[X] Close

ஒவ்வொரு ஆண்டும் தொடரும் இயற்கையின் துயரம்: காசிரங்கா பூங்காவின் இப்போதைய நிலை என்ன?

சிறப்புக் களம்

Over-70-percent-of-Kaziranga-national-park-submerged-by-flood-every-year-becomes-nightmare-for-animals

ஒவ்வொரு ஆண்டும் அசாமில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதில் பெரிதும் பாதிக்கப்படுவது காசிரங்கா தேசிய பூங்காவாகத்தான் இருக்க முடியும். இந்தாண்டும் காசிரங்கா தேசியப் பூங்காவை மழை வெள்ளம் விட்டுவைக்கவில்லை. இப்போது இந்தப் பூங்காவின் 70 சதவிகித நிலப்பரப்பு வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பூங்காவில் இருக்கும் ஏராளமான விலங்குகள் இறந்திருக்க கூடும் என சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இப்போது வரை வனத்துறை கணக்கின்படி 4 மான்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற உயிரினங்கள் பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.


Advertisement

image

உலகிலேயே ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் இருக்கும் இடம் அசாம் மாநிலத்தில் இருக்கும் காசிரங்கா தேசியப் பூங்காதான். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தப் பூங்காவில் இருக்கும் காண்டாமிருகங்களை வேட்டையாட பல்வேறு குழுக்கள் படையெடுத்தன. பல காண்டாமிருகங்களை, அதன் ஒற்றை கொம்புக்காக மனிதர்கள் வேட்டையாடினார். பின்பு சுதாரித்துக்கொண்ட மத்திய, மாநில அரசுகள் காண்டாமிருகங்களின் வேட்டையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தன. இதன் விளைவாக இப்போது வேட்டையாடுதல் குறைந்து காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இப்போது 2300 க்கும் அதிகமான காண்டாமிருகங்கள் காசிரங்காவில் நிம்மதியாக நடமாடமுடிவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

image

மனிதர்களால் சில ஆண்டுக்காலம் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களை அரசு காப்பாற்றிவிட்டது. ஆனால் ஆண்டுதோறும் நிகழும் இயற்கை சீற்றமான மழை வெள்ளத்தில் இருந்து காசிரங்கா தேசியப் பூங்காவை காப்பாற்ற முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. இந்த மழை வெள்ளத்தால் காண்டாமிருகங்கள் மட்டுமல்ல மான், புலி, காட்டு முயல் போன்ற ஜீவன்களும் ஆண்டுதோறும் உயிரிழக்கிறது. அசாம் உள்ளிட்ட பிரம்மபுத்திரா வடிநிலப் பகுதிகளில் ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில் மோசமான வெள்ளம் ஏற்படும். கடந்தாண்டு ஏற்பட்ட பெரு மழையினால் நேர்ந்த வெள்ளத்தில் காசிரங்கா தேசியப் பூங்காவின் 85 சதவிகித நிலப்பரப்பு நீரில் மூழ்கியது.

image


Advertisement

இந்த பெருவெள்ளம் காரணமாக 8க்கும் மேற்பட்ட ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம், நூற்றுக்கும் மேற்பட்ட மற்ற உயிரினங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தன. வெள்ளத்துக்கு பயந்து சாலையை நோக்கி ஓடிவந்த மான்கள், முள்ளம் பன்றி ஆகியவை வாகனத்தில் அடிப்பட்டு உயிரிழந்த பரிதாபச் சம்பவங்களும் நடந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த உயிரிழப்பு தொடர்வதாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். தற்போதைய சூழல் போன்றே 1988ல் இருந்து 6 மிகப்பெரிய வெள்ளத்தை காசிரங்கா தேசிய பூங்கா கண்டுள்ளது. அதில் 4 முறை 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளன. இந்த பூங்காவில் இருந்த 90 சதவிகித மான்கள் அருகிலுள்ள மலைப் பகுதிக்கு சென்றுவிட்டன.

image

புல் தரைகள் அனைத்தும் மூழ்கிவிட்டன. இதனால் விலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காட்டெடுமை, காண்டாமிருகங்கள் ஆகியவை புற்களைத் தான் உணவாக உண்டு வாழ்கின்றன. இதில் மான்கள் புதிதாக வளர்ந்து நிற்கும் புற்களைத் தான் உண்ணும் என்பதால் அதன் உணவு தேவை பூங்கா நிர்வாகத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. காசிரங்கா பூங்காவில் தாவரங்களின் வளர்ச்சிக்கு வெள்ளம் அவசியமான ஒன்று தான். ஆனால் தொடர்ச்சியான வெள்ளப் பெருக்கு மிகவும் ஆபத்தானது என்று சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச் சுழல் ஆர்வலரான மெஹூல் "முன்பெல்லாம் 10 ஆண்டுக்கு ஒருமுறை அசாமில் வெள்ளப் பெருக்க ஏற்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதிகமழை பெய்கிறது. அசாம் மாநிலத்துக்கும் காசிரங்கா பூங்காவுக்கும் வெள்ளம் அவசியமானதுதான் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் இப்படி அழிவு ஏற்படுவது வேதனை அளிக்கிறது. இதற்கு பருவநிலை மாற்றம் மட்டுமே காரணமாக இருக்க முடியும். ஆனால் இயற்கை மேல் பழியை சுமத்தி நம்மால் தப்பிக்க முடியாது. விலங்குகளை காக்க மாற்று நடவடிக்கை குறித்து சிந்திக்க வேண்டும். இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் காசிரங்கா பூங்காவில் விலங்குகளை பார்க்க முடியாது" என்று கவலை தெரிவிக்கிறார்.

image

காசிரங்காவுக்கு மழை ஏன் அவசியம் ?

காசிரங்காவை பொறுத்தவரை ஆற்றுடன் கூடிய சுற்றுச் சூழல் அமைப்பை கொண்டுள்ளது. காசிரங்கா புல்வெளிகளுக்கு சிறப்பு வாய்ந்தவை, இந்த வனத்தையொட்டி ஓடும் ஆற்றினால்தான் அவை சுத்தப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வெள்ளத்துக்கு பின்பும் காசிரங்காவில் இருக்கும் புல்வெளிகள் சுத்தமாகிறது. எனவே காசிரங்காவுக்கு வெள்ளம் அவசியம். வெள்ளம் வரவில்லை என்றால் இங்கு நோய் பரவும் விலங்குகள் அழியும். காசிரங்காவில் ஆரோக்கியமான சூழல் வேண்டுமென்றால் வெள்ளம் வர வேண்டும். வெள்ளம் காரணமாக விலங்குகளின் உயிரிழப்பை தவிர்க்க முடியாது. ஆனால் விலங்குகளை பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளும் வனத்துறை மேற்கொண்டு வருகிறது.

image

இது குறித்து காசிரங்கா தேசியப் பூங்காவின் இயக்குநர் பி.சிவகுமார் கூறும்போது "பூங்காவையொட்டிய சாலைப் பகுதிகளில் 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்ற விதியை கடுமையாக பின்பற்றி வருகிறோம். இதன் மூலம் விலங்குகள் வாகனங்களில் மோதி உயிரிழப்பதை கட்டுப்படுத்த முடியும். மேலும் பூங்காவை சூழ்ந்திருக்கும் வெள்ளம் இன்னும் ஓரிரு நாளில் வடிந்துவிடும். இதற்கு மேல் கடுமையான மழைப் பொழிவு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது" என நம்பிககையுடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close