[X] Close

நிதிஷின் முக்கிய 'மூவ்'- சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையும், பாஜகவின் 'இக்கட்டான' நிலையும்

சிறப்புக் களம்

Bihar-BJP-divided-beacause-of-caste-based-census-issue

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பீகார் மாநில பாஜக இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிறது. இதனால், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதரித்து பிரதமர் மோடியை சந்திக்கும் குழுவில் இடம்பெற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது அம்மாநில பாஜக. இந்த விவகாரத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் 'மூவ்' உள்ளிட்ட பின்புலத்தைப் பார்ப்போம்.


Advertisement

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எப்போதும் இந்தியாவில் விவாதத்துக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் முன்னெடுப்பால் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு இந்திய அளவில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. நாட்டில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கும் நிலையில், இந்த முறை மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி, கோரிக்கைகள் பல எழுப்பப்பட்டு வருகின்றன.

image


Advertisement

இந்தக் கோரிக்கையின் முகமாக பா.ஜ.க. கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் 11 கட்சிகளுடன் இணைந்து இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க, இந்தச் சந்திப்பில் பிரதமர் மோடியை வலியுறுத்தியது அனைத்து கட்சிக் குழு. இதற்கிடையே, இந்தச் சந்திப்புக்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை முன்வைத்து பாஜகவிற்குள் முரண்பாடுகள் எழுந்துள்ளன.

மத்திய அரசை பொறுத்தவரை, மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிட மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டது. மத்திய பாஜக தலைவர்களின் பெரும்பாலனோர் நிலைப்பாடு இதுவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

இப்படி, பல பாஜக தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருந்தாலும், அக்கட்சியின் ஓபிசி தலைவர்கள் சிலர் ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர். பீகார் பாஜக அமைச்சர் ராம் சூரத் ராய் என்பவர், கட்சியின் நிலைப்பாட்டை மீறி, "சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு பற்றிய சட்டம் இரண்டும் அவசியம். அதைச் செயல்படுத்தும் திறன் மத்திய அரசிடமே உள்ளது. எனவே அதனை செய்யக் கோரி, இந்த விவகாரத்தில் முதல்வர் நிதிஷ் குமாரும் பிரதமர் மோடியும் சந்திப்பது நல்லது" என்று ஆதரித்து பேசியிருந்தார்.


Advertisement

அதேநேரம், பாஜக எம்.பி. ராம் கிருபால் யாதவ் என்பவர், "ஓபிசி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மற்றவர்களை விட பாஜக முன்னிலையில் உள்ளது. எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம்" என்று தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

image

பாஜகவின் இக்கட்டான நிலை: சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக கடந்த வாரமே தெரிவித்திருந்தார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். இதற்கு அம்மாநில பாஜக தலைவர்கள் ஆதரவு தெரிவித்து, அக்கட்சி சார்பில் பீகார் அமைச்சர் ஜனக் ராம் பிரதமர் மோடி - நிதிஷ் சந்திப்பில் இடம்பெற்றிருந்தார். அமைச்சர் ஜனக் ராம் இந்த குழுவில் இணைக்கப்பட்ட பின்னணியில் பாஜகவின் இக்கட்டான நிலை உள்ளது.

கூட்டணி கட்சிகள் அனைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் நிலையில், அதனை நிராகரிக்கும் விதமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிட மாட்டோம் என்று அறிவித்தது பாஜக. ஆனால், இதே பாஜக 2008-ஆம் ஆண்டில் பீகார் அரசு சட்டசபையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து தீர்மானம் நிறையவேற்றியபோது ஆதரவு தெரிவித்தது. ஆனால் இப்போது எதிர்ப்பு மனநிலையில் உள்ளது.

மேலும், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக ஆதரிக்க காரணம், அங்கு பாஜகவுக்கு இருக்கும் ஓபிசி மக்களின் ஆதரவு. 1990 வரை பீகாரில் பாஜக என்பது ஒரு நகர்ப்புற கட்சியாகவே பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், 1998-ல், லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக காங்கிரஸ் வந்த பிறகு, பீகாரின் உயர் சாதியினர் காங்கிரஸிலிருந்து பாஜக பக்கம் மாறினர். பின்னர் கட்சி தலைமையில் மெதுமெதுவாக சுஷில் குமார் மோடி மற்றும் நந்த் கிஷோர் யாதவ் போன்ற ஓபிசி தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு உயர் சாதி மக்கள் மத்தியில் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

image

இதன் பின்னான தேர்தல்களில் பாஜகவுக்கு விழும் வாக்குகளில் பெரும்பாலும் உயர் சாதி மக்கள் வாக்குகள்தான் அதிகமாக இருந்தன. இந்த வாக்கு வங்கி காரணமாக தற்போது ஐக்கிய ஜனதா தளம் உடனான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள பாஜக, ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களுக்கே பெரும்பாலும் நிறைய அமைச்சர் பதவிகளை கொடுத்துள்ளது. இந்தநிலையில்தான் மத்திய பாஜக தலைமை ஓபிசி சாதிகளின் கணக்கெடுப்பை நடத்த முடியாது என அறிவிக்க, அதனை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்தார் நிதிஷ் குமார்.

தங்கள் கட்சியின் வாக்கு வங்கிகளாக இருந்த ஓபிசி மக்களின் வாக்கு வங்கியை மீண்டும் பலப்படுத்தும் பொருட்டு, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என போர்க்கொடி தூக்க ஆரம்பித்தார் நிதிஷ். இவருக்கு ஆதரவாக பீகாரின் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரள, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரிக்கை, பாஜகவை இக்கட்டான நிலைக்கு தள்ளியது. இதனால் வேறு வழியில்லாமல் பீகார் மாநில பாஜக தலைமை அரை மனதுடன், மத்திய தலைமையின் நிலைப்பாட்டை மீறி அமைச்சர் ஜனக் ராமை நிதிஷ் குமார் குழுவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு கோரி பிரதமரை சந்திக்க அனுப்பியது.

தகவல் உறுதுணை: The Print


Advertisement

Advertisement
[X] Close