[X] Close

தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு

High-Court-orders-Tamil-Nadu-government-to-take-action-against-homosexual-harassment
மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகள் கொண்டு வர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த இரு பெண்கள்,  நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர். 
இந்நிலையில், இருவரையும் காணவில்லை என அவர்களின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து அப்பெண்கள் தரப்பிலும், தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
image
சில மாதங்களுக்கு முன் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்படியிருக்கும்போது தற்போது இப்படியொரு வழக்கு பதிவாகியிருக்கிறது. வழக்கின் முந்தைய விசாரணையின்போது, தாங்கள் அமல்படுத்திய உத்தரவுகளை நடைமுறைப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர், அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டார். அப்போது அவர் ‘நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூன்றாம் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களை எப்படி கையாள வேண்டும்’ என்பது குறித்தும், அவர்களை துன்புறுத்த கூடாது எனவும் காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து காவலர்களுக்கு காவலர் பயிற்சி மையம் மூலமாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
விளக்கத்தை தொடர்ந்து, நீதிமன்றம் கவனத்திற்கு மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களைளை காவல்துறையினர் துன்புறுத்துவது தொடர்பான பார்வை கொண்டுசெல்லப்பட்டது.
image
இதையடுத்து, “மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை துன்புறுத்தக் கூடாது” என காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களை காவல்துறையினர் துன்புறுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் நடத்தை விதிகளில், புதிய விதியை கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், ஒடுக்கப்பட்டோர் நலனுக்கு பல சீர்திருத்தங்களை செய்து வரக்கூடிய மாநில அரசு ஒரு முன்னுதாரணமாக இருந்து, மூன்றாம் பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்னேற சாதகமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஊடகங்கள் இதுபோன்ற செய்தியை கையாளும்போது சுயகட்டுப்பாடுடனும், வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இந்த விஷயத்தில் ஊடகத்தினர் விழிப்புடன் இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்து, அக்டோபர் 4 ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Advertisement

Advertisement
[X] Close