Published : 01,Sep 2021 11:36 AM
சென்னை: ஜாமீனில் வந்த பாஜக பிரமுகரை கடத்தியதாக 8 பேர் கைது

சென்னையில், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பாஜக பிரமுகரை கடத்திச் சென்று கட்டிவைத்து அடித்ததாக 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் போட்கிளப் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், வங்கியில் கடன் வாங்கித் தருவதாக 92 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். பாஜக பிரமுகரான இவர், அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நேற்று கையெழுத்து போட்டுவிட்டு திரும்பியவரை ஒரு கும்பல் கடத்திச் சென்றது.
இந்நிலையில், போரூர் பகுதியில் ஓர் உடற்பயிற்சி கூடத்தில் அவரை கட்டிவைத்து அடித்து உதைத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து நாகராஜின் செல்போன் மூலம், அவரது இருப்பிடத்தை அறிந்த காவல் துறையினர் அவரை மீட்டதோடு, கடத்தலில் ஈடுபட்ட மனோகரன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.
மனோகரனிடம் நாகராஜ் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில், இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.