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

எல்லைப் பகுதி முழுவதும் தலிபான் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள தலிபான் படையைச் சேர்ந்த பாதுகாவலர்கள் வணிகர்களையும், நாட்டை விட்டு வெளியேற முறையான ஆவணங்களை கொண்டிருப்பவர்களை மட்டுமே பயணத்தைத் தொடர அனுமதிக்கின்றதாக கூறப்படுகிறது. 

image

புகலிடம் தேடி வருபவர்களுக்கு அடைக்கலம் கொடுங்கள்! - ஐ.நா வலியுறுத்தல்

ஆப்கானிஸ்தான் நாட்டுடன் நில ரீதியாக இணைந்துள்ள அண்டை நாடுகள் தங்கள் நாட்டின் எல்லை கதவுகளை திறந்து வைத்திருக்கும் படி வலியுறுத்தியுள்ளது ஐ.நா. புகலிடம் தேடி வரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டியுள்ள நாடுகளுக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. 

அனுமதிக்க மறுக்கும் உஸ்பெகிஸ்தான்!

பாதுக்காப்பு காரணங்களை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களை அனுமதிக்க முடியாது என உஸ்பெகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், இப்போதைக்கு அதை திறக்கும் யோசனையில் அந்த நாடு இல்லை என சொல்லியுள்ளது. 

image

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இயலாது - பாகிஸ்தான்!

ஆப்கன் நாட்டுடன் 2679 கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது பாகிஸ்தான். ‘எங்கள் நாட்டில் ஏற்கனவே அதிகளவிலான அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோம். அந்த சுமையை சமாளிக்கவே எங்களால் முடியவில்லை. அதே நேரத்தில் இனி புதிதாக யாருக்கும் அடைக்கலம் கொடுக்கும் சக்தி எங்களுக்கு இல்லை’ என பாகிஸ்தான் தரப்பு கைவிரித்துவிட்டது. 

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை இணைக்கின்ற எல்லை பகுதிகளில் ஒன்றான Spin Boldak பகுதியில் அதிகளவிலான மக்கள் அடைக்கலம் நாடி குவிந்திருந்தனர். ஆனால் அங்கு யாரையுமே பாகிஸ்தான் அனுமதிக்காததால் பதற்றம் நிலவி வருகிறது. 

இப்போதைக்கு ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான வழிகளாக இருப்பது ஈரான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும் தான். அந்த நாடுகளும் என்னென்ன? கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது இப்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. 

image

கண்ணீர் கசிய வைக்கும் ஆப்கன் மக்களின் நிலை

எந்த நாட்டில் எல்லாம் உள்நாட்டு போர் நடக்கிறதோ அந்நாட்டு மக்களின் நிலை மிகவும் பரிதாபமான ஒன்றாகவே இருக்கிறது. போர்ச் சூழலுக்கும் மோசமான ஆட்சிக்கும் பயந்து அந்நாட்டு மக்கள் தான் வாழ்ந்த சொந்த மண்ணை விட்டு ஏதோவொரு நிலத்தை தேடி எவ்வித பிடிமானமும் இல்லாமல் உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். சொந்த நாட்டின் எல்லையை முறையான ஆவணங்கள் இல்லாமல் தாண்டிவிட்டாலே அவர்கள் அகதிகள் ஆகிவிடுகிறார்கள். கைகளில் பணம் உள்ளவர்களால் மட்டும் முறையான ஆவணங்களுடன் வெளியேற முடியும். சதாரண மக்களால் அப்படி செய்ய முடியாது.

அப்படித்தான் ஆப்கானிஸ்தானின் சாதாரண மக்கள் உயிர் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில், தன்னுடைய குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் அவர்களுக்கான எதிர்காலத்தை உறுதி செய்துவிட்டாவது உயிர் விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் எல்லைகளை நோக்கி தற்போது படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகள் இதற்கு முறையான வழிகாட்டுகளை உருவாக்கி அவர்களுக்கு வாழ்க்கையையும் நம்பிக்கையும் உறுதி செய்ய வேண்டும் என்பதை மனித நேயத்தை விரும்பும் ஒவ்வொருவரின் எண்ணமாக உள்ளது. ஏனெனில் தரை வழியே எல்லையை கடந்து செல்வது அப்படி ஒன்றும் பாதுகாப்பான ஒன்று அல்ல. பல்வேறு ஆபத்துக்களை கொண்டது. 


Advertisement

Advertisement
[X] Close