[X] Close

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்: திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழிசை சவுந்தரராஜன் உரை

இந்தியா

For-the-first-time-in-the-history-of-the-Puducherry-Assembly-Tamilisai-Saundarajan-addressed-in-Tamil
புதுச்சேரி பேரவை வரலாற்றில் முதல்முறையாக தமிழில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அரசால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களை பட்டியலிடும்போது திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
 
புதுச்சேரி மாநிலத்தில் 15வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதற்காக புதுச்சேரி பேரவைக்கு வந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு காவல்துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சபாநாயகர் செல்வம் பூங்கொத்து கொடுத்து தமிழிசையை பேரவைக்குள் அழைத்து சென்றார்.
 
image
"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்ற திருக்குறள் உரையுடன் புதுச்சேரி பேரவை வரலாற்றில் முதல்முறையாக தமிழில் உரையை தொடங்கினார் தமிழிசை சவுந்தரராஜன். அரசின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்ட அவர், 13 முறை திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். மேலும் அரசின் சாதனைகளை ஒவ்வொன்றாக பட்டியலிடும் போதும் உறுப்பினர்கள் பாராட்டலாம் என அவர் கூற, உறுப்பினர்கள் மேஜையை தட்டி பாராட்டு தெரிவித்தார்கள்.
 
ஆளுநர் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
 
* புதுச்சேரி சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்திட அரசு இயந்திரத்துக்கு ஒத்துழைப்பு அளித்த புதுச்சேரி மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் எனது பாராட்டுக்கள்.
 
* புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கு முன்னர் ரங்கசாமி தலைமையில் இயங்கிய அரசு செயல்படுத்திய மக்கள் நல கொள்கைகளும், திட்டங்களும் மக்களை சென்று அடைந்து உள்ளன என்பது நிரூபணமாகியுள்ளது. இந்த புதிய அரசு, ஆட்சிப் பரப்பின் வளர்ச்சி மற்றும் மாநிலத்தின் அமைதி ஆகியவற்றில் சிறந்து விளங்க பாடுபடும் என்று நம்புகிறேன்.
 
* 2020-21 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்காண மொத்த ஒதுக்கீடு ரூபாய் 9,000 கோடியில் அரசு 8,342 கோடி செலவு செய்துள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 93 விழுக்காடு ஆகும். கொரோனா கால்த்தில் கணிசமான வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
 
* இலவச அரிசித் திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் ரூ.235 கோடி செலவு செய்யப்பட்டு சுமார் 3.44 லட்சம் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைத்தாரர்கள் பயனடைந்துள்ளனர்.
 
* புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் இருப்பதால் தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. காவல் துறையை பலப்படுத்தும் விதமாக புதிய காவலர்களை தேர்வு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரி துறைமுக முகத்துவாரத்தை ரூ.33 கோடி செலவில் தூர்வாரும் பணிக்கு ஆணை வழங்கப்படுள்ளது.
 
image
* கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 50 ஆயிரத்து 838 மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அதில் பெருமளவு வெற்றி பெற்றுள்ளது. புதுச்சேரி மக்கள் மற்றும் அரசு இயந்திரத்தின் ஒத்துழைப்புடன் புதுச்சேரி மாநிலம் விரைவில் கொரோனா பரவலில் இருந்து விடுபடும்.
 
* நோயின்மை, செல்வம், விளைவு, மகிழ்ச்சி, காவல் என்ற ஐந்தினையும் பெறுவது மாநிலத்திற்கு அழகு என்ற வகையில் "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ்வைந்து" என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி வாசித்து 75 நிமிட உரையை தமிழிசை சவுந்தரராஜன் நிறைவு செய்தார்.
 
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் துணை சபாநாயகர் தேர்தலில் போட்டியின்றி தேர்வான நெட்டப்பாக்கம் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜவேலு துணை சபாநாயகராக தேர்வானதாக பேரவை தலைவர் செல்வம் அதிகாரப்பூர்வ அறிவித்தார். இதனைத்தொடர்ந்து ராஜவேலுக்கு முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

Advertisement

Advertisement
[X] Close