[X] Close

'இருளில் ஒரு நம்பிக்கைக் கீற்று' - ஆப்கன் அகதிகள் நிலை சொல்லும் அற்புதப் படம்

சிறப்புக் களம்

-A-Hope-in-the-Dark----A-wonderful-film-about-the-plight-of-Afghan-refugees

ஆப்கானிஸ்தான் மக்களும், அவர்களில் அகதிகளாக வெளியேறுபவர்களின் பரிதாப நிலை குறித்து நெஞ்சை உலக்கும் செய்திகளும், தகவல்களும் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படம், இருளுக்கு மத்தியிலான நம்பிக்கைக் கீற்றாக அமைந்துள்ளது. ஆப்கன் சிறுமி ஒருவர் தன்னை மறந்து துள்ளி குதித்தபடி தளிர் நடைபோடும் அந்தப் படம், இணையத்தை உற்சாகத்தில் ஆழ்த்தி நம்பிக்கையோடு பேசவைத்திருக்கிறது.


Advertisement

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற வாய்ப்பு கிடைத்தவர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் அடைக்கலம் தேடி வருகின்றனர். ஐரோப்பிய நாடான பெல்ஜியத்திற்கு இப்படி வருகை தந்த ஆப்கன் குடும்பம் ஒன்றின் புகைப்படத்தை அந்நாட்டு பிரதமர் கய் வெர்ஹோஸ்டாட் (Guy Verhofstadt) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். புகைப்படக் குறிப்போ, வேறு எந்த விளக்கமோ தேவைப்படாமல், பார்த்ததுமே அந்தப் படம் சொல்லும் செய்தியை எளிதாக புரிந்துகொள்ளும் அற்புதமான படம் அது.


Advertisement

பெல்ஜியம் ராணுவ விமான நிலையை நடைபாதையில் ஆப்கன் குடும்பம் ஒன்று நடந்து செல்லும் காட்சியை படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் படம். அதில், தந்தை ஒருவர் முதுகில் ஒரு பை கையில் ஒரு பையை வைத்துக்கொண்டு, ஒரு பிள்ளையை இன்னொரு கையால் பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருக்க, அவரது மனைவி முதுகில் சுமந்த பைகளோடு வந்து கொண்டிருக்கிறார். அம்மாவுக்கு பின்னே சிறுமி ஒருவர் வந்து கொண்டிருக்கிறார்.

அவர்களின் மகளான அந்தச் சிறுமி, மாறிய சூழலில் சுதந்திரத்தை உணர்ந்தவராக, துள்ளிக்கொண்டு நடந்து வருகிறார். இந்தக் காட்சிதான் நெஞ்சை அள்ளுவதாக இருக்கிறது. சிறுமியின் துள்ளல் நடையும், அதன் பின்னே இருக்கும் உற்சாகமும், எத்தனையோ செய்திகளை சொல்லிவிடுகின்றன.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளரான ஜோனா ஜெரோன் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த அருமையான புகைப்படத்தை பெல்ஜியம் பிரதமர், 'அகதிகளை பாதுகாக்கும்போது இதுதான் நடக்கும். பெல்ஜியத்திற்கு நல்வரவு சின்ன பெண்ணே!' எனும் குறிப்புடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.


Advertisement

இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உற்சாகமாகி, ஆப்கானிஸ்தான் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு மத்தியில் உலகம் நீட்டும் நேசக்கரத்தால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நல்ல பலனின் அடையாளமாக இந்தப் படத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்தப் படம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். நரகமாக தோன்றிய ஒரு நாளில் இந்தப் படம் என்னை புன்னகைக்க வைத்தது என்று அதில் ஒருவர் கூறியுள்ளார்.

- சைபர்சிம்மன்


Advertisement

Advertisement
[X] Close