[X] Close

மீண்டும் மேன்செஸ்டர் அணியில் மிரட்டவுள்ள கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ

விளையாட்டு

Footballer-Cristiano-Ronaldo-is-set-to-rejoin-Manchester-United-after-12-years
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூவண்டஸ் அணியில் இருந்து விலகி, 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைவது உறுதியாகியுள்ளது.
 
துடிப்புமிக்க ஆட்டம், விவேகமான பாய்ச்சல், இரு கால்களில் விந்தைகள் புரியும் நுட்பம், தலைமைத்துவம் உள்ளிட்டவற்றால் உலகமெங்கும் பல கோடி ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார் ரொனால்டோ. ரியல் மேட்ரிட் கிளப்பில் தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய ரொனால்டோ அந்த அணியின் ஆணி வேராகவே திகழ்ந்தார். கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஜாம்பவான்களில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை அமைத்துக் கொண்டவர் போர்ச்சுக்கல்லின் போராட்ட குணம் மிக்க வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது 18ஆவது வயதில் தேசிய சீனியர் அணியில் தடம் பதித்த ரொனால்டோவை, 2003 ஆம் ஆண்டு முதல் முறையாக சீனியர் கிளப் அணிகளில் மிகவும் பிரபலமான இங்கிலாந்தின் மேன்செஸ்டர் யுனைடெட் ஒப்பந்தம் செய்து கொண்டது. TEENAGE வீரர்களிலேயே பெருந்தொகைக்கு ஒப்பந்தமானவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார் ரொனால்டோ.
 
2009ஆம் ஆண்டு வரை அந்தக் கிளப்பில் விளையாடிய கிறிஸ்டியானோ, 292 போட்டிகளில் விளையாடி 118 கோல்களை அடித்தார். ரொனால்டோவின் திறமையைக் கண்ட பல கிளப்புகளும் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்ட நிலையில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் கிளப், இந்திய மதிப்பில் சுமார் 694 கோடி ரூபாய்க்கு அவரை ஒப்பந்தம் செய்தது. மேட்ரிட் கிளப்பிற்காக 451 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, அந்த கிளப் வரலாற்றிலேயே அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார். மேலும் மேட்ரிட் அணியில் விளையாடிய காலகட்டத்தில் 4 முறை கால்பந்து உலகின் உயரிய விருதான பேலான் டி ஆர் விருதையும் வென்றார்.
 
image
பின்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து கிளப்பில் இணைந்தார் ரொனால்டோ. ஜூவண்டஸ் அணிக்காக விளையாடிய வீரர்களிலே அதிகவேகமாக 100 கோல்களை அடித்தவர் என்ற சாதனையும் அங்கு நிகழ்த்தினார் ரொனால்டோ.
 
இந்நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு பிரிமியர் லீக் போட்டிகளில் தனிச்சிறப்பு கொண்ட தனது தாய் கிளப்பான மேன்செஸ்டர் யுனைடெட்டில் இணைகிறார் ரொனால்டோ. மேன்செஸ்டர் சிட்டி அணி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையின் கடைசி நிமிடத்தில் பின் வாங்கிவிட்ட நிலையில், இளங்கன்றாக கிளப்பில் இருந்து சென்ற ரொனால்டோவை கட்டுக்கடங்காக காளையாக மீண்டும் அணிக்கு அழைத்துள்ளது மேன்செஸ்டர் யுனைடெட்.
 

Advertisement

Advertisement
[X] Close