[X] Close

நட்சத்திரப் பட்டாளம் அணிவகுத்தாலும் படம் மொத்தமுமே 'அஜித்திசம்' | #10yearsOfMankatha

சிறப்புக் களம்

10-years-of-Mankatha-and-performance-of-Ajith

பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாள், வர்த்தகம் சார்ந்த தமிழ் சினிமாவின் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக அமைந்தது. இதே நாளில்தான் அஜித்தின் 50-வது படமாக வெளியானது 'மங்காத்தா'. அஜித்தின் கரியரில் ஒரு சிறப்பான படமாக அமைந்தது. அவரின் ரசிகர்கள் வாழ்நாள் முழுவதும் கொண்டாடும் வகையில் இந்த ஒற்றைப்படம் போதுமானது. இந்தப் படம் முக்கியத்துவம் பெறுவதற்கு பல காரணங்களும் உண்டு.


Advertisement

அதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பெரும்பாலும் 400 தியேட்டர்களை தாண்டி தமிழ்நாட்டிற்குள் வெளியானதில்லை. உதாரணத்துக்கு அந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய படங்களாக அமைந்த ரஜினியின் 'சிவாஜி', 'எந்திரன்' போன்றவை இந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களிலேயே வெளியாகின. ஆனால், இந்த எல்லையை உடைத்தது அஜித்தின் 'மங்காத்தா'. திரையிட்ட சிறிது நாட்களில் படத்தின் வெற்றி காரணமாக மற்ற படங்களை வெளியிட்ட தியேட்டர்கள் அனைத்தும் 'மங்காத்தா'வை வெளியிட ஆரம்பித்தன.

image


Advertisement

2007-ல் வரிசையாக மூன்று படங்களில் நடித்தார் அஜித். இதில் 'பில்லா' வெற்றி, அவரை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றது. ஆனால் அடுத்த மூன்று வருடங்களில் அஜித் கொடுத்தது இரண்டு படங்கள். 'ஏகன்', 'அசல்'. இரண்டுமே அட்டர் பிளாப். பெரும் தோல்வியில் துவண்டு அஜித்தும், அஜித்தின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய ஆசுவாசத்தை கொடுத்தது அடுத்து வெளியான 'மங்காத்தா'. அஜித்தின் 50-வது படமாக வெளிவந்த 'மங்காத்தா'வின் வெற்றிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் அஜித் என்ற நபராலே நிகழ்ந்தது.

தமிழ் சூப்பர் ஸ்டார்களின் மைல்ஸ்டோன் படங்கள் பெரும்பாலும் தோல்வியை தழுவியவையே. உதாரணத்துக்கு, ரஜினி, கமலின் 100-வது படங்கள், விஜய்யின் 50-வது படம் அனைத்தும் படுதோல்வியே அடைந்தன. இதில் விதிவிலக்காக விஜயகாந்தின் 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' அதிரடி ஹிட். இந்த வெற்றியை முறியடித்து, ரசிகர்களின் கொண்டாடட்டத்தின் உச்சாணியில் ஏற்றிவைத்தது 'மங்காத்தா' கண்ட வெற்றி. இன்றளவும் சூப்பர் ஸ்டார்களின் மைல்ஸ்டோன் படங்களில் 'வேற மாதிரி' ஹிட் கொடுத்தது 'மங்காத்தா' மட்டுமே.

image


Advertisement

இந்தப் படத்தை வெங்கட் பிரபு மற்ற நடிகர்களை வைத்துதான் முதலில் ஆரம்பிக்க இருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அஜித் இதில் உள்ளே வர, படத்துக்கான கிராஃப் வேற லெவலுக்கு உயர்ந்தது. வெங்கட் பிரபு பொதுவாகவே அஜித் ரசிகர். இதனால் 'மங்காத்தா'வை அவர் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார். அதிலும், அவர் அஜித்தை காண்பித்த விதம், குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. பொதுவாக தமிழ் நடிகர்கள் இமேஜ் என்ற கட்டமைப்புக்குள் இருப்பவர்கள்.

விதிவிலக்காக சிலர் இமேஜை பொருட்படுத்தாமல் நடித்திருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் உச்சமாக, சால்ட் அண்ட் பெப்பர் லுக், 'எத்தனை நாளுக்கு தான் நல்லவனாவே நடிக்கிறது' என வெளிப்படையாக சொல்லும் ஆன்ட்டி ஹிரோ கதாபாத்திரம் என ஹீரோவுக்கான அத்தனை கட்டமைப்புகளையும் உடைந்தெறிந்து அஜித் உச்சம் தொட்டார். அஜித் இதற்கு முன்னும் வில்லன் வேடங்கள் செய்துள்ளார். அதிலெல்லாம் உச்சமாக அமைந்தது 'மங்காத்தா' விநாயக் கதாபாத்திரம். படத்தில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் ஒரு ட்ரெண்ட் செட்டாக மாறி, பாலிவுட்டின் அமீர் கான் பின்பற்றும் அளவுக்கு சென்றது.

image

அர்ஜூன் தொடங்கி பிரேம்ஜி வரை படத்தில் நட்சத்திர பட்டாளம் அதிகம். ஆனால் ஒவ்வொருக்கும் முக்கியத்துவம் சரியாக கொடுக்கப்பட்டு இருந்தது. இதேபோல் படத்தின் இசை. அஜித் - யுவன் கூட்டணி என்றாலே, வெற்றி என எழுதிவைத்துவிடும் அளவுக்கு இந்தப் படத்தின் இசை இருந்தது. குறிப்பாக 'மங்காத்தா' தீம் மியூசிக். இன்றளவும் இந்த தீம் மியூசிக்கை மிஞ்ச எந்த தீம் மியூசிக்கும் இல்லை. இதேபோல் 'அம்பானி பரம்பரை' பாடல் கேட்டுவிட்டு யாரும் ஆடாமல் இருக்க முடியாது. யுவன் எத்தனையோ கமர்ஷியல் சினிமாக்களுக்கு இசை அமைத்திருப்பார். ஆனால் அதில் அவருக்கு லைஃப்டைம் படம் என்றால் அது 'மங்காத்தா'வை மட்டுமே சொல்ல முடியும். யுவனும் பக்கா அஜித் ரசிகர். இதனால் அஜித்திசத்தை தூக்கி காண்பிக்கும் அத்தனையும் செய்திருப்பார்.

'மங்காத்தா' மொத்தமுமே 'அஜித்திச'த்தை பக்காவாக வெளிப்படுத்தியிருக்கும், மங்காத்தாவுக்கு முன் அஜித்துக்கு பல படங்கள் வந்திருக்கின்றன. அதன்பின்பும் பல படங்கள் வந்துள்ளன. இனிமேலும் பல ஹிட்களை அஜித் கொடுக்கலாம். ஆனால், அஜித்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆல் டைம் ஃபேவரைட் 'மங்காத்தா' மட்டுமே இருக்க முடியும். ஏன் அஜித்தின் சினிமா கரியரிலேயே ஆல் டைம் பேவரைட் 'மங்காத்தா' என அடித்துச் சொல்லலாம்.

ஒட்டுமொத்தத்தில் 'மங்காத்தா' - Power of Ajith.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close