[X] Close

துவண்டு வீழும் தருணங்களில் தூக்கிவிடும் ஈர்ப்பிசை! - தமிழ் சினிமாவில் 'யுவனிசம்'

சிறப்புக் களம்

yuvan-shankar-raja-birthday-special-article

புல்லாங்குழல் மீதமர்ந்து நாட்டியமாடும் விரல்களுக்கு சொந்தக்காரன்; விட்டேத்தி மனநிலையை ஆற்றுபடுத்துவோன்; வெறுமை வாழ்வின் சுடரொளி; இசைவழியே இளைப்பாற்றும் ஞானக்குழலோன்; கானங்களின் காதலன்; கரைந்துபோகும் கணங்களின் மீட்பன்; தீரா இசை ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து ஓடும் ஜீவநதி... 'யுவனிசம்' போற்றுவோரால் இவ்வாறெல்லாம் ஆராதிக்கப்படும் தமிழ்த் திரையிசை உலகின் தனிக்காட்டு ராஜாவான யுவனுக்கு இன்று பிறந்த நாள்!


Advertisement

வெறுத்துபோன வாழ்க்கையின் கரைந்துபோன கணங்களின் வலி ரேகைகளை சுமந்து உழலும் ஒருவனுக்கு யுவன் ஒரு தேவதூதன். யுவன் மொழியில் சொல்லவேண்டுமென்றால், ''வழிப்போக்கனின் வாழ்விலே இசையாக வருகிறாய். நான் கேட்கும் முன்னமே இளைப்பாறல் தருகிறாய்... நீ!''

image


Advertisement

எனினும், 'இளைப்பாறல் முடிந்ததும், போதும் போ என்கிறாய்' என்ற வரி மட்டும் யுவனுக்கு பொருந்தாது. காரணம், திகட்டாத இசைக்கு சொந்தக்காரர் யுவன். அவரின் இசை வாயில்போட்டதும் கரையும் வெல்லத்தைப்போல, காதுகளில் நுழைந்ததும் இதயத்தை உலுக்கி நரம்புகளின் வழியே நாட்டியமாடும். கத்தி அழும் குழந்தை, தாயைக் கண்டதும் ஆற்றுப்படுவதுபோல, டிப்ரேஷன்களால் சோர்ந்து போன மூளைக்கு யுவனின் பாடல்கள் தாயின் அரவணைப்போலத்தான் என்பதும் யுவனிசம் பின்பற்றுவோர் உணர்பவை.

வலிகளை வயலின் வழி வருடும் யுவன் தனது ஆரம்ப நாட்களை வலிகளுடனே எதிர்கொண்டார். அம்மாவின் விருப்பத்தின் பேரில் 1997-ஆம் ஆண்டு 'அரவிந்தன்' படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக நுழைந்த அந்த பதினாறு வயது சிறுவன் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. அடுத்த ஆண்டுகளில் வெளியான 'வேலை', 'கல்யாண கலாட்டா' படங்களின் பாடல்கள் விரும்பப்படவில்லை. 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'உனக்காக எல்லாம் உனக்காக' படத்தின் பாடல்கள் ஓரளவு பேசப்பட்டன. அடுத்து, 'தீனா' படத்தின் தீம் மியூசிக் ஸ்கோர் செய்ய, 'துள்ளுவதோ இளமை' படம், 'யாருயா இவன்?" என யுவனை யுகத்துக்கான இசைத் தலைவனாக அறிமுகப்படுத்தியது.

image


Advertisement

யுவனின் ஃபிலிமோகிராஃபியை தவிர்த்துவிட்டு, அவரது பாடல்களை பற்றி மட்டும் பேச அவ்வளவு இருக்கிறது. பருவ வயதை எட்டிய ஒருவரின் முதல் காதல் பூத்ததும், அவரைத் தூங்கவிடாமல் செய்யும் பாடல் 'இது காதலா முதல் காதலா' பாடலாகத்தான் இருக்கும். தொடக்கத்தில் வரும் அந்த ஹம்மிங்குடன் குழைந்த இசை அட்டகாசம் செய்யும்! மேக மூட்டத்திலிருந்து கசியும் முதல் மழைத் துளியைப்போல, யுவனின் வாய்ஸ் தொடங்கும் அந்த இடம், 'இந்தப் பாட்டுக்காகவே வாழ்க்கை முழுவதும் காதலிக்கலாம் போலயே' என தோன்றவைக்கும்.

சொல்லபோனால், யுவனின் இசைக்கு இருக்கும் ரசிகர்களைப்போல, அவரது வாய்ஸுக்காகவே ஒரு கூட்டம் இருக்கிறது. யுவனின் குரல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, 'அவரு வாய்ஸ்ல ஈரம் இருக்கு' என்பார். உண்மைதான்!

image

அதேபோல, 'கண்முன்னே எத்தனை கனவு' பாடலில், 'வயதுக்கு வந்த பெண்ணே வாடி முன்னே' என வரிகளில் வரும் பீட், யுவனின் வாய்ஸ் இரண்டுமே கலந்து துள்ளி குதிக்கவைக்கும். எந்த இடத்தில் யாருடைய குரல் பொருந்தும், ஹை பிட்ச், லோ பிட்ச் பேலன்ஸ் எல்லாத்தையுமே சரியாக கையாளத் தெரிந்தவனே இசையமைப்பாளன். யுவனுக்கு அது கைவந்த கலை!

நீங்கள் காதலிக்கப்போகிறீர்கள் என்றால், முதலில் செய்யவேண்டியவை யுவனின் ப்ளே லிஸ்ட்களை டவுன்லோட் செய்வது. காதலிக்கவில்லை என்றாலும் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்... மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்.

image

'மௌனம் பேசியதே' படத்தின் பிஜிஎம்மை மட்டும் ஓராயிரம் தடவை கேட்கலாம். அந்த பிஜிஎம்-ல் ஆன்மாவை உருக்கி கீபோர்டில் படரவிட்டிருப்பார் யுவன். 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' படங்களைப்பற்றி சொல்லித்தான் தெரியவேண்டியதில்லை. நா.முத்துகுமாரும், யுவனும் உலகத்தின் அத்தனை உணர்ச்சிகளை உருக்குலைத்து பாடல்களை வடித்திருப்பர். அதுவும் '7ஜி ரெயின்போ காலனி'யில் 'மியூசிக் ஆஃப் ஜாய்', 'வாக்கிங் டூ த ரெயின்போ' தீம் மியூசிக்குக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு.

வாழ்வின் எல்லா நம்பிக்கைகளும் உதிர்ந்து விழும் தருணங்களில், 'மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது' என தட்டிகொடுக்கும் 'புதுப்பேட்டை' படத்தின் 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாதே" பாடலை விட அருமருந்து வேறென்ன இருக்க முடியும்? துவண்டு வீழும் தருணங்களில் நம்மை தூக்கிவிடுவதும் யுவனின் இசையே!

image

காதல் மட்டுமல்ல, களக்காட்டின் கனன்று வீசும் வெயிலுக்கு ஏற்ற இசையையும் அவருக்கு கைகூடிவரும் என்பதை 'பருத்துவீரன்' படத்தின் மூலம் நிரூபித்திருப்பார். 'பருத்திவீரன்' அதுவரை இசையமைத்த படங்களிலே யுவனுக்கு முற்றிலும் வேறுவகையான படம். அந்தப் படத்திலும் தன்னுடைய கொடியை நாட்டிருப்பார்.

'யாமறிந்த இசைகளிலே 'கற்றது தமிழ்' பாடல்களை போன்ற இசையை இனிதாவதெனும் காணோம்' எனச் சொல்லும் அளவுக்கு உணர்வுகளோடு உறைந்த இசை கற்றது தமிழுடையது. இறகு ஒன்றை கையிலிருந்து அஞ்சலி விடுவிக்கும்போது, அந்த தீம் மியூசிக் ஒலிக்கத் தொடங்கும். அந்த இறகோடு இயைந்து நம் ஆன்மாவுடன் கூடிய சகலமும் பறந்துகொண்டிருக்கும். சிறுவயது ஆனந்தி அந்த இறகை பிடிக்க ஓடுவாள்; நாமும் அப்படித்தான் யுவன் மீட்டும் அந்த இசையில் நம் நினைவுகளைத்தேடி ஓடிக்கொண்டிருப்போம். 'so drink hot cofee, drink hot tea burn your lips, remember the people who remembers you' என ஜீவா சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒலிக்கும் இசை உலகின் ஆகச் சிறந்த மெய்மறந்தநிலை.

image

'பில்லா', 'மங்காத்தா' தீம் மியூசிக்கில் தீயை பற்ற வைத்திருப்பார். அது இன்று மட்டுமல்ல என்றுமே அணையாச்சுடராக எரிந்துகொண்டிருக்கிறது. 'பில்லா', 'மங்காத்தா' படங்களில் தீம் மியூசிக்குகளை தியேட்டரில் பட ரீலிஸ் அன்று கேட்கும் அனுபவம் அத்தனை அலாதியானது. மாஸ் காட்சிகளுக்கு யுனின் பேக்ரவுண்ட் உயிரூட்டியிருக்கும். அஜித் பைக் சீன்களெல்லாம் தியேட்டரின் திரை கிழியாத குறை. அப்படியொன்றை மீண்டும் போடுவீங்களா யுவன்?

ராவான 'ஆரண்ய காண்டம்' படத்தில், படத்துக்கான Mood-ஐ தன் இசையின் மூலம் கொஞ்சம் கூட பிசகாமல் பார்வையாளர்களுக்கு அப்படியே கடத்தியிருப்பார் யுவன். எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தெரியாமல் படத்துடனே ட்ராவலாகும் இசையை விருந்தாக்கியிருப்பார். அதேபோல 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில், டைட்டில் கார்ட் தொடங்கி எண்டு கார்டு வரை யுவனின் ஆதிக்கம்தான். தெறிக்கவிட்டிருப்பார்.

image

ம்... யுவன் ப்ளஸ் நா.முத்துகுமார் காம்போவை இன்றளவும் மிஸ் செய்பவர்கள் ஏராளம். தன் நண்பனின் பிரிவுக்கு பிறகு தடுமாறிக்கொண்டிருக்கிறார் யுவன். 2016-ல் வெளிவந்த 'தரமணி'க்கு பிறகு அவரிடம் அந்த தடுமாற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது. 'பியார் ப்ரேமா காதல்', 'மாரி 2' போன்ற படங்களில் அந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டு வந்தாலும், 'பழைய யுவனை' பார்க்கமுடியவில்லை என ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

'கம்பேக் கொடுங்க யுவன்' என ஒலிக்கும் ரசிகர்களின் குரலை, யுவன் பரிசீலிக்க வேண்டியது காலத்தின் தேவை. யுவனின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும், 'யுவன் இஸ் பேக்' என வெளிவரும் குரல்கள், 'எத்தன கம்பேக்' என ஒரு கட்டத்தில் சோர்வை ஏற்படுத்திவிடுகின்றன.

'வரணும் யுவன், யுவனாகவே வரவேண்டும்' என்பதுதான் இந்த பிறந்த நாளில் யுவன் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்!

-கலிலுல்லா


Advertisement

Advertisement
[X] Close