[X] Close

ஆப்கனில் தலிபான் வெற்றியால் பாகிஸ்தான் பெறப்போவது நன்மையா, இழப்பா? - ஓர் அலசல்

சிறப்புக் களம்

Pakistan-will-get-gain-or-lose-from-the-Taliban-victory-in-Afghanistan

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய விவகாரத்தில் பாகிஸ்தான் வெளிப்படுத்தியுள்ள நிலைப்பாடு, அந்நாட்டுக்கு எந்த மாதிரியான விளைவுகளை கொடுக்கும் என்பதையும், பாகிஸ்தான் அரசின் பல வருட தலிபான் ஆதரவில் செய்யப்போகும் 'அறுவடை'களையும் பற்றி சர்வதேச அரசியல் நோக்கர்களின் பார்வையை சற்றே விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் தங்களின் நிலை பற்றி யோசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக ஆப்கன் விவகாரத்தில் முக்கியமான, அதேநேரம் குழப்பான 'ரோல்' வகித்து வரும் நாடு என்றால், அது பாகிஸ்தான் எனலாம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவின் வலுவான கூட்டாளியாக தங்களை காட்டிக்கொள்ளும் பாகிஸ்தான், பல வருடங்களாக தலிபான்களுக்கு மறைமுக ஆதரவையும் வழங்கி வருகிறது என்பது பலருக்கும் தெரிந்த உண்மையே. இந்த முரண்பாடு, தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய  பின்னும் தொடர்கிறது.

தலிபான்கள் காபூலை கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், "ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இனக்குழுக்கள் உடன் பரஸ்பர ஆலோசனை நடத்தி ஆட்சியை அமைக்க வேண்டும். அதுவே அமைதிக்கான ஒரே நம்பிக்கை" என்று தலிபான்கள் ஆட்சியமைக்க மறைமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பாகிஸ்தானின் ராணுவத் தலைவரோ, "தலிபான் தலைவர்கள், ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை காப்பது தொடர்பாக சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்" என்று காட்டமாகப் பேசினார்.


Advertisement

இவர்கள் இருவரின் பேச்சும் தலிபான்கள் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஒத்துப்போகின்றன. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானோ, அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிராக, "தலிபான்கள் வெற்றி மூலமாக ஆப்கானிஸ்தான் தனது அடிமை விலங்கை உடைத்துள்ளது" என்று வெற்றியை வரவேற்றார். பாகிஸ்தானின் இந்த முரண்பாட்டுக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகள் பலவும் தலிபான் தலைமையிலான புதிய அரசாங்கத்தை அங்கீகரிப்பதில் இருந்து பின்வாங்கி வருகின்றன.

image

ஆனால், பாகிஸ்தானுடன் இணைந்து ரஷ்யா, சீனா, ஈரான் போன்ற ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் காபூலில் தங்கள் தூதரகங்களை திறந்து, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளன. தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா கொண்டிருந்த நிலையில், ஆரம்பம் முதலே ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டு நாடுகளும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான தலிபான் போராட்டத்தை ஆதரித்து வருகின்றன. மேலும், ஈரானும் ரஷ்யாவும் ஆப்கானிஸ்தானின் அரசியலிலும் மிகவும் ஈடுபாடு காட்டிவருகின்றன.


Advertisement

இவர்களின் ஈடுபாட்டுக்கும், தலிபான்கள் உடனான உறவுக்கும் உதாரணமாக, 2019-ல் தலிபான் தலைவர்கள் உடனான சந்திப்பை அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்தபோது நடந்ததைச் சொல்லலாம். அப்போது, ட்ரம்ப் மீட்டிங்கை ரத்து செய்த பிறகு, அமெரிக்க தரப்புக்கு என்ன பதில் கொடுக்கலாம் என்பதை ரஷ்யா மற்றும் ஈரான் தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசித்தே தலிபான் தரப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது. என்றாலும், இந்த இரண்டு நாடுகளை விட பாகிஸ்தான் மட்டுமே தலிபான் தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதிக்கமும், அவர்களுக்கு மிகப்பெரிய உதவியையும் செய்துள்ளது.

பாகிஸ்தானின் 'தலிபான் ஆதரவு' வரலாறு: கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஆப்கன் புரட்சி படைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவை வழங்கி வருகிறது. 1970-களின் முற்பகுதியில் இருந்து நடந்து வரும் ஆப்கன் புரட்சியில் அப்போது இருந்தே, அந்நாட்டின் பல்வேறு பிரிவு படைகளுக்கு பாகிஸ்தான் ராணுவ ஆதரவையும், அரசியல் ஆதரவையும் வழங்கியுள்ளது. 1980-களில், சோவியத் படையெடுப்புக்கு எதிராக போராடிய ஆப்கன் முஜாஹிதீன்களுக்கு முக்கிய ஆதரவாக இருந்தது பாகிஸ்தான் மட்டுமே.

அப்போது போரில் இருந்து தப்பிவந்த லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை கவனித்து கொண்டதும் பாகிஸ்தானே. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தானும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்தன. சோவியத் எதிர்ப்பு மனநிலை கொண்ட அமெரிக்கா, அப்போது பாகிஸ்தான் மூலம் தனது வேலைகளைச் செய்யத் தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவம் மூலமாக சுமார் 80,000-க்கும் மேற்பட்ட முஜாஹிதீன்களுக்கு பயிற்சி கொடுத்தது மட்டுமில்லாமல், அவர்களுக்கு 2 முதல் 3 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பில் உதவிகளையும் ரகசியமாக செய்தது அமெரிக்கா.

image

1989-ல் சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற்ற பின்னரும், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து முஜாஹிதீன்களுக்கு பயிற்சி அளித்தது. இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று 1990-ல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போரின்போது, பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் ராணுவ அதிகாரிகள், ஆப்கன் அரசுக்கு எதிராக மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட தலிபான்களுக்கு உதவியதாக இன்றளவும் பேசப்படுவதுண்டு. இந்த ஆதரவு மற்றும் உதவிக்காக சர்வதேச எதிர்ப்புகளையும் பாகிஸ்தான் சம்பாதிக்கத் தொடங்கியது.

என்றாலும், தனது தலிபான் ஆதரவை பாகிஸ்தான் கைவிடவில்லை. 1996-ல் முதல்முறையாக தலிபான் ஆட்சியை கைப்பற்றியபோது அதனை, அதிகாரபூர்வமாக அங்கீகரித்த மூன்று நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் அமெரிக்க வல்லரசு, தலிபான்களுக்கு எதிரியாக மாறிய பின்பும், பாகிஸ்தான் அவர்களை ஆதரிப்பதை நிறுத்தவில்லை. எந்த அளவுக்கு என்றால், அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு கொடுத்து வந்த நிதியை, அமெரிக்காவுக்கே தெரியாமல் தலிபான்களுக்கு ரகசியமாக செலவிட்டது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான 'ஐஎஸ்ஐ'-யின் முன்னாள் தலைவரான ஜெனரல் ஹமீத் குல் 2014-ல் ஒரு தொலைக்காட்சி உரையாடலில் இந்த உண்மையை ஒப்புக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில், "ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனை அமெரிக்காவின் உதவியுடன் ஐஎஸ்ஐ தோற்கடித்தது என்பது வரலாற்றில் எழுதப்பட்டுவிட்டது. அதேபோல் இன்னொன்றும் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. அது, ஐஎஸ்ஐ, அமெரிக்காவின் உதவியுடன் அமெரிக்காவையே தோற்கடித்தது என்பதுதான்" என்று வெளிப்படையாக பேசினார்.

தலிபான் வெற்றியால் பாகிஸ்தானுக்கு லாபமா? - தலிபான் வெற்றிக்கு பாகிஸ்தான் இவ்வளவு உழைக்க காரணம், இந்தியா மட்டுமே. தற்போது தலிபான் பெற்றுள்ள வெற்றியால் பாகிஸ்தானுக்கு கிடைக்கப்போகும் மிகப்பெரிய ஆதாயம் என்னவென்றால், ஆப்கானிஸ்தானில் இந்தியா தனது செல்வாக்கை இழக்கும் என்பது மட்டுமே. ஏனென்றால் சமீபகாலமாக ஆப்கானிஸ்தான் அரசுடன் இந்திய நெருக்கம், தனது நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்க கூடிய விஷயமாக பார்த்து வந்தது பாகிஸ்தான். இதேபோல் வர்த்தகமும் முக்கிய காரணம்.

ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் மூலமாக ஆப்கானிஸ்தானுடனான தனது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், மத்திய ஆசிய நாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் மூலமாக தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ளவும் பாகிஸ்தான் திட்டமிடுகிறது. இதனால் தலிபான் வெற்றியை முக்கியமாக பார்க்கிறது பாகிஸ்தான். ஆனால் தலிபான் வெற்றியால், பாகிஸ்தான் பாதுகாப்பு தொடர்பான மிகப்பெரிய விளைவுகளை சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

தலிபான் வெற்றியை, பாகிஸ்தானில் உள்ள உள்நாட்டு தீவிரவாத குழுக்கள் மிகப்பெரிய ஊக்கமாக எடுத்துக்கொண்டுள்ளன என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். குறிப்பாக 'பாகிஸ்தானின் தலிபான்' எனப்படும் 'டிடிபி (TTP) தீவிரவாத குழு'வினர் இந்த வெற்றியை முக்கியமாக பார்க்கத் தொடங்கியுள்ளனர். தீவிரவாதக் குழுவான டிடிபி, பாகிஸ்தானில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பல வன்முறை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளன. 2014-ல் பெஷாவரில் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்ட பள்ளிக்கூட தாக்குதல் உட்பட பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை டிடிபி அமைப்பு நடத்தியிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக இந்த அமைப்பின் தலைவர்கள் ஆப்கானிஸ்தானில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த அமைப்பின் நடவடிக்கை குறைந்திருந்தது. ஆனால், சில நாள்கள் முன் ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள், இந்த அமைப்பின் சில தலைவர்களை சிறையில் இருந்து விடுத்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகிஸ்தானில் அடுத்து நடக்கவுள்ள சம்பவங்கள் உலக நாடுகள் மத்தியில் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

- மலையரசு


Advertisement

Advertisement
[X] Close