Published : 24,Aug 2021 09:30 PM
ஓயாத சித்ரவதை... ஆப்கனில் தலிபான்களைக் கண்டு அஞ்சும் ஹசாராக்கள் யார்?!

ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள தலிபான்களால் கடும் அச்சத்தில் இருக்கின்றனர், அந்நாட்டின் சிறுபான்மை சமூகத்தினரான ஹசாராக்கள். அவர்கள் யார், அவர்கள் ஏன் தலிபான்களை கண்டு பயப்படுகிறார்கள் என்பது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
சர்வதேச நாடுகள் மத்தியில் தலிபான்கள் குறித்த பேச்சுகள் அதிகம். இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களால் அச்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர், ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரான ஹசாராக்கள். கடந்த காலங்களில் தலிபான்களால் அதிகமான சித்ரவதைகளை எதிர்கொண்டவர்கள் ஹசாரா மக்கள். ஐக்கிய நாடுகள் சபை 2018 வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய பெரும்பான்மையான தாக்குதல்கள், சிறுபான்மை மக்களை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன; அதிலும் குறிப்பாக ஹசாரா இன மக்களையே அதிகமாக தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
ஆப்கன் நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த ஒன்பது ஆண்களை கொலை செய்துள்ளனர் தலிபான்கள் என்கிறது மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட சமீபத்திய அறிக்கை.
ஹசாராக்கள் யார்?
13-ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த மங்கோலிய சாம்ராஜ்ஜியத்தை தலைவர் செங்கிஸ் கான் மற்றும் அவரின் ராணுவ படையின் சந்ததியினரே இந்த ஹசாரா இன மக்கள். மத்திய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியான 'ஹஜாரிஸ்தான்' பகுதியில் இந்த இன மக்கள் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர். தற்போதைய ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த மக்கள் 12 சதவிகிதம் அளவே இவர்கள் இருக்கிறார்கள். முன்பு, பெரிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் பல்வேறு அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு, இந்த நிலைக்கு வந்துள்ளனர். பாரசீக மொழியான ஹசராகி என்ற டாரியின் பேச்சு வழக்கில் பேசுவதால் ஹசாராக்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி தெரிகிறார்கள்.
ஹசாராக்கள் சித்ரவதை செய்யப்படுவது ஏன்?
ஆப்கானிய இஸ்லாமியர்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் சன்னி இஸ்லாமியர்கள். ஆனால், ஹசாராக்களோ ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இதுவே மோதலுக்கான முதல் புள்ளி. என்றாலும் தலிபான்கள் மட்டும் ஹசாராக்களை துன்புறுத்தவில்லை. 1880 காலகட்டத்தில் இருந்தே இவர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டுவருகிறார்கள்.
இந்த காலகட்டங்களில் ஹசாராக்கள் அதிகம் வாழ்ந்து வந்த மத்திய ஆப்கானிஸ்தான் பகுதிக்கு பஷ்துன் அரசர் அமிர் அப்துல் ரஹ்மான் படையெடுத்து, கண்ணில் கண்ட ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொலை செய்ய தனது படைக்கு உத்தரவிட்டார். இந்தப் படையெடுப்பு ஹசாரா இன மக்கள் கண்ட மோசமான படையெடுப்பாக அமைந்தது. ஏனென்றால், இதில் அந்த இன மக்கள் தொகையில் பாதி பேர் உயிரை இழந்த நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டனர். பலர் அடிமைகளாக வெளிநாடுகளில் விற்கப்பட்டனர்.
அமிர் அப்துல் ரஹ்மான் படையெடுப்புக்கு பின் தலிபான்களால் இன்றுவரை மோசமான சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றனர். 1990 காலகட்டத்தில் அந்நாட்டு உள்நாட்டு போரில் கை ஓங்கியிருந்த தலிபான்கள், தங்களின் முக்கியக் குறியாக ஹசராக்களைத் தாக்கினர். அந்த இனத்தைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமானோரை படுகொலை செய்தனர். அப்போது தலிபான் தளபதியாக இருந்த மௌலாவி முகமது ஹனிஃப், `ஹசாராக்கள் இஸ்லாமியர்களே அல்ல' என்ற கூறியதாகவும் அறியப்படுகிறது. 1996-ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு ஹசாராக்கள் போன்ற சிறுபான்மை இனங்கள் மற்றும் அந்த இனத்தின் பெண்கள் கடுமையான சித்ரவதைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, 1998-ல் ஆயிரக்கணக்கான ஹசாராக்களை மசர்-ஐ-ஷரிஃப் நகரில் தூக்கிலிட்டனர்.
ஹசராக்கள் மீது தலிபான்கள் இவ்வளவு வெறுப்பை உமிழக் காரணம், அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால்தான் எனக் கூறப்படுகிறது. ஹசராக்களை தலிபான்கள் `விசுவாசமற்றவர்கள்' என்று கருதுவது உண்டு. ஆனால் ஹசராக்கள் தரப்பில் கூறப்படுவது, 'ஹசரா இனம் மதத்தை முன்னிறுத்தி செய்யப்படும் பழமைவாத கருத்துக்களுக்கு எதிரானது' என்பதாகும். ஆனால் தலிபான்கள் பழமைவாத கருத்துக்களைக் கொண்டவர்கள். ஹசாரா இனத்தைச் சேர்ந்த ஆப்கன் எம்.பி ஒருவர் ஒருமுறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில், "ஹசாரா இன மக்களின் ஜனநாயக ஆதரவு, தலிபான்கள் பின்பற்றும் பழமைவாதத்துக்கு எதிராக இருப்பதால் அவர்கள் எங்களை அழிக்க நினைக்கிறார்கள்" என்றார்.
ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் 2004, ஹசாராக்களுக்கு சம உரிமைகளை வழங்கியுள்ளது. முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தனது அமைச்சரவையில் ஹசாரா இனத்துக்கு பிரதிநிதித்துவம் கொடுத்துவந்தார். ஆனால் இவையெல்லாம் முன்பு நிகழ்ந்தவை. தலிபான்கள் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது சிறுபான்மை இனமான ஹசராக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. அதற்கேற்ப தலிபான்கள் இன்னும் அரசை அமைக்கும் முன்பாகவே ஹசராக்களை பயமுறுத்தும் சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சில நாள்களுக்கு முன் மத்திய பாமியன் மாகாணத்தில் ஹசாரா அரசியல் தலைவர் அப்துல் அலி மஜாரியின் சிலையை தலிபான்கள் தகர்த்தனர். இதேபோல் சாஹர்ஹிந்த் மாவட்ட கவர்னராக பதவி வகித்த ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த சலிமா மஸாரியை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளனர். இதுபோன்ற தகவல்கள் அவர்களை தலிபான்கள் மீதான பழைய பயத்தை மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், தலிபான் செய்தி தொடர்பாளார் சுஹைல் ஷஹீனோ, "ஷியா பிரிவு இஸ்லாமியர்களுக்கு எதிராக தலிபான் அரசு எந்த பாகுபாடும் பார்க்காது. ஷியா பிரிவினரும் ஆப்கானியர்கள் தான். அவர்களாலும் இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும். அவர்களிலும் ஆப்கானின் மறுசீரமைப்பு, வளர்ச்சி மற்றும் செழிமைக்கு பங்காற்ற முடியும்" என்று சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மலையரசு