[X] Close

"அறைந்திருப்பேன்!" - உத்தவ் பற்றி மத்திய அமைச்சர் நாராயண் ரானே பேசியதும், கைது பின்னணியும்

சிறப்புக் களம்

Union-minister-Narayan-Rane-was-arrested-by-Ratnagiri-Police

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய இணை அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டு இருப்பது, அம்மாநில அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியிருக்கிறது. இதன் பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.


Advertisement

புதிதாக பதவியேற்றுக்கொண்ட பாஜகவின் மத்திய அமைச்சர்கள் 'ஜன் ஆசீர்வாத யாத்திரை' என்ற பெயரில் நாடு முழுவதும் பேரணி நடத்தி வருகின்றனர். நேற்று இரவு மகாராஷ்டிராவின் ரத்னகிரி பகுதியிலுள்ள சிப்லூனில் நடந்த பேரணியில் மத்திய இணை அமைச்சர் நாராயண் ரானே கலந்துகொண்டார். இந்தப் பேரணியில் அவர் பேசியது, சிவசேனா - பாஜக இடையேயான மோதலை மேலும் அதிகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

அந்தப் பேரணியில், "சுதந்திரம் பெற்ற ஆண்டு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு தெரியாதது வெட்கக்கேடானது. நாடு சுதந்திரமடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதைகூட மகாராஷ்டிர முதல்வர் தனது உதவியாளரிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். நான் மட்டும், அப்போது அந்த இடத்தில் இருந்திருந்தால் அவரை அறைந்திருப்பேன்" என்று பேசினார்.


Advertisement

இந்தப் பேச்சு சர்ச்சைக்குள்ளானது. சிவசேனா தொண்டர்கள் கடும் எதிர்ப்புகளை இன்று காலை முதலே அமைச்சர் நாராயண் ரானேவுக்கு எதிராக பதிவு செய்து வருகின்றனர். மும்பையில் உள்ள நாராயண் ரானேவின் வீட்டை நோக்கிச் சென்ற சிவசேனா தொண்டர்கள், கட்சி கொடிகளை ஏந்திகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

பதிலுக்கு, பாஜக தொண்டர்களும் கோஷங்கள் எழுப்ப, அங்கே மோதல் வெடித்தது. இரு தரப்பும் கற்களை வீசிக்கொண்டு தாக்கத் தொடங்கினர். நிலைமை மீறுவதை உணர்ந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் அப்புறபடுத்தி வருகின்றனர். என்றாலும், சிவசேனா தொண்டர்கள் விடவில்லை. அமைச்சர் ரானே வீட்டுக்கு முன் உள்ள சாலையில் அமர்ந்து போக்குவரத்தைத் தடுத்தனர். நாக்பூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சிவசேனாவின் இளைஞர் பிரிவான யுவ சேனா ஒருபடி மேலேச் சென்று ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் அமைச்சர் ரானே நடத்தி வந்த கோழிப்பண்ணை தொழிலை குறிப்பிட்டு மாநிலம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சிவசேனா எம்.பி விநாயக் ராவத், "பிஜேபி தலைமையைக் கவர, சிவசேனா மற்றும் அதன் தலைவர்களை ரானே தாக்கி வருகிறார்" என்று கூறியிருக்கிறார். இதனிடையே, சிவசேனா தொண்டர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் ரானே மீது நாசிக் காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளது.


Advertisement

அமைச்சரின் கைதை உறுதிப்படுத்தியுள்ள நாசிக் போலீஸ் அதிகாரி தீபக் பாண்டே, ``இந்த வழக்கில் மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாராயண் ரானே ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் கைது செய்யப்பட்ட பிறகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும், கைது நடவடிக்கையின்போது, மத்திய அமைச்சர் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் காவல்துறை பின்பற்றும்" என்று கூறியிருக்கிறார்.

கைது பற்றிய தகவல்கள் ஊடகங்களில் வெளியானதும், பேசிய நாராயண் ரானே, ``நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. எனது கைது குறித்த விவகாரத்தை சரிபார்த்து டிவியில் காட்ட வேண்டும், இல்லையெனில் ஊடகங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வேன். எந்த குற்றமும் செய்யாத போதிலும், ஊடகங்கள் எனது 'உடனடி' கைது பற்றி ஊக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. நான் ஒரு சாதாரண மனிதன் என்று ஊடகங்கள் நினைக்கிறதா?" என்று பேசினார்.

image

யார் இந்த நாராயண் ரானே?

இன்று பாஜக சார்பாக மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் நாராயண் ரானே, தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனாவில் இருந்து தொடங்கியவர் என்பது வியப்புக்குரிய செய்தி. சிவசேனா முதல்வரை எதிர்த்து பேசியிருக்கும் இதே நாராயண் ரானே, அதே சிவசேனா முதல்வராக ஒரு காலத்தில் பதவியும் வகித்துள்ளார். பால் தாக்கரே தலைமையில் சிவசேனா இயங்கியபோது, அவரால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்த ரானே, 1990 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் சிவசேனா சார்பில் வெற்றிபெற்று முதல்முறை எம்எல்ஏ ஆனார்.

பின்னர் 1999-ல் மனோகர் ஜோஷி மகாராஷ்டிராவின் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியபோது முதல்வராக சிவசேனா சார்பில் அரியணை ஏறினார். ஆனால் இவரின் முதல்வர் பதவிக்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. சிவசேனா - பிஜேபி கூட்டணி 1999-ம் ஆண்டு இறுதியில் மாநிலத் தேர்தலில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவியை இழந்தார். இதன்பின் சில ஆண்டுகள் சிவசேனாவில் தொடர்ந்தவர், உத்தவ் தாக்கரேவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் மாநில அமைச்சராக பதவி வகித்தார்.

2017-ல் காங்கிரஸில் இருந்தும் விலகிய ரானே தனது இரண்டு மகன்களுடன் இணைந்து புதிய கட்சியைத் தொடங்கினார். விரைவாகவே அந்தக் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு தற்போது அக்கட்சி சார்பில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.


Advertisement

Advertisement
[X] Close