Published : 26,Aug 2021 04:07 PM

கேரளாவிற்கு என்ன ஆச்சு? ஓணம், பக்ரீத் பண்டிகைக்கான தளர்வால் கொரோனா அதிகரிப்பா?- ஓர் பார்வை

What-is-the-reason-for-the-increase-in-covid-in-Kerala
கேரளாவில் பக்ரீத், ஓணம் என ஒவ்வொரு பண்டிகையின்போதும் தளர்வுகள் கொண்டு வரப்படும் போதெல்லாம் அங்கு பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
 
பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இறங்கு முகத்தில் இருக்கின்றன. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் மிக அதிக பாசிடிவ் விகிதம் காணப்படுகிறது. கேரளாவில் கடந்த 20-ம் தேதி வரை தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 20,000 என்ற அளவில் பதிவாகி வந்தது. கடந்த 21-ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. 21-ம் தேதி 17,106 பேருக்கும், 22-ம் தேதி 10,402 பேருக்கும், 23-ம் தேதி 13,383 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாக கேரள மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
 
இச்சூழலில், நேற்று முன்தினம் (ஆக. 24) திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் பழையபடி அதிகரித்தது. 24-ம் தேதி நிலவரப்படி 24,296 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கேரள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அதிர்ச்சி அளிக்கும்விதமாக நேற்றைய (ஆக. 25) கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில மாதங்களைக் காட்டிலும் உச்சத்தை தொட்டது. நேற்றைய நிலவரப்படி 31,445 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்திருப்பதால் சுகாதாரத்துறை வல்லுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்புகளில் 68 சதவிகிதம் கேரளாவில் பதிவாகியிருக்கிறது.
 
image
தற்போதைய நிலவரப்படி, 1,70,292 பேர் இப்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு, மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
 
கேரளாவில் தொற்று பரவல் விகிதம் 19 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படுவோரில் 19.03 சதவீதத்தினருக்கு நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. அடுத்த சில வாரங்கள் கேரளாவுக்கு சோதனையான காலகட்டம் எனத் தெரிகிறது. ஓணம் பண்டிகையையொட்டி கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதால் எதிர்வரும் நாட்களில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அங்குள்ள மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
இதையடுத்து மீண்டும் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. ‘’ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும். பொதுமக்கள் இதைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
image
என்ன காரணம்?
 
கேரளாவில் பக்ரீத், ஓணம் என ஒவ்வொரு பண்டிகையின்போதும் தளர்வுகள் கொண்டு வரப்படும் போதெல்லாம் அங்கு பாதிப்பு எண்ணிக்கைகள் தடாலடியாக அதிகரித்து வருகிறது.
 
கேரளாவில் கடந்த ஜூலை மாதம் பக்ரீத் பண்டிகைக்காக ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அப்போதே இந்திய மருத்துவ சங்கம், ‘இத்தகைய தளர்வுகள் தேவையற்றது; கேரள அரசு இதை திரும்பப் பெற வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும் கேரள அரசு தனது முடிவை மாற்றவில்லை. எதிர்பார்த்தபடியே பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்தது. அதன்பிறகு கடும் கட்டுப்பாடுகளை கேரளா அறிவித்தது.
image
 
அதனைத்தொடர்ந்து, மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சற்றேக் குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஓணம் பண்டிகையால்.
 
கேரளாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பண்டிகையையொட்டி கொரோனா விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. மாநிலத்தின் முக்கிய பண்டிகைக்காலம் என்பதால் அரசும் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை.
image
 
இதன்விளைவாக கேரளாவில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து உள்ளது. ஓணம் பண்டிகையின்போது திரண்ட பொதுக் கூட்டங்களின் வெளிப்பாடு அடுத்த 7-10 நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே தொற்று ஏறுமுகத்தை அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரளாவில் செரோ சர்வே மதிப்பு குறைவாக இருப்பதும் அங்கு இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா எதிர்ப்பு சக்தியை கணக்கிடும் ‘செரோ சர்வே’ நடத்தப்பட்டது. அதில் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக கேரளாவில் 44.4% மக்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற்றுள்ளனர்.
 
கேரளா தமிழ்நாட்டிற்கு அருகில் இருப்பதால் இந்த பாதிப்பு இங்கும் நீளும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனையொட்டி கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கென்று ஏற்கனவே உள்ள வழிகாட்டி நெறிமுறைகளோடு, கூடுதலாக சில நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கேரளாவில் இருந்து ரயில் மூலமாக வருபவர்களுக்கு ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்