[X] Close

தலிபான் VS ஐ.எஸ். கோராசான் - கேள்விகளுக்கு வித்திடும் நடவடிக்கைகள்!

உலகம்

History-of-Taliban-and-Khorasan

சர்வதேச சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தலிபான், ஐஎஸ் இரண்டுமே மத அடிப்படை வாதத்தை பின்பற்றுபவை. என்றாலும் இவ்விரு அடிப்படைவாத குழுக்களுக்கும் இடையே உள்ள பகைமை இருந்தது. இந்நிலையில் காபூல் விமான நிலைய தாக்குதல் பல்வேறு இவ்விரு இயக்கங்கள் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.


Advertisement

தலிபான், ஐஎஸ் இரண்டுமே வன்முறையும், ஆயுதமும், உயிர்ப்பலியுமே தங்கள் லட்சியத்தை அடைவதற்கான வழி என்று நம்பும் ஆயுதக் குழுக்கள். ஷரியத் சட்டத்தை முழுமையாக ஏற்ற குடியரசை நிறுவ ஆர்வம் காட்டுபவை. சன்னி இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தை பின்பிற்றுபவை. கோட்பாடுகளில் இவ்விரு இயக்கங்களும் ஒரே திசையில் பயணித்தாலும் போர்க்களத்தில் எதிரிகளாகவே நின்றன. இந்த பகைமை 2015ஆம் ஆண்டுக்கு பிறகு மேலும் வீரியமானது. 1994-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்திற்கு பின் தலிபான் வலுவடைந்தது. 1980-ல் சோவியத் யூனியனை எதிர்த்து போரிட்ட மாணவர்களால் உருவான போராளிக் குழுக்களை இணைத்து முல்லா முஹமது ஓமர் தலிபான் இயக்கத்தை வலுப்படுத்தினார். தொடக்கத்தில் ஹெராத் மாகாணத்தை கைப்பற்றிய தலிபான் 1996-ல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இதன்பின்னர் தலிபான் ஆட்சி அமெரிக்கப் படையால் அகற்றப்பட்டது.

இந்நிலையில்தான் சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வந்த ஐ.எஸ் அமைப்பு 2015-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்குள் கிளை பரப்பியது. தலிபானிலிருந்து விலகியவர்கள், பிற ஜிகாதிகள் ஆகியோரை இணைத்து ஐ.எஸ் கோராசன் மாகாணம் என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது. அவர்கள் கூற்றுப்படி ஈரான், துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சில பகுதிகளை உள்ளடக்கியதுதான் கோரோசான் மாகாணம். ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் பேர் இந்த இயக்கத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அஸ்லம் பரூக்கி என்பவரை ஐஎஸ் கோராசான் இயக்கம் தங்கள் தலைவராக அடையாளப்படுத்துகிறது. கொடூரக் கொலைகளை செய்வதற்கு இந்த இயக்கம் சற்றும் தயங்குவதில்லை. மகப்பேறு மருத்துவமனை ஒன்றை தாக்கி, 16 கர்ப்பிணிப் பெண்களை கொன்றதே இதற்குச் சான்று. ஹக்கானி நெட்வொர்க், தெஹ்ரிக் இ தலிபான், ஜெய்ஷ்-இ-முஹமது, லஷ்கர் இ தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஐஎஸ் கோராசான். தலிபானும், ஐஎஸ் கோரோசானும் மோதல் போக்கை கடைப்பிடித்தாலும், அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீதான எதிர்ப்பில் இணைந்தே நிற்கின்றன.


Advertisement

இந்நிலையில்தான் காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு ஐஎஸ் கோரசான் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், தலிபானின் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள பகுதியில், அந்த அமைப்பைத் தாண்டி ஐஎஸ் கோராசான் எப்படி தாக்குதல் நடத்தியது என்ற கேள்வி எழுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அந்நாட்டின் உத்தரவின் பெயரிலேயே காபூல் விமான நிலையத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர். தலிபானும், ஐஎஸ் கோராசானும் தனித்து இயங்குகின்றனவா, இல்லை இணைந்து இயங்குகின்றனவா? என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க, இவ்விரு அடிப்படைவாதக் குழுக்களும் மனித குலத்திற்கு ஆபத்தாக இருக்கின்றன என்பதே உண்மை.


Advertisement

Advertisement
[X] Close